காப்பீட்டுத் துறையில்இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையின் (IRDAI) கூட்டம் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்களில் பல நீண்ட நாள் கோரிக்கைகள் ஒரே நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறையில் தற்போது அனுமதிக்கப்பட்ட மாறுதல்கள் காரணமாக நமது நாட்டில் 2047 ஆம் ஆண்டு அனைத்து இந்தியருக்குமான காப்பீடு என்ற இலக்கை நம்மால் அடைய முடியும் என்று ஐ.ஆர்.டி.ஏ.ஐ தெரிவித்துள்ளது.

மருத்துவக் காப்பீடு

அங்கீகரிக்கப்பட்ட கார்ப்பரேட் ஏஜெண்டுகள்

முதலாவது மாறுதலாக தற்போது அங்கீகரிக்கப்பட்ட கார்ப்பரேட் ஏஜெண்டுகள் மூன்று காப்பீட்டு நிறுவனங்களின் திட்டங்களை மட்டுமே தமது வாடிக்கையாளர்களுக்கு சந்தைப்படுத்த முடியும். இதனை தற்போது ஒன்பது நிறுவனங்களாக ஐ.ஆர்.டி.ஏ.ஐ மாற்ற அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான திட்டங்களை ஏஜென்ட்கள் பரிந்துரை செய்ய முடியும். தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அதிகமாவதால் வாடிக்கையாளர் தமக்கு உகந்த சிறந்த திட்டங்களை கண்டறிய உதவும். மேலும் காப்பீட்டை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (IMF) இரண்டு நிறுவனங்களுக்கு பதிலாக ஆறு நிறுவனங்களை சந்தைப்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக காப்பீட்டு நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்கு தேவை ஏற்பட்டால் முன்பு ஐ.ஆர்.டி.ஏஐ அனுமதிக்கு பிறகே நிதி திரட்ட முடியும். தற்போது கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் வெளியிட்டு நிதி திரட்டுவதற்கு காப்பீட்டு நிறுவனங்கள் எந்த முன் அனுமதியும் பெறத் தேவையில்லை. இதன் காரணமாக காப்பீடு நிறுவனங்கள் நிதி திரட்டும் நடைமுறை எளிமையாக்கப்படுகிறது.

காப்பீட்டு நிறுவனங்களின் நிறுவனர்

மூன்றாவது மாறுதலாக காப்பீட்டு நிறுவனங்களின் நிறுவனர் தமது கையிருப்பில் உள்ள பங்குகளின் அளவினை 26% என்ற அளவிற்கு குறைக்க அனுமதி அளித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் க்ளைம்களை சரியாக கொடுத்த நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை செல்லுபடி ஆகும். இதன் மூலம் அதிக முதலீடுகளை காப்பீட்டு நிறுவனங்கள் எளிமையாக பெற முடியும். இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் நேரடியாக பெரு முதலீட்டாளர்கள் 25% வரை உள்ள நிறுவனத்தின் பங்குகளை காப்பீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதி அளித்துள்ளது.

காப்பீடு

அவ்வாறு முதலீடு செய்பவர்கள் நிறுவனத்தின் நிறுவனர் கணக்கில் சேராமல் முதலீட்டாளர்களாக மட்டுமே தொடர முடியும். அதிக முதலீடுகளை எளிமையாக பெரு நிறுவனங்கள் பெறுவதன் மூலம் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக வளர்ச்சியை எட்ட முடியும்.

நான்காவதாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லைஃப் நிறுவனம் எக்சைடு லைஃப் நிறுவனத்தை கையகப்படுத்தி இருந்தது. இதற்காக ஐஆர்டிஏஐயின் அனுமதி கோரி இருந்தது. அதற்கான அனுமதியையும் ஐஆர்டிஏஐ வழங்கி உள்ளது. இதன் காரணமாக ஹெச்டிஎஃப்சி லைஃப் நிறுவனத்தின் எம்படட் வேல்யூ (நிகர சொத்து மதிப்பு) 3500 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும். சென்ற வாரத்தில் இந்த நிறுவனத்தின் பங்குகள் 10% வரை அதிகரித்துள்ளது.

காப்பீட்டுத் துறையில் புதிய நிறுவனங்கள்…

ஐந்தாவதாக முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி விளம்பர தூதராக உள்ள கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு மூலதன வெளியிட்டுக்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ அனுமதி அளித்துள்ளது.

மேலும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஜெனரல் இன்ஷூரன்ஸ் துறையில் சேமா ஜெனரல் இன்சூரன்ஸ் (Kshema General Insurance) நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது 19 நிறுவனங்கள் காப்பீட்டுத் துறையில் நிறுவனத்தை தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். வரும் காலத்தில் அதிக நிறுவனங்களுக்கு இதன் மூலம் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது.

ஐ.ஆர்.டி.ஏ

  சால்வன்சி விகிதம்..!

மேலும் எதிர்பாராத தருணங்களில் நிறுவனத்திற்கு பிரச்சனை ஏற்பட்டால் கிளைம்களை செட்டில் செய்வதற்கு நிறுவனம் போதிய நிதியை ஒதுக்கி வைத்திருக்க வேண்டும். இதனை ஆங்கிலத்தில் சால்வன்சி என்று குறிப்பிடுவார்கள். ஆறாவது மாறுதலாக சால்வன்சி விகிதங்களை சற்று குறைத்துள்ளது. இதில் பயிர் காப்பீட்டுக்கான க்ளைம்களுக்கான சால்வன்சி அளவை 0.7% என்ற அளவில் இருந்து 0.5% என்ற அளவிற்கு ஐஆர்டிஏஐ தற்போது குறைத்துள்ளது. இதன் காரணமாக ரூ 1,360 கோடி வரை சால்வன்சி  காரணங்களுக்காக பாதுகாப்பு நிதியில் ஒதுக்கப்பட்ட தொகையை வேறு முதலீடுகளுக்கு பயன்படுத்த முடியும். எளிமையாக கூற வேண்டும் என்றால் வங்கிகளுக்கு எப்படி ரெப்போ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் இருக்கிறதோ அது போலத்தான் சால்வன்சி காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஆகும்.

மேலும் யூனிட் லிங்டு பிசினஸின்  சால்வன்சி அளவினை 0.8%லிருந்து 0.6% ஆக குறைத்து இருக்கிறது. மேலும் அரசு திட்டமான பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா திட்டத்தின் சால்வன்சி அளவினை 0.1% லிருந்து 0.05% என்ற அளவிற்கு குறைத்துள்ளது. குறைந்த பிரீமியம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இந்திய குடிமக்கள் 55 வயதுக்குள் இறக்க நேரிட்டால் இரண்டு லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும். இந்த மாறுதல்கள் காரணமாக ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ. 2,000 கோடி ரூபாய் வரை மிச்சமாகும்.

இன்ஷூரன்ஸ்…

காப்பீட்டுத்துறை சார்ந்த பங்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய வருமானத்தை வழங்கவில்லை. உலக அளவோடு ஒப்பிட்டால் நமது நாட்டில் காப்பீடு எடுத்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக இந்தத் துறை வளர்ச்சி அடையும் என்று சந்தை கருதியது. அதனால் காப்பீட்டு துறை சார்ந்த நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிக விலையில் வர்த்தகமாகியது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தை ஈட்டவில்லை. மேலும் கொரோனா நோய் தொற்று காரணமாக அதிக தொகை இழப்பீடுகளுக்காக செலவிடப்பட்டது. இதுவும் இந்த நிறுவனங்களில் லாப விகிதம் குறைவதற்கு காரணமாக இருந்தது.

மிகப் பெரிய புத்துணர்ச்சி

இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக காப்பீட்டு துறை சார்ந்த நிறுவனங்கள் பெரிய லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கவில்லை. பங்குச் சந்தைகள் தமது அதிகபட்ச புள்ளிகளுடன் வர்த்தகமானாலும் காப்பீட்டு துறை சார்ந்த நிறுவனங்கள் குறைந்த விலையிலேயே வர்த்தகமாகி வருகின்றன. தற்போது இந்தத் துறையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள இந்த புதிய மாற்றங்கள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய புத்துணர்ச்சியை ஊட்டுவதற்கு வாய்ப்புள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்த ஐசிஐசிஐ லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பார்கவ் தாஸ் குப்தா, ‘தற்போது ஐஆர்டிஏஐ காப்பீட்டு நிறுவனங்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் அனுமதி அளித்துள்ளது இந்த துறையில் மிகப்பெரிய மாறுதல்களை ஏற்படுத்தும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அனைத்து இந்தியர்களுக்கும் காப்பீடு என்று ஐஆர்டிஏஐ இன் இந்த முயற்சி நிச்சயம் சிறந்த முன்னேற்றங்களை கொண்டு வரும். காப்பீட்டு நிறுவனங்களின் அனைத்து கோரிக்கைகளும் ஒரே நேரத்தில் அனுமதி அளித்துள்ளதன் மூலம் இந்தத் துறையில் பெரிய புரட்சிக்கு ஐ ஆர் டி ஏ வித்திட்டுள்ளது என்று பார்கவ் தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.

ஹெல்த் பாலிசி

நிதி பாதுகாப்பு..!

ஆபத்து காலத்தில் நிதி பாதுகாப்பு அளிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது காப்பீடு ஆகும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் அனைத்து மக்களுமே காப்பீடு வைத்துள்ளனர். போதிய பண வசதி இல்லாத காரணத்தினால் தகுந்த சிகிச்சை கிடைக்காமல் பெரிய பாதிப்புகளை பலர் அடைகின்றனர். குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர்கள் எதிர்பாராத தருணங்களில் மரணம் அடையும் பொழுது பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாக சிதைந்து போகின்றன.

 இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் நிதி பாதுகாப்பை ஒருவருக்கு காப்பீடு வழங்கும். `இந்தியர்கள் அனைவருக்கும் காப்பீடு’ என்று இந்திய அரசு கொண்டுவரும் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியதாகும். அந்த முயற்சியின் முதல் படிக்கட்டாக ஐ.ஆர்.டி.ஏ.ஐ கொண்டு வந்த இந்த மாறுதல்கள் இருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.