ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நீலகிரியில், ஏராளமான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. அரசு பூங்காக்கள் தோட்டக்கலைத்துறை மூலமும், சூழல் சுற்றுலாவை வனத்துறையும், படகு இல்லங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் நிர்வகித்து வருகின்றன.

ஊட்டி ஏரியில் கழிவுகள்

ஊட்டியில் உள்ள மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஊட்டி ஏரியில் நிறுவப்பட்ட படகு இல்லமும் ஒன்றாகும். தொட்டபெட்டா மலைச்சரிவில் உருவாகி ஊட்டி நகரைக் கடந்து மாயாற்றில் கலக்கும் வெள்ளிநீரோடை எனப்படும் கோடப்பமந்து கால்வாயின் குறுக்கே நீலகிரியின் முதல் ஆட்சியரான ஜான் சல்லீவனால் 1824-ம் ஆண்டு 65 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டது.

ஊட்டி நகரின் கழிவுகளால் கடுமையாக மாசடைந்த ஊட்டி ஏரியை சீரமைக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றளவும் சீரமைக்க முடியாத நிலையே நீடிக்கிறது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி மேற்கொள்ளும் இந்தப் படகு இல்லத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மதுபாட்டில்கள் குவிந்திருப்பது சுற்றுலாப் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது.

ஊட்டி ஏரியில் கழிவுகள்

இது குறித்துப் பேசிய கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர், “ஊட்டி படகு இல்ல ஏரி சிறப்பாக இருக்கும் என சொன்னார்கள். ஆர்வத்துடன் வந்தோம். ஆனால், படகைச் சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள், காலி மதுபாட்டில்கள் என குப்பைக் குவியல் மிதக்கிறது” என்றனர்.

இது குறித்து படகு இல்ல மேலாளரிடம் கேட்டோம். “இவற்றை மேற்பார்வை செய்வது பொதுப்பணித்துறைதான். ஏரிக்கு வரும் நீரைச் சுத்திகரிக்கும் இடத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக கழிவுகள் தென்படுகின்றன. இரு தினங்களுக்கு ஒரு முறை குப்பைகளை வந்து அகற்றிச் செல்கிறார்கள். பொங்கலுக்குள் சரியாகிவிடும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.