கர்நாடகாவில் இருந்து ஓசூர் வனக் கோட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலம் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து ஆண்டு தோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மாநில எல்லையான ஜவலகிரி வனப்பகுதி வழியாக தமிழகத்தில் நுழைவது வழக்கம்.

image

இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தளி, ஜவளகிரி, நொகனூர், தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம், சானமாவு, குருபரப்பள்ளி, மகாராஜகடை, வேப்பனப்பள்ளி ஆகிய வனப் பகுதிகளில் தஞ்சமடையும். பின்னர், ஆந்திர மாநிலம் சென்று மீண்டும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மீண்டும் கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்குச் செல்லும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் வனப் பகுதியில் தஞ்சம் அடைந்து இரவு நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி அருகிலுள்ள கிராமங்களில் நுழைந்து அங்குள்ள விவசாயிகள் சாகுபடி செய்துள்ள ராகி, தாக்களி, கோஸ், பீன்ஸ், அவரை, வாழை உள்ளிட்ட பயிர்களை தின்றும் கால்காளால் மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது.

image

மேலும் நீர் நிலங்களில் தஞ்சமடைந்து ஆனந்த குளியலிட்டு வரும் சில சமயங்களில் மனிதர்களை தாக்கி வருவதும் தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டும் கடந்த அக்டோபர் மாதம் கர்நாடக மாநில காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நுழைந்து ஓசூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட ஓசூர் சானமாவு, ஊடேதுர்கம், நுகனூர், தேன்கனிக்கோட்டை, உரிக்கும் உள்ளிட்ட வன பகுதிகளில் பல குழுக்களாக பிரிந்து தஞ்சம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இந்த யானை கூட்டங்களை, வனப் பணியாளர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் மற்றும் அதிவிரைவு மீட்பு குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள், மேலும் கிராம பகுதிகளில் நுழையும் யானைகளை விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து வன ஊழியர்கள் ஒலி பெருக்கிகள் மூலம் பொதுமக்கள் காப்புக்காட்டிற்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம். விவசாய நிலங்களுக்கு இரவு காவலுக்கு செல்ல வேண்டாம். விறகு சேகரிக்கவும், கால்நடைகளை மேய்க்கவும் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என கிராம மக்களுக்கு வனத் துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.

image

இந்த நிலையில் தற்போது ஊடேதுர்க்கம் வனப் பகுதியில் சுமார் 50 யானைகள், சாணமாவு வனப்பகுதியில் மூன்று யானைகள், நுகனூர், தேன்கனிக்கோட்டை, அய்யூர் ஆகிய வனப்பகுதியில் 35 யானைகள், தளி, ஜவலகிரி, உளிபண்டா ஆகிய பகுதிகள் 65 யானைகள், வேப்பணப்பள்ளி பகுதியில் எட்டு யானைகள், அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு ஆகிய பகுதிகளில் 35 யானைகள், உரிகம், தக்கட்டி, மல்லாஹள்ளி ஆகிய பகுதிகளில் 25 யானைகள் தஞ்சம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.