வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது கிரேன் ரோப் அறுந்து கீழே விழுந்ததில் சண்டை காட்சியில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரி, காவல்துறை உயர் பயிற்சியகம் பின்புறம் உள்ள ஏரிக்கரைப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வெற்றிமாறன் இயக்கி, சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. சண்டைக் காட்சிக்காக கிங் கேசவன் மாஸ்டர், எட்டுப் பேருடன் சேர்ந்து சண்டைக்காட்சி எடுத்துக் கொண்டிருந்த போது, சண்டைக் காட்சியில் ஈடுபட்ட சுரேஷ் (59) என்பவர் கிரேன் ரோப் அறுந்து, 30 அடி உயரத்திலிருந்து தலை கீழாக கீழே விழுந்தார்.

இதில் அவரது கழுத்து எலும்பு முறிந்தது. உடனடியாக அவரை மீட்டு கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சென்ற ஓட்டேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

image

ஓட்டேரி போலீசார் படக்குழுவினரிடம் படப்பிடிப்பிற்காக அனுமதி பெற்றுள்ளார்களா? என்று ஆவணங்களை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, கமலின் நடிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வந்த ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரவு 9 மணிக்கு பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்தபோது, ராட்சத கிரேன் அறுந்து விழுந்தது.

image

இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா (பிரபல கார்டூனிஸ்ட் மதனின் மருமகன்), தயாரிப்பு உதவியாளர் மனுசூதனராவ், ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் காயமடைந்தனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, நீண்ட நாட்கள் கடந்து தற்போது தான் அந்தப் படத்தின் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் திரையுலகில் அப்போது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

– சாந்தகுமார், தாம்பரம் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.