பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று ஒரேநாளில் அஜித் மற்றும் விஜய் படங்கள் வெளியான நிலையில், தனது முந்தையப் படங்களின் ஓப்பனிங் வசூலை இரு நடிகர்களுமே முறியடிக்கவில்லை. இதுகுறித்து இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.

வலிமை Vs துணிவு:

‘நேர்கொண்டப் பார்வை’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் எச். வினோத் மற்றும் அஜித் இரண்டாவது முறையாக இணைந்திருந்தப் படம்தான் ‘வலிமை’. வேறு நடிகர்களின் போட்டியின்றி சோலாவாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்தது. இதனை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.

தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ‘வலிமை’ படம் ரூ. 36.17 கோடி வசூலித்தது. இதன்மூலம் 2022-ம் ஆண்டில் வெளியானப் படங்களில் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டியப் படம் என்ற பெருமையை ‘வலிமை’ தக்க வைத்துக்கொண்டது. மேலும் தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸில், முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் படங்களில் ‘வலிமை’ தான் முதலிடத்தில் (All Time At Tamil Nadu Box Office) உள்ளது.

image

இந்தப் படம் முதல்நாளில் இவ்வளவு வசூலை அள்ளியதற்கு காரணம், இயக்குநர் எச் வினோத் இதற்கு முன்னதாக இயக்கிய ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’ ஆகிய 3 படங்களுமே வெவ்வேறு ஜானரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதும், சுமார் ஒன்றரை வருட இடைவெளிக்குப் பின் அஜித் படம் வெளியாகிறது என்ற எதிர்பார்ப்பும்தான் இந்தப் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. மேலும் தனியாக அதிக ஸ்கிரீன்களில் இந்தப் படம் வெளியானதும் அதிக வசூல் கிடைத்தற்கு காரணமாக கூறலாம்.

ஆனால் இந்த ரெக்கார்டை தற்போது வெளியான ‘துணிவு’ படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நாள் நிலவரத்தின்படி ரூ. 21.2 கோடி மட்டுமே வசூலித்து, தனது சொந்த ரெக்கார்டை அஜித் படம் முறியடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது என்னவெனில், விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கும் ஓரளவுக்கு சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதே. 

image

எனினும் ‘வலிமை’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், ‘துணிவு’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், ஒட்டுமொத்த வசூலில் ‘வலிமை’ படத்தை முந்துமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில், நேற்று ஒரேநாளில் உலக அளவில் ரூ. 39.01 கோடி வசூலித்துள்ளது. இன்றும் திரையரங்கு நிறைந்தே காணப்படுவதுடன், 5, 6 நாட்கள் பொங்கல் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் Vs வாரிசு :

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதல்முறையாக விஜய் நடித்து சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தப் படம் ‘பீஸ்ட்’. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி சோலாவாக வெளியான இந்தப் படம் ரூ. 230 கோடிக்கும் மேல் வசூலித்தது. தமிழ்நாட்டில் மட்டும் முதல்நாளில் ரூ. 31.4 கோடி வசூலித்தது.

2022-ம் ஆண்டில் வெளியானப் படங்களில் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டியப் படங்களில் ‘வலிமை’ படத்திற்குப் பிறகு ‘பீஸ்ட்’ படம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. மேலும் தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் படங்களில், ‘வலிமை’, ‘அண்ணாத்தே’, ‘2.0’, ‘சர்கார்’ ஆகியப் படங்களுக்குப் பிறகு ஐந்தாவது இடத்தை (All Time At Tamil Nadu Box Office) ‘பீஸ்ட்’ படம் பிடித்திருந்தது.

image

‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் நடித்திருந்ததும், ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ என இரண்டு தொடர் வெற்றிகளை இயக்குநர் நெல்சன் கொடுத்திருந்ததும், அனிருத்தின் இசையும் இந்தப் படத்தை ஹைப்பாக வைத்திருந்தது. அதனாலேயே இந்தப் படத்திற்கு முதல்நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. இதனால் தமிழ்நாட்டில் அதிக திரையரங்குகளில் இப்படம் வெளியான போதிலும், இந்தப் படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்கள் மற்றும் அதற்கு அடுத்த நாள் ஏப்ரல் 14-ம் தேதி கன்னட நடிகர் யஷ்ஷின் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எஃப். 2’ படத்துக்கு நல்ல வரவேற்பு ஆகியவை ‘பீஸ்ட்’ படத்தின் மாஸ்-ஐ சற்று குறைக்க ஆரம்பித்தது.

எனினும், ‘பீஸ்ட்’ படத்தின் முதல் நாள் சாதனையை ‘வாரிசு’ முறியடிக்குமா என்பதில் ஆரம்பத்திலிருந்தே சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது. ஏனெனில் தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்குவதாக கூறியது, விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் பாணியை விட்டுவிட்டு குடும்ப சென்டிமென்ட் படமாக உருவாகிறது என அவர் அறிவித்தது ஆகியவைகளால் இந்தப் படத்திற்கு துவக்கத்திலிருந்தே பெரிதாக எதிர்பார்ப்புகள் நிலவவில்லை.

image

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘தளபதி 67’ படத்திற்கே எதிர்பார்ப்புகள் நிலவி வந்ததும் காரணம். மேலும், அஜித்தின் ‘துணிவு’ படத்துக்கும், ‘வாரிசு’ படத்துக்கும் ஸ்கிரீன்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டதும் வசூல் பாதிக்க காரணம் என சொல்லப்படுகிறது. இருப்பினும், குடும்ப சென்டிமென்ட் நிறைந்த படம் என்பதால், அடுத்த 5, 6 நாட்கள் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டுப் படங்களுக்குமே ஸ்கீரின்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டதுதான் தனித்தனியாக வசூல் குறைய காரணம் என்றாலும், நேற்று வெளியான இந்த இரண்டுப் படங்களின் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு வசூல் மட்டும் 40 கோடி ரூபாய் தொட்டுள்ளது என்பது திரைத்துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.