நடிகர் அஜித்துடன், ‘துணிவு’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள நிலையில், இதுகுறித்து ஆங்கில இணைய நாளிதழுக்கு இயக்குநர் ஹெச் வினோத் அளித்துள்ள பேட்டியினை இங்கு விரிவாகக் காணலாம்.

‘வலிமை’ படத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க, நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் உங்களிடையே ஏதும் விவாதம் நடந்ததா எனக் கேட்கப்பட்டதற்கு, உண்மையில் அப்படி ஏதும் நடைபெறவில்லை என இயக்குநர் ஹெச். வினோத் தெரிவித்துள்ளார். மேலும் ‘வலிமை’ ரிலீசுக்கு முன்பே ‘துணிவு’ படம் எடுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் ‘வலிமை’ படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களால், இந்தப் படத்தில் புதிதாக எதுவும் சேர்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘துணிவு’ படத்தின் காட்சிகள் சிலவற்றை அஜித் சாரிடம் விவரித்தப்பின், சிறிய பட்ஜெட் படமாக தயாரிப்பதற்கு ஏற்றவாறு காட்சிகள் அமைத்துள்ளதாக தெரிவித்தேன் என்றும், ஆனால் அவருக்கு இந்தக் கதைப் பிடித்துப்போய் நானும் இதில் நடிக்க முடியுமா என்றுக் கேட்டதால், படத்தை கொஞ்சம் பிரம்மாண்டத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்தால், நீங்கள் நடிக்க முடியும் என்று தெரிவித்து தற்போது இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாக ஹெச். வினோத் கூறியுள்ளார்.

அந்தக் காட்சி என்னவென்று கேட்கப்பட்டதற்கு, அதுதான் படமே என்று வினோத் பதிலளித்துள்ளார். அதனால் அதுபற்றி தற்போது வெளியில் கூறினால் சஸ்பென்ஸ் உடைந்துவிடும் என்று தெரிவித்துள்ள வினோத், இந்தப் படம், நாம் அன்றாடம் நமது கையில் புழங்கும் பணத்தை பற்றிய கதை என்றார். பேங்க் தொடர்பான செட் அமைக்கப்பட்டிருந்ததால், இந்தப் படம் பஞ்சாப் வங்கிக் கொள்ளை சம்பந்தமான படம் என்று நினைத்துக்கொள்கிறார்கள், ஆனால் இது ஒருவிதமான கலவையானப் படம், சுருக்கமா சொல்லணும்னா அயோக்கர்களின் கூட்டம் என்று வினோத் தெரிவித்துள்ளார். அயோக்கிய உலகத்தில் நடக்கும் கதை, ஆக்ஷன், சேஸிங் என வித்தியாசமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

image

இந்தப் படத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்று எழுப்பிய கேள்விக்கு இல்லை, ஆனால் அது சஸ்பென்சாகவே இருக்கட்டும் என கூறியுள்ள வினோத், “சோகமான விஷயம் என்னவென்றால், சமூகவலைத்தளங்களில் யூகங்கள் சாதாரண பார்வையாளர்களை விரைவில் சென்றடைவதால், அந்த விஷயங்கள் அவர்களை எளிதாகப் பாதிக்கின்றன. சமூக ஊடகங்களில் படத்தைப் பற்றி மக்கள் படிக்கும் அல்லது கேட்கும் அனைத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். நாங்கள் பகிரும் பாடல் மற்றும் டிரெய்லரை மட்டுமே பார்த்து ரசிக்கவே அவர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

யூகங்களால் ஒரு இயக்குநராக நீங்கள் கவலைப்படுவது போல் தெரிகிறதே, இதனை சமாளிப்பது மிகவும் சவாலாக உள்ளதா என்று கேட்கப்பட்டதற்கு, “அஜித் சார் அல்லது விஜய் சாரின் படத்தை இயக்குபவர்களுக்கு இந்தப் பிரச்சனை எப்போதும் இருக்கும். ரஜினி சாருடன் அல்லது கமல் சாருடன் பணிபுரியும் போது கூட, அவ்வளவு ஆர்வம் இருக்காது. அதற்குக் காரணம், இருவரின் ரசிகர்களும் ஒருவரையொருவர் இவ்வளவு ஆக்ரோஷமான முறையில் சண்டையிடவோ அல்லது துஷ்பிரயோகம் செய்வதோ அல்லது தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவதோ இல்லை. படம் சம்பந்தமாக வெளிவரும் எந்தச் செய்தியையும் அவர்கள் திரிப்பதில்லை, அல்லது இவ்வளவு பெரிய அளவில் ரீட்வீட் செய்து அல்லது லைக் செய்து பரப்புவதில்லை.

பிரச்சனை என்னவென்றால், அஜித் மற்றும் விஜய் பற்றி புதிதாக வரும் செய்திகளை உண்மையா இல்லையா என்பதைக் கண்டறிய ரசிகர்கள் சிறிதும் நேரம் ஒதுக்காமல், அதை அப்படியே பரப்புகிறார்கள். இந்த ரெண்டு ஹீரோவுக்கும் படம் பண்ணும் போது நாம வடிவேலு மாதிரி தான் ஃபீல் பண்ணுவோம்… ‘எங்க அண்ணன் மேல கை வெச்சு பாருடா’ங்கற லெவல்-ல தான் இருக்கு, அவங்க ஆக்டிவிட்டிகள் எல்லாம்” என்று தெரிவித்துள்ளார்.

image

அப்படியானால் இந்த இரு நட்சத்திரங்களின் படங்களும் பொங்கலுக்கு மோதும் வாய்ப்பை எப்படி எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள் என்று எழுப்பிய கேள்விக்கு, “துரதிர்ஷ்டவசமாக, இது போன்ற ஒரு மோதல் இவ்வளவு பெரிய விவாதத்தின் தலைப்பாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நீங்க என்ன தடுத்தாலும், அஜித் சார் அல்லது விஜய் சார் படத்தை மக்கள் தியேட்டர்களிலோ, ஓடிடியிலோ, டிவியிலோ பார்ப்பார்கள். வணிக ரீதியாக, அவர்களின் படங்களுக்கு இடையே 10-20 சதவீதம் வித்தியாசம் மிகக் குறைவு. எந்தப் படம் சிறந்தது என்பதை ஊடகங்கள் மக்களுக்குத் தெரிவிக்கும். அதனால் இரு கதாநாயகர்களின் இயக்குநர்கள் சிறந்த படத்தை கொடுப்பதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

உண்மையில், திரைப்படங்களுக்கு இடையே இதுபோன்ற மோதல்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஏனென்றால் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றொரு படத்திற்கு எதிராக ஒரு நல்ல படத்தை வழங்க முயற்சிப்பார்கள். உலகமயமாக்கல் எப்படி ஆட்டோமொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளை மாற்றியதோ, அதுபோலவே, கொரோனாவுக்குப் பிறகு ஓடிடி, நமது திரைப்படத் துறையையும் மாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. உலக சினிமாவோடு நமது படங்களை பார்வையாளர்கள் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

முன்பு பெரிதாக அறியப்படாத யாஷ், இப்போது நம்பர் 1 நட்சத்திரமாக இருக்கிறார். ஏனெனில் அவரது படம், உலகளவில் இந்திய படங்களில் அதிக வசூல் செய்துள்ளது. 20 வருடங்களாக இண்டஸ்ட்ரியில் இருக்கும் நடிகர்களை விட பிரதீப் ரங்கநாதன் போன்ற ஒருவர் இப்போது தன் படத்தின் மூலம் அதிகம் வசூல் செய்துள்ளார். எனவே, நம்பர் 1 அல்லது நம்பர் 2 என்பது ஒரு கட்டுக்கதையாகிவிட்டது. ஏனென்றால் இப்போது யார் வேண்டுமானாலும் நம்பர் 1 ஆகலாம்.

image

மேலும் நமது படங்களுக்கான மார்க்கெட் நமது எல்லையை தாண்டி சென்று விட்டது. தமிழ்நாட்டிற்கு வெளியே ஒரு தமிழ்ப் படத்தின் வியாபாரம், இப்போது அதன் வசூலில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம். இந்த சதவீதம் எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகவே இருக்கும். எனவே, நமது பாதுகாப்பின்மையிலிருந்து விடுபட்டு, போட்டி மனப்பான்மையை வளர்ப்பதே நமது தொழில் வளர்ச்சிக்கு சிறந்த வழியாகும். நமக்குள் சண்டை போடுவது கேடுதான்” என்று வினோத் கூறியுள்ளார்.

புதிதாக ஒரு திரைப்படத்தை எழுதும்போது இந்த மாற்றங்களை எல்லாம் வைத்து கதை எழுத ஆரம்பித்துள்ளீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, “இன்று பெரிய நட்சத்திரங்களை வைத்து படம் எடுக்கிறீர்கள் என்றால் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு எழுத வேண்டும். இப்போது, ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்குவது என்பது சிறந்த சந்தைப்படுத்தல் உத்தியைக் கொண்டிருப்பது மட்டுமல்ல, அது பார்வையாளர்களிடம் நன்றாக சென்று சேருவதை உறுதி செய்வதாகும். 

பார்வையாளர்களும் படத்தை நேர்மறையான எண்ணத்துடன் அணுகி அதைப் பார்க்க வேண்டும். ‘பொன்னியின் செல்வனு’க்கும், ‘விக்ரம்’க்கும் அப்படித்தான் நடந்தது. மக்கள் திறந்த மனதுடன் இருக்கும்போது, படம் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தால், அது ஒரு பிளாக்பஸ்டராக மாறும். நீ அப்படி என்ன கிழிச்சிட்டனு பாக்க வந்தாங்கனா, நீங்க நல்ல படம் எடுத்தாலும் அதுல இருக்கற குறைகள மட்டும் தான் பேசுவாங்க” என்றார்.

அஜித்துக்கு ஜோடியா மஞ்சு வாரியர் என்ற கேள்விக்கு, “இந்தப் படத்தில் ஹீரோவுக்கு ஜோடி இல்லை. மேலும் அஜித் சார், மஞ்சு வாரியர், அமீர், பவானி ரெட்டி, சிபி புவன சந்திரன் என ஒரு குழுவும், சமுத்திரக்கனி காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். இந்தக் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு ஷேடுகளைக் கொண்டிருக்கின்றன. எனவே நான் அவர்களைப் பற்றி அதிகம் பேச முடியாது.

image

இந்த டீமில் கொஞ்சம் இளமையாகத் தோன்றாத, ஆனால் அஜீத் சாரின் வயதுக்கு மிக நெருக்கமான மற்றும் 40 வயதுடைய பெண் கதாபாத்திரத்தை நாங்கள் விரும்பினோம். ஆனால் மஞ்சு மேடம் என்று நாங்கள் முடிவு செய்தபோது, அவர் ஒரு அற்புதமான நடிகை என்பதால், அவரிடமிருந்து வலுவான கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் எதிர்பார்ப்பார்கள் என்று நாங்கள் உணர்ந்தோம். அவர் பல நடிப்பு சார்ந்த வேடங்களில் நடித்திருப்பதால், அவரது கதாபாத்திரத்தை புத்துணர்ச்சியூட்டும் வகையில் ஆக்‌ஷன் செய்வதன் மூலம் அவரது வித்தியாசமான முகத்தை காட்ட முடிவு செய்தோம்” என்று வினோத் தெரிவித்துள்ளார்.

உங்களின் அடுத்தப் படம் யாருடன் என்று கேட்கப்பட்டதற்கு, குறிப்பாக கமல்ஹசனா அல்லது தனுஷா என வினவிய நிலையில், “ஒரு படம் வெளியாவதற்கு முன் இப்படிப்பட்ட பேச்சுக்கள் நடக்கும். ஆனால் படம் வெளியான பிறகுதான் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். எப்போதும் உங்களது முந்தைய படத்தின் வியாபாரம் தான் அடுத்த திட்டத்தையும் அதன் அளவையும் தீர்மானிக்கிறது. இப்போதைக்கு, யோகி பாபுவிடம் ஒரு ஸ்கிரிப்டை விவரித்து அவரை ஒரு படத்தில் நடிக்க கேட்டுள்ளேன்.

ஆனால் அது எனது அடுத்த திட்டமாக இருக்குமா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. லீட் ரோலில் அவர் நடிக்கிறார். அது ஒரு அப்பாவி, சிறிய நேர திருடன் மற்றும் விதிகளை கடைபிடிக்கும் ஒரு போலீஸ்காரரை உள்ளடக்கிய கதை” என்று தெரிவித்தார். மேலும் ‘வலிமை’ குறித்து பேசிய இயக்குநர் ஹெச்.வினோத், எனது வருத்தம் என்னவெனில், அந்தப் படத்தின் பலம் பற்றி யாருமே உண்மையில் பேசவில்லை என்றும், எதிர்மறை கருத்துக்களை மட்டுமே சமூகவலைத்தளத்தில் கூறினர் எனவும் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.