இந்தியாவின் தேசத் தந்தை என்று மகாத்மா காந்தி அழைக்கப்படுகிறார். இந்த நிலையில், ‘புதிய இந்தியாவின் தேசத்தந்தை’ என்று பிரதமர் மோடியை அழைத்ததன் மூலம் புதிய சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார், பா.ஜ.க-வைச் சேர்ந்த மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் அம்ருதா, கடந்த டிசம்பர் 21-ம் தேதி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, ‘நமக்கு இரண்டு தேசப் பிதாக்கள் இருக்கிறார்கள். புதிய இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி.. முந்தைய இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி’ என்று அவர் குறிப்பிட்டார்.

காந்தி

இந்தக் கருத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடுமையாக விமர்சித்திருக்கிறார். `இந்திய சுதந்திரத்துக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எந்தப் பங்கும் ஆற்றவில்லை. புதிய இந்தியாவின் தந்தை என்று சொல்வதைக் கேள்விப்பட்டேன். புதிய இந்தியாவின் தந்தை, நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்?’ என்று நிதிஷ் குமார் சாடியிருக்கிறார்.

அம்ருதாவின் கருத்தை விமர்சித்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சருமான யஷோமதி தாக்கூர், “பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களைப் பின்பற்றுபவர்கள் காந்தியை மீண்டும் மீண்டும் கொலை செய்ய முயல்கிறார்கள். பொய்களைத் திரும்பத் திரும்பச் சொல்லி, காந்தி போன்ற மகான்களை அவமதிப்பதன் மூலம் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள்’ என்கிறார்.

அருணன்

இந்த சர்ச்சை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம். “ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வின் அடிப்படை நோக்கமே, மகாத்மா காந்தியின் பெயரையும் புகழையும் மட்டம்தட்டுவதுதான். காந்தியையும், அவரின் அகிம்சாவாதத்தையும், அவரின் சுதந்திரப் போராட்ட முறைமைகளையும் ஆர்.எஸ்.எஸ் என்றைக்குமே ஏற்றுக்கொண்டதில்லை. 1930-களில் தீண்டாமை ஒழிப்பை காந்தி முன்னெடுத்தபோது, ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கு அவ்வளவு எரிச்சல். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும் ஒரு தலைவர் எதற்காக, தீண்டாமை எதிர்ப்பு போன்ற போராட்டத்தில் இறங்க வேண்டும் என்று பேசினார்கள்.

காந்தியின் ஆணைக்கிணங்க,1939-ல் மதுரையில் காங்கிரஸ்காரர்கள் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தினர். அதற்கு, சனாதனிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அத்தகைய எதிர்ப்புகளை மீறித்தான் சமூகக்கொடுமைகளுக்கு எதிராக காந்தி போராடினார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தது மட்டுமல்லாமல், தீண்டாமை போன்ற சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடியதன் மூலமாக அவர் ஒரு சமூகப் போராளியாகவும் இருந்தார். ஆகவே, அவரை தேசத் தந்தை என்று இயல்பாகவே மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராக போராட்ட முறைகளை காந்தி உருவாக்கினார். காந்தி வருவதற்கு முன்பு, வெறும் மனு போடுகிற மகா சபையாகத்தான் காங்கிரஸ் கட்சி இருந்தது. காந்தி வந்துதான், சத்தியாகிரகப் போராட்டம், ஒத்துழையாமை இயக்கம் போன்ற வடிவங்களில் கோடிக்கணக்கான மக்களைத் திரட்டினார். அதே நேரத்தில், பக்திமானாகவும் அவர் இருந்தார். அந்த பக்தியை சுதந்திரப் போராட்டத்துக்கு பயன்படுத்தினாரே ஒழிய, பிற மத வெறுப்புக்கு அவர் பயன்படுத்தவில்லை. மதநல்லிணத்துக்காகவும், மக்கள் ஒற்றுமைக்காகவும் அவர் பாடுபட்டார். அதனால்தான், அவர் தேசத்தின் தந்தை என்று மக்களால் போற்றப்படுகிறார்.

பிரதமர் மோடி

திடீரென இவர்கள் இந்தியாவின் புதிய தேசத்தந்தை என்று மோடியைச் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். மோடியை, ‘புதிய தேசத்தந்தை’ என்று ஒருவர் பேசியிருக்கிறார். தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டுக்கு மோடி என்ன செய்திருக்கிறார்? இவர் தலைமையிலான ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சியாக இருக்கிறது? மதநல்லிணத்துக்காகவும், மக்கள் ஒற்றுமைக்காகவும் மோடி என்ன பங்காற்றியிருக்கிறார்? 2002-ம் ஆண்டு குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது, அங்கு நடந்த கோரச் சம்பவங்களுக்கு யார் பொறுப்பு?

தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக என்றைக்காவது மோடி பேசியிருக்கிறாரா? அவருடைய கட்சி என்றைக்காவது தீண்டாமைக்கு எதிராகப் போராடியிருக்கிறதா? ஏழைகளைக் காப்பாற்றுவதற்கு பதிலாக, கடைக்கோடி இந்தியர்களைக் கைதூக்கிவிடுவதற்கு பதிலாக அதானி, அம்பானி போன்ற பெரும் தொழிலதிபர்களின் நலன்களில் அக்கறை காட்டுவதுதான் தேச நலனா…” என்கிறார் பேராசிரியர் அருணன்.

காந்தி

இந்த சர்ச்சை குறித்து பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

“பிரதமர் மோடியின் நாட்டுப்பற்று, உழைப்பு, தேசப்பணி போன்றவற்றை கருத்தில் கொண்டு அப்படிச் சொல்கிறார்கள். பிரதமர் மோடியின் தலைமையில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிறப்பான பாதையில் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது. அதனால், உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துகொண்டிருக்கிறது. இந்த முன்னேற்றங்களைப் பார்த்து, ஆர்வமிகுதியால் பிரதமரை இப்படி சிலர் அழைக்கிறார்கள். இதில், தவறு ஒன்றும் இல்லை. அதற்காக, காந்தியுடன் மோடியை ஒப்பிடுகிறார்கள் என்றும் பார்க்கத் தேவையில்லை” என்கிறார் நாராயணன் திருப்பதி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.