விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகாமல் கால தாமதமானதால், வெகுநேரம் காத்திருந்த ரசிகர்கள் அரூர் முத்து திரையரங்கின் இரும்பு தடுப்பை உடைக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் அரூரில் இன்று அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படங்கள், இரண்டு திரையரங்குகளில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு மூன்று மணி அளவில் இருந்து காத்திருந்த ரசிகர் கூட்டம், இரண்டு திரையரங்குகளின் முன்பு அலைமோதியது. இந்நிலையில் விடியற்காலை 5 மணிக்கு சிறப்பு காட்சி வெளியிடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

‘துணிவு’ திரைப்படம் 6:30 மணி அளவில் வெளியிடப்பட்டது. ஆனால், விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் வெளியிடும் திரையரங்கில் நிர்வாகத்திற்கும், ரசிகர் மன்றத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காலை 7 மணிக்கு சிறப்பு காட்சி வெளியிடப்படுவதாக தெரிவித்துப் பின்பு, 07:20 மணிக்கு இந்த படம் திரையிடப்பட்டது. வெகு நேரம் காத்திருந்த ரசிகர்கள், டிக்கெட் வாங்குவதற்காக அலைமோதி முந்தியடித்து கொண்டனர்.

image

அப்போது ‘வாரிசு’ திரைப்படம் வெளியிட காலதாமதம் ஆனதால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்து நுழைவாயிலில் இருந்த இரும்பு தடுப்பை உடைக்க முயன்றனர். எனினும் காவல் துறையினரின் சுமூக பேச்சுவார்த்தையை அடுத்து திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. மேலும் வெகுநேரம் காத்திருந்த ரசிகர்கள் கொந்தளித்ததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே கும்பகோணத்தில் விஜய்யின் ‘வாரிசு’ படம் திரையிடும் வாசு தியேட்டர் முன்பு பட்டாசு வெடிக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது பட்டாசு வெடித்தது கீழே விழுந்து காயம். விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி கும்பகோணத்தில் உள்ள வாசு திரையரங்கில் திரையிடப்பட்டது. அவரது நூற்றுக்கணக்காண ரசிகர்கள், அதிகாலை 3 மணி முதலே, படம் வெளியாகும், திரையரங்கு உள்ள டாக்டர் அன்னிபெஸன்ட் சாலையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

image

சாலையில் பட்டாசு வெடிக்கும் போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீது பட்டாசு வெடித்ததில், கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டது மயக்கம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவள்ளுவர் சாலையில் உள்ள திரையரங்கில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு ‘துணிவு’ படமும், அதிகாலை 4 மணிக்கு ‘வாரிசு’ படமும் ரசிகர்கள் சிறப்புக் காட்சிகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஆன்லைன் புக்கிங் விற்றுத் தீர்ந்தது. இதனால் நள்ளிரவு ரசிகர்கள் தியேட்டர் முன்பு குவிந்தனர்.

image

அப்போது ரசிகர்கள் இடையே விசில் சத்தமும், கூச்சல் குழப்பமும் ஏற்பட்டதால் பதட்டம் நிலவியது. இதனால் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் திரையரங்கிற்கு விரைந்து சென்ற போது ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே போலீசார் கூட்டத்தை கலைக்க முயன்றபோது ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். கோமதி நகர் திருவள்ளுவர் நகர், திருவுடையான்சாலை வழியாக கூச்சலிட்டுக் கொண்டே ஓடிய ரசிகர்கள் வீடுகளின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்களை தள்ளிவிட்டு சென்றனர்.

இதனால் அப்பகுதி மக்கள் பதட்டமாகி எழுந்து வெளியே வந்த போது மீண்டும் அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டு அங்கிருந்து ஓடினர். தொடர்ந்து பதட்டம் நிலவியதால் நள்ளிரவு நடைபெறவிருந்த 2 காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை காட்சிக்காக ரசிகர்கள் வந்த போது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ரசிகர்கள் தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ‘வாரிசு’ திரைப்படமும், ‘துணிவு’ திரைப்படம் ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.