செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கருத்தடை சிகிச்சை செய்த தெருநாய்கள் இறந்தது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை கிளப்பியது.

செங்கல்பட்டு நகராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாகிவிட்டதாகவும், அதை கட்டுப்படுத்துமாறும் நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் சுகாதாரத்துறை மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து, தெருநாய்களை கணக்கெடுக்கும் பணியில் சுமார் 20 நாட்களுக்கு முன்பு ஈடுபட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில் 1,350 தெருநாய்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

தெருநாய்கள் மேலும் அதிகமாவதை தடுக்க, அவற்றுக்கு கருத்தடை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள பாசி தெருவில் உள்ள தெரு நாய்களை, நகராட்சி ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பிடித்துள்ளனர். இந்த நாய்களுக்கு கருத்தடை செய்து, மீண்டும் அதே இடத்திலேயே விடப்படும் என்று சுகாதாரத்துறை ஊழியர்கள் தெரிவித்திருந்துள்ளனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட விலங்கு கருத்தடை சிகிச்சை கூடத்தில், நாய்கள் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியது. இந்த வீடியோவில் கிட்டத்தட்ட 5 நாய்கள் பரிதாபமாக சுருண்டு விழுந்து உயிரிழக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது பொதுமக்களுக்கும், விலங்குகள் நல ஆர்வலர்களுக்கும் அதிர்ச்சியை கிளப்பியது.

இதையடுத்து, காஞ்சிபுரம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் விசாரணை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்தார். இந்த விசாரணையில், Animal Trust of India என்னும் தன்னார்வ நிறுவனம்தான் இந்த கருத்தடை சிகிச்சையில் ஈடுபட்டது என்றும், இந்த நிறுவனம் இந்திய விலங்கு நலவாரியத்தில் பதிவு செய்யாமல் இயங்கி வந்தது என்றும் தெரியவந்துள்ளது. மேலும், செங்கல்பட்டு சிகிச்சை கூடத்தில் இந்த தன்னார்வ நிறுவனம் கருத்தடை செய்வதற்கான எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் விதிமுறைகளுக்கு முரணாக இயங்கி வந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் மீது விலங்குகள் கொடுமை தடுப்பு சட்டம் 1960 பிரிவு 11(a) விதியின்படி மற்றும் இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 428, 429 விதியின்படி செங்கல்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பணிகளை மேற்பார்வை செய்ய தவறியதாக செங்கல்பட்டு நகராட்சி நகர அலுவலர் முத்து மற்றும் ஆய்வுப்பணி மேற்கொள்ளாத தூய்மை ஆய்வாளர் பால் டேவிட்டிடம் விளக்கம் கேட்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் அலுவலராக கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையின் அறிக்கை, ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஜெயந்தி, “தெருநாய்களுக்கு போஸ்ட்மாடர்ம் செய்து முடிந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான துறை ரீதியான விசாரணை வரும் 8-ம் தேதி நடக்கவுள்ளது” என்று கூறினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.