பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு படம் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியானது. படத்தில் விஜய்யை தவிர வேறு எந்த ப்ளஸும் இல்லை என விஜய் ரசிகர்களே விரக்தியில் பேசியிருந்த பல வீடியோக்கள் கடந்த நான்கு நாட்களாக சமூக வலைதளங்களில் கொடிகட்டி பறந்துக் கொண்டிருக்கிறது. தெலுங்கு படம் போலவே வாரிசு இருப்பதாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.

வழக்கமாக கலவையான விமர்சனங்களை பெறும் படங்களுக்கு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என சிலாகிப்பதுண்டு. ஆனால் விஜய்யின் வாரிசு படம் குடும்பங்களை மையப்படுத்திய கமர்சியல் களமாகவே இருப்பதால் இது உண்மையிலேயே குடும்பங்கள் கொண்டாடும் படம் என்றும் மறுபுறம் ஹேஷ்டேக்கள் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் வாரிசு படத்தின் வசூல் குறைவில்லாமல் வந்துகொண்டிருப்பதாகவே கூறப்படுகிறது. முதல் நாள் வசூலில் துணிவு படம் சற்றே முந்தி இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் வாரிசு படத்தின் வசூல் பட்டையை கிளப்புவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. 


தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வாரிசு/வாரசுடு என்ற பெயரில் உருவானாலும் ஆந்திரா, தெலங்கானாவில் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா, பாலையாவின் வீர சிம்ம ரெட்டி ஆகிய படங்கள் வெளியாவதால் வாரசுடு வெளியீடு அங்கு தள்ளிப்போனது. ஆகையால் 14ம் தேதியான இன்று அங்கு விஜய்யின் வாரசுடு ரிலீசாகியிருக்கிறது.

தமிழில் வாரிசு வந்த போது கலவையான விமர்சனங்களே பெற்றிருந்த நிலையில், தெலுங்கு ஆடியன்ஸுக்கு வாரசுடு ரொம்பவே பிடித்திருக்கிறது என அவர்கள் கொடுக்கும் ரிவ்யூ மூலமே அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக 5க்கு 4.5 என்றேல்லாம் ரேட்டிங் கொடுத்து அசர வைத்திருக்கிறார்கள் தெலுங்கு ரசிகர்கள். மகேஷ்பாபு படங்களுக்கு கிடைக்கும் ஓபனிங் வரவேற்பை போன்று விஜய்யின் வாரசுடு படத்துக்கு கிடைத்திருப்பதாகவும் பதிவிட்டிருக்கிறார்கள்.



தியேட்டர்களில் விஜய்யின் இன்ட்ரோ சீன் முதல் படத்தின் முக்கியமான காட்சிகளின் போது விசில்களை பறக்கவிட்டு பேப்பர் துண்டுகளை மழை போல பொழிந்து ஆரவாரம் செய்து வருகிறார்கள். இதனால் அடுத்த காட்சியின் போது ரசிகர்களை காக்க வைத்து தியேட்டரை சுத்தம் செய்த பிறகு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது உண்மையிலேயே வாரிசு படம் தெலுங்கு ரசிகர்களுக்காவே எடுக்கப்பட்டதுதானா என்ற கேள்வியையே சினிமா ரசிகர்கள் முன்வைத்திருக்கிறார்கள். ஏனெனில் வாரிசு படம் முழுக்க முழுக்க நேரடி தமிழ் படம்தான் என இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி அழுத்தம் திருத்தமாக கூறியிருந்ததால் பெருமளவிலான எதிர்பார்ப்புக்கு ஆளாகி கடைசியில் அதிருப்தியில் தியேட்டரை விட்டு வெளியே வந்ததுதான் மிச்சம் என்ற அளவுக்கு வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்கள்.



தெலுங்கில் மசாலா பாணியிலான படங்கள் ஒன்றிரண்டு வந்தாலும் அங்குள்ள படைப்பாளர்களே தற்போதெல்லாம் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து படங்களை எடுத்து ரசிகர்களின் மனதை வென்று வருகிறார்கள். இப்படி இருக்கையில் சங்கராந்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிரஞ்சீவி, பாலையாவின் படங்களை காட்டிலும் விஜய்யின் வாரசுடு படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இத்தனை ஆண்டுகளாக விஜய்யை கொண்டாடி தீர்த்த தமிழ் ரசிகர்களே வாரிசு படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றே தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் தெலுங்கு ரசிகர்களோ விஜய்க்கு காலம் காலமாக ரசிகராக இருப்பது போல தமிழ் ரசிகர்களையே ஓவர்டேக் செய்து வருகிறார்கள். ரசிகர்களை தாண்டி ஜென்ரல் ஆடியன்ஸ்க்கு படம் பிடித்துவிட்டால் அடுத்தடுத்த நாட்களில் வாரசுடுவின் ஆட்டத்தை நிச்சயம் தடுத்து நிறுத்த முடியாது. ஒருவேளை தெலுங்கில் நல்ல வசூலை குவித்தால் ஒட்டுமொத்தமாக துணிவை தாண்டி வாரிசு படத்தின் வசூல் எங்கேயோ சென்றுவிட வாய்ப்புள்ளது. 



Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.