‘நான் சொன்னப் பிறகே இயக்குநர் வினோத் தனது பெயரை H. வினோத் என்பதற்கு பதிலாக எச். வினோத் என தமிழில் உபயோகிக்க ஆரம்பித்தார்’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாள சீமான் நேற்று கூறியது வைரலான நிலையில், இதுகுறித்து இயக்குநர் ஹெச் வினோத் நம்மிடம் சுவாரஸ்யம் பகிர்ந்துள்ளார்.

அஜித்தின் ‘துணிவு’ படம் நாளை மறுதினம் (ஜன.11) தமிழ்நாட்டில் நள்ளிரவு 1 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், அப்படத்தின் இயக்குநர் பல்வேறு மீடியாக்களும் பேட்டி அளித்து வருகிறார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாள சீமான், இயக்குநர் ஹெச் வினோத் குறித்த கூறிய ஒரு கருத்து பரவலாக வைரலாகி வருகிறது. சென்னையில் நேற்று நடைபெற்ற ‘வெள்ளிமலை’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்வில் பேசிய சீமான், “என் தம்பி வினோத். ‘தீரன்’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘சதுரங்க வேட்டை’ உள்ளிட்ட படங்களை எடுத்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள ‘துணிவு’ படத்தையும் எடுத்துள்ளார். அவர் முதலில் தனது பெயரை H வினோத் என்றே போடுவார்.

அதை முதலில் தமிழில் மாற்றுங்கள் என்று சொல்வேன். நமது அப்பாக்கள் என்ன வெள்ளைகாரங்களா.. நாம் என்ன ஆங்கிலேயர்களுக்கா பிறந்தோம்.. முதல் எழுத்தே நமது தாய் மொழியில் அன்னை தமிழில் போடவில்லை என்றால் என்ன இது.. தமிழில் போடு என்று சொன்னேன்.. ‘இல்லைங்க எதாவது பிரச்சினை வரும்’ என முதலில் சொன்னார். என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்குறேன் என்று சொன்னேன். அதன் பின்னரே மாற்றினார்.

அதனால் தான் இப்போது ‘துணிவு’ பட விளம்பரங்களில் ஹெச் வினோத் என்று வருகிறது. அதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஒரு எழுத்தைக் கூட மாற்ற முடியாத தமிழன் எப்படி நாட்டை மாற்றவும், திருத்தவும் முடியும். நாக்கை திருத்த முடியாத நம்மால் எப்படி நாட்டை திருத்த முடியும். தமிழில் ஏன் பேச முடியாத சொற்கள் இல்லையா?. உலகிலேயே எந்தவொரு மொழியின் துணையும் இல்லாமல் தனித்து இயங்கக் கூடிய மொழி தமிழ் தான். இதனால் தான் உயர் தமிழ் செம்மொழி” என்றுக் கூறியிருந்தார்.

இந்நிலையில், புதிய தலைமுறைக்கு அளித்துள்ளப் பேட்டியின்போது சீமான் கூறியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய இயக்குநர் ஹெச் வினோத், “ஆமாம் அண்ணன் ஒருதடவை சொன்னாரு.. என்னுடைய மியூச்சுவல் நண்பர் இரா சரவணன். அவருக்கு சீமான் சார் நண்பர். நானும் சரவணன் சாரும், சீமான் அண்ணனை சந்திக்கலாம்னு நினைச்சப்போது.. ‘எங்கடா இருக்கனு’ சரவணன் சாரிடம் சீமான் அண்ணன் கேட்டார்.

இதோ இங்கதான் வினோத்தோட இருக்கேனு சரவணன் சார் சொன்னார். ‘போன் அவன்கிட்ட கொடுடா’ என்று சீமான் அண்ணன் சொன்னாரு. அப்போது என்கிட்ட ‘H Vinoth-னு (H வினோத்) இங்கிலீஷ்ல போடும்போது இங்கிலீஷ்ல போடு. தமிழ்ல போடும்போது ஏன் தமிழ்ல போட மாட்டேங்கிறனு’ உரிமையா கேட்டார். சரிண்ணே மாத்திருவோம். அதுல என்ன இருக்கு. நிறைய பேரு recognize பண்ணமாட்டங்கனு பயம் இருக்கு. அதனால புரொடக்ஷன்ல மாத்த தயங்குறாங்கனு சொன்னேன். உண்மையில் நிறைய பேர் மாத்த தயங்குனாங்க. ‘யார் அது சொன்னது, நான் அவங்ககிட்ட பேசுறேன்’ அப்படினு சொன்னாரு. ‘தமிழ்ல போட்டு யார் புரியாம recognize பண்ணாம இருப்பாங்க’னு கேட்டார். ரொம்ப அன்பான அண்ணன்” இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.