பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு கல்குவாரி செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தொழில்துறை செயலர் ச.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

“கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி தமிழக அரசின் தொழில்துறையால் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் சுரங்கம் தோண்டுதல், பாறை உடைத்தல்(குவாரி) மற்றும் அரைத்தல் ஆகிய பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம், ஒரு கிமீ தொலைவுக்குள் இருந்த பல குவாரிகள் செயல்பட முடியாமல் இருந்தது அரசின் கவனத்துக்கு வந்தது.

இந்நிலையில், கடந்த ஜூன் 16ம் தேதி நடைபெற்ற சுரங்கத்துறை மாவட்ட அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில், இது தொடர்பாக திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில், அரசுக்கு கிடைக்கும் வருவாய் மற்றும் குவாரி, சுரங்கம் தோண்டும் உரிமம் பெற்றவர்கள் விருப்பம் கருதியும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் குவாரி மற்றும் சுரங்கம் தோண்டுதல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்வது தொடர்பான கருத்துருவை அனுப்பும்படி நீர்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

image

இதையடுத்து, குவாரி, சுரங்கம் தோண்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, தமிழ்நாடு சிறு கனிமங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும்படி, தமிழக அரசுக்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் தமிழக அரசுக்கு கருத்துருவை அனுப்பினார். இந்த கருத்துருவை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு பரிந்துரையை ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, இதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

image

அறிவிக்கையில், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானை வழித்தடங்களின் எல்லையில் இருந்து ஒரு கிமீ தொலைவுக்குள் குவாரிகள் செயல்பட அனுமதியில்லை. அதே நேரம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்தால் அதன் எல்லையில் இருந்து ஒரு கிமீ தொலைவுக்குள் சுரங்கம் மற்றும் குவாரிகள் செயல்பட இருந்த தடை விலக்கப்படுகிறது என்பதை குறிக்கும் வகையில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.