ஒரு வங்கியில் நடக்கும் கொள்ளையை நிகழ்த்துவது யார், அந்த கொள்ளை எதற்காக நிகழ்த்தப்படுகிறது போன்ற கேள்விகளுடன் வெளியாகியிருக்கிறது துணிவு.

சென்னையின் பிரதானமான தனியார் வங்கி, யுவர் பேங்க். அங்கு கணக்கில் காட்டப்படாமல் பதுக்கப்பட்டிருக்கும் 500 கோடியை கொள்ளையடிக்க திட்டமிடுகிறது ஒரு கும்பல். இந்தக் கடத்தலை நடத்தத் துவங்கும் போது, என்ட்ரி ஆகிறார் அஜித். தானும் இங்கு கொள்ளையடிக்கத்தான் வந்திருப்பதாகச் சொல்லி அவரும் கொள்ளை கோதாவில் இறங்குகிறார்.

image

இரு கும்பல் வெர்சஸ் காவல்துறை வெர்சஸ் வங்கி நிர்வாகம் என ஆரம்பிக்கும் கதை மெல்ல மெல்ல திசைமாறி விஸ்வரூபமெடுக்க ஆரம்பிக்கிறது. அஜித்தின் பின் கதை என்ன, காவல்துறை உண்மையிலேயே உங்கள் நண்பனா, வங்கியில் நமக்கே நமக்கென வழங்கப்படும் ஆஃபர்களில் எதெல்லாம் ஆப்புகள் என பல்வேறு கிளைக்கதைகளுடன் மின்னல்வேகத்தில் பயணிக்கும் கதையை பரபர த்ரில்லர் ஆக்‌ஷனாக்கியிருக்கிறார் இயக்குநர் எச்.வினோத்.

image

எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது அஜித்தை இவ்வளவு எனெர்ஜியுடன் பார்த்து! மனிதர் அவ்வளவு ஜாலியாய் நடித்திருக்கிறார். மங்காத்தா சால்ட் & பெப்பர் லுக் என்றால், துணிவோ சால்ட் மட்டும் தான். அஜித்திற்கு கிட்டத்தட்ட படத்தில் பெயரே இல்லை. அவர் யார் என்பதை காவல்துறை கண்டறிய முற்படும்போதெல்லாம் ஜாலி டான்ஸ் தான். மங்காத்தா வில்லன் ஸ்டைல் சிரிப்பு; நக்கல் வசனங்கள்; படு ஸ்டைலான லுக் என ஆளே மொத்தமாய் மாறியிருக்கிறார்.

image

படத்தின் சர்ப்பரைஸ் என்ட்ரி மைப்பா கதாபாத்திரத்தில் வரும் பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம். ‘1000 ரூபாய் பெஸ்ட் எம்பிளாயி’ பட்டத்துக்கு வேலை பார்க்காமல் சாமர்த்தியமாய் காய் நகர்த்தும் பத்திரிகையாளர். நேர்மையான கமிஷ்னராக சமுத்திரகனி , வங்கி மேனேஜராக GM சுந்தர் , வங்கி சேர்மேனாக ஜான் கொக்கேன், அஜித்தின் கண்மணியாக மஞ்சு வாரியர் என படம் நெடுகிலும் நல்ல நல்ல தேர்ந்த நடிகர்களைப் போட்டு வேலை வாங்கியிருக்கிறார்கள். அஜித்திடம் காவல்துறையின் ஒன் பாயின்ட் கான்டாக்ட்டாக வரும் மகாநதி சங்கர், பால சரவணன் என சின்ன சின்ன கதாபாத்திரங்களின் காமெடிகள் கூட படத்தில் செம்மயாக ஒர்கவுட் ஆகியிருக்கின்றன.

 image

ஆக்ஷன் த்ரில்லர், மணி ஹெய்ஸ்ட் பாணி கதை அதனூடே ஒரு சோஷியல் மெசேஜ் என பக்காவான ரூட் பிடித்திருக்கிறார் எச். வினோத். ஏமாற்றுவதில் இருக்கும் சுவார்ஸயத்தை நமக்குச் சதுரங்கவேட்டையில் சொல்லிக்கொடுத்த வினோத், இந்தமுறை ஏமாற்றத்தால் நிகழும் சோகம் குறித்தும், அது தரும் வலி குறித்தும் பாடம் எடுத்திருக்கிறார்.

“ஏன்பா இவ்வளவு சுயநலமா யோசிக்கற?” 

“சுயநலமா யோசிச்சதாலதான் மனுஷனே உருவானான்”

மாதிரியான வசனங்கள் அருமை.

லோன், ம்யூச்சுவல் ஃபண்ட், கிரெடிட் கார்டு போன்றவற்றிற்கு நாம் எதைப் பற்றியும் படித்துப் பார்க்காமல் கையெழுத்து போடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதைச் சொல்லும் விதம் அழகு. அதே பாணியில் ஏமாற்றும் வங்கி சேர்மேனை டீல் செய்வது இன்னும் அருமை. அதே சமயம், டெக்னாலஜி வளர வளர இதுமாதிரியான புதிய சேமிப்புத் திட்டங்களும் உருவாவது காலத்தின் கட்டாயம். எல்லாவற்றின் சாதக பாதகங்களை அலசி ஆராய வேண்டுமே ஒழிய வெறுமனே ஆபத்தானது என புறந்தள்ளிவிடுவதும் ஆபத்தானதுதான். கதாநாயகன், கதாநாயகியை யார் சுட்டாலும் ஒன்றும் ஆகாது என்றாலும் அதற்காக எத்தனை புல்லட்கள் பாஸ் என நம்மை ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

image

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும்பலம். ஒரே செட்டுக்குள் நடக்கும் கதைக்களம். அதை செட் என தெரியாத அளவுக்கு பார்த்துக்கொண்டதில் இருக்கிறது கலை வடிவமைப்பாளர் மிலனின் வெற்றி. 360 கோணத்தில் சுற்றி சுற்றி நடக்கும் சண்டைக் காட்சியை படமாக்கிய விதத்தில் சுப்ரீம் சுந்தர், நீரவ் ஷா, படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி மூவருமே பாராட்டுக்குரியவர்கள்.

பாடல்களே தேவையில்லாத ஒரு படத்தில் துருத்திக்கொண்டு நிற்கிறது இரண்டு பாடல்கள். எல்லா காட்சியிலும் பின்னணி இசையைப் போட்டே ஆக வேண்டும் என ஜிப்ரானிடம் சொல்லிவிட்டார்கள் போல, வாசித்துத் தள்ளிவிட்டார். ஜிப்ரானுக்கே வெளிச்சம்!

பக்கா ஆக்சன் த்ரில்லரில் சோஷியல் மெசேஜ் என இந்தப் பொங்கல் துணிவுப் பொங்கல் என்கிறார்கள் அஜித் ரசிகர்கள்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.