10 கிமீ வேகத்தில் நகர்ந்துவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(08.12.22) காலை புயலாக உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல்!

வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து அவ்வப்போது காற்றழுத்த மண்டலங்கள் உருவாகி கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்பொழுது வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி பின்னர் தாழ்வு மண்டலமாக உருப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் இப்புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்புயலால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் மழை, காற்று பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டுள்ளனர். 

வானிலை மைய அறிக்கை;

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை புயலாக வலுப்பெறக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9ஆம் தேதி புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதால், அன்றைய தினம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேலும் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வரும் 10ஆம் தேதி வரை அதிகனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்;

புயல் உருவாவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவைச் சேர்ந்த 35 பேர் அதிகாரி சந்தீப் குமார் தலைமையில் தயார் நிலையில் இருக்கின்றனர்.

நாகை மாவட்டத்திற்கு வந்து சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினரை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் சந்தித்து அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பாதிக்கப்படும் முக்கிய இடங்கள் குறித்தும் விளக்கினார். பின்னர் புதிய தலைமுறையிடம் பேசிய அவர், நாகை மாவட்டத்தில் புயல் மையங்கள், மீட்பு மையங்கள் மட்டுமின்றி புயலால் பாதிக்கப்படுபவர்களை தங்க வைப்பதற்காக சமுதாயக் கூடங்கள், பள்ளி என 100 க்கும் மேற்பட்ட மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டத்தில் மீனவர்கள் 4ஆவது நாளாக கடலுக்கு செல்லாமல் இருக்கின்றனர். 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 3000-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளும் கரையில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மாண்டஸ் புயல் எதிரொலியால் காரைக்காலில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப்பணிகளுக்கு தேவையான உபகரணங்கள், கருவிகள் தயாராக உள்ளன. புயலை எதிர்கொள்ள தேவையான தகவல்களை அளித்து வருகிறோம். விழும் மரங்களை வெட்டுவதற்கு தேவையான கருவிகள், படகுகள், நீச்சல் வீரர்கள் என எல்லாம் தயாராக உள்ளன. மற்ற அமைப்புகள் உதவி கேட்டால் அது குறித்த தகவல்களை அளித்து வருகிறோம். புயல் குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

image

தயார் நிலையில் மீட்பு படைகள்;

புயல் காரணமாக புதுச்சேரி அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக கடலோரப் பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பான பகுதியில் கொண்டுசென்று தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார்கள். மேலும் 240 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கனமழை மற்றும் புயல் வெள்ள பாதிப்புகளிலிருந்து புதுச்சேரி மக்களை மீட்பதற்கு அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டிருக்கின்றது.

இதனிடையே மீட்புப்பணியில் ஈடுபடுவதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். இவர்கள் இன்று மாலை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் காலாப்பேட், கனகசெட்டிக்குளம், பிள்ளைச்சாவடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் புயல் மற்றும் கனமழையின் போது கடல் சீற்றம் ஏற்படுவதால் கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் கடலோரப் பகுதிகளிலே உள்ள மக்களை தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களுக்கு செல்வதற்கு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.


தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகின்றது. இன்று நள்ளிரவுக்கு பிறகு கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது காரணமாக புதுச்சேரியில் பொதுப்பணித்துறை, நகராட்சி, மின்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பணியில் இருக்கும்படி புதுச்சேரி அரசு உத்தரவிட்டிருக்கின்றது. மேலும் இந்த கனமழை மற்றும் புயலை எதிர்கொள்வதற்கு அரசு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டு இருக்கின்றது.

10 கி.மீ வேகத்தில் நகரும் புயல்;

மாண்டஸ் புயலானது மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி டிசம்பர் 8 முதல் 10-ஆம் தேதி வரை நகரக்கூடும். டிசம்பர் 7ஆம் தேதி புதன்கிழமை மாலை முதல் டிசம்பர் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. 10 கிமீ வேகத்தில் நகர்ந்துவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(08.12.22) காலை புயலாக உருவாகிறது. சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.