நேற்று நடைபெற்ற போர்ச்சுக்கல் Vs சுவிட்சர்லாந்து இடையேயான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் ரொனால்டோவிற்குப் பதிலாக களம் இறக்கப்பட்ட கொன்ஸாலோ ராமோஸ் எனும் 21 வயதே ஆன வீரர் ஹாட்ரிக் கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்திருந்தார். சர்வதேச அளவில் வெறும் 35 நிமிட அனுபவம் மட்டுமே கொண்ட ராமோஸூக்காகத்தான் இப்போட்டியில் போர்ச்சுக்கலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டார். இதனால் ரொனால்டோ கொஞ்சம் அப்செட்டானது போல தெரிந்தது. 6-1 என கோல் கணக்கில் போர்ச்சுக்கல் வென்ற பிறகு வீரர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், ரொனால்டோ மட்டும் ஆராவாரமே இல்லாமல் மைதானத்திலிருந்து ஒதுங்கி சென்றிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியிருந்தது.

இதனிடையே தென் கொரியாவிற்கு எதிரான ஆட்டத்தின்போது கிறிஸ்டியானோ ரொனால்டோவை எதிரணி ஸ்ட்ரைக்கர் மைதானத்தைவிட்டு கொஞ்சம் விரைந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் சற்று கோபமடைந்த ரொனால்டோ அவரைப் பார்த்து அமைதியாக இருக்கும்படி கோபத்துடன் சைகை காட்டியிருந்தார். ரொனால்டோவின் இந்தச் செயலை விமர்சித்த போர்ச்சுக்கல் அணியின் பயிற்சியாளர் சாண்ட்டோஸ், ரொனால்டோவின் செயல்கள் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று விமர்சித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, ரொனால்டோவின் இதுபோன்ற செயல்களால்தான் அவருக்கு போட்டியில் சரியான இடம் கொடுக்கப்படவில்லையா என்று பலரும் பயிற்சியாளர் சாண்ட்டோசுஸிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த அவர், “நான் ரொனால்டோவுடன் மிகவும் நெருக்கமான பழகியுள்ளேன். 19 வயதிலிருந்தே ரொனால்டோவைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். இருப்பினும் போட்டி, களம் என்பது வேறு. இந்த வேறுபாட்டை இருவருமே புரிந்து கொண்டுள்ளோம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ரொனால்டோ ஆட்டத்தில் உட்கார வைத்தது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரொனால்டோவின் காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ், “வாழ்த்துக்கள் போர்ச்சுகல். 11 வீரர்கள் வெற்றியைக் கொண்டாடியபோது அனைவரின் பார்வையும் உங்கள்(ரொனால்டோ) மீதுதான் இருந்தது. உலகின் தலைசிறந்த வீரரை 90 நிமிடங்களுக்கு ரசிக்க முடியாமல் போனது அவமானகரமானச் செயல் என்று கருதுகிறேன். ரசிகர்கள் ரொனால்டோ எங்கே என்று கேட்பதையும் ரொனால்டோ பெயரை ஆராவாரமாக கத்துவதையும் நிறுத்தவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.