“பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அரசியலாக்கியதற்காக திமுக தலைகுனிய வேண்டும்!” – அண்ணாமலை சாடல்

2016-ல் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கையை அரசியல் கட்சிகள் பலவும் கடுமையாக விமர்சித்தன. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நாசிர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடந்த விசாரணையில், மனுதாரர்கள் சார்பாக ப.சிதம்பரம், மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் வாதங்கள் முடிவடைந்ததையடுத்து… இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நான்கு நீதிபதிகள், பண மதிப்பிழப்பு நடவடிக்கை சரி என்றும், ஒரு நீதிபதி மட்டும் அதற்கு மாறுபட்டும் தீர்ப்பளித்திருக்கிறார். இதனடிப்படையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அரசியலாக்கியதற்காக தி.மு.க தலைகுனியவேண்டும் என விமர்சித்திருக்கிறார்.

அண்ணாமலை

இது குறித்து அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் உரிமை, நோக்கத்தை நிலைநிறுத்தும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது. கடந்த சில ஆண்டுகளில், அதன் மீது பொருளாதார வல்லுநர்கள், வேலையற்ற எதிர்க்கட்சிகள் நடத்திய மோசமான அரசியல் ஊகங்களுக்கு இது முற்றுப்புள்ளி வைத்தது. மேலும் இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு முன்பு, மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஆறு மாதங்களுக்கு மேலாக ஆலோசனை நடந்ததை உச்ச நீதிமன்றம் உள்வாங்கியிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

இது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்ததைப் போல, ஒருதலைபட்சமாக முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. அதேபோல், ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான 52 நாள் கால அவகாசம் நியாயமற்றது அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. எனவே, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அரசியலாக்கியதற்காக எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாக தி.மு.க வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.