கணவன் மனைவிக்குள் நடக்கும் ஈகோ மோதல் தான் ‘கட்டா குஸ்தி’ படத்தின் ஒன்லைன்.

செல்லா ஐயாவு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெஷ்மி, கருணாஸ், காளி வெங்கட், லிஸி ஆண்டனி, ரெடின் கிங்ஸ்லி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள்.

ஊருக்குள் எந்த வேலைக்கும் செல்லாமல், பரம்பரை சொத்தை வைத்து சொகுசாக வாழ்ந்து வருகிறார் வீரா (விஷ்ணு விஷால்). நண்பர்கள் ஊர்காரர்களுடன் இணைந்து கட்டப் பஞ்சாயத்து, அடிதடி என சுற்றிக் கொண்டிருக்கும் வீராவுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடுகிறார்கள். ஆனால், தனக்கு வரப்போகும் மனைவி அதிகம் படித்திருக்கக் கூடாது, தலைமுடி நீளமாக இருக்க வேண்டும், அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் எனப் பல கண்டிஷன்கள் போடுகிறார்.

இன்னொரு பக்கம் பாலக்காட்டில் கீர்த்தி (ஐஸ்வர்ய லெக்‌ஷ்மி) குஸ்தி போட்டியில் சாதிக்க வேண்டும் எனக் கனவுகளுடன் இருக்கிறார். ஆனால் அவரது குடும்பத்தினர் திருமணம் செய்ய நிர்பந்திக்க அவரும் சம்மதிக்கிறார். குஸ்தி வீராங்கனை என்பதைக் காரணம் காட்டி, பலரும் நிராகரிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தனக்கு எப்படி எல்லாம் மனைவி வர வேண்டும் என்று வீரா விரும்பினாரோ, அதற்கு நேரெதிராய் இருக்கும் கீர்த்தியை திருமணம் செய்யும்படி சூழல் அமைகிறது. திருமணத்திற்குப் பிறகு என்ன ஆகிறது? கீர்த்தியைப் பற்றிய உண்மை தெரிந்ததா? அதற்குப் பின் வீரா அதை எப்படி கையாள்கிறார் என்பதே மீதிக்கதை.

image

படத்தின் பெரிய பலம் கீர்த்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்ய லெக்ஷமி. படத்தில் பல அழுத்தமான காட்சிகள், மாஸான சண்டைக் காட்சிகள் எல்லாவற்றிலும் கச்சிதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். குடும்பத்தினரின் கட்டாயத்துக்காக திருமணத்திற்கு சம்மதிப்பது, விஷ்ணு விஷாலிடம் சிக்கிக் கொண்டு முழிப்பது, இடைவேளைக் காட்சியில் மாஸான என்ட்ரி கொடுப்பது எனப் பல இடங்களில் கவர்கிறார் ஐஸ்வர்ய லெக்ஷ்மி. ஹீரோ விஷ்ணு விஷால் வழக்கம் போல் தன்னுடைய இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நாயகியின் கதாபாத்திரத் தன்மையை புரிந்துக்கொண்டு, அதற்கேற்ப தன்னுடைய இடத்தை சுருக்கிக் கொள்கிறார். தயாரிப்பாளராகவும் இந்த மாதிரி ஒரு கதைக் களத்தை தேர்ந்தெடுத்து தயாரித்ததற்கும் விஷ்ணு விஷாலைப் பாராட்டலாம்.

விஷ்ணுவின் மாமாவாக வரும் கருணாஸ் நடிப்பும் குறிப்பிட வேண்டியது. பல இடங்களில் அவர் பேசும் வசனங்கள் எதார்த்த சமூகத்தைப் பிரதிபலிக்கும் படி அமைந்திருக்கிறது. குறிப்பாக மனைவியிடம் எப்படி இருக்க வேண்டும் என விஷ்ணு விஷாலிடம் ஒரு கும்பலும், கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஐஸ்வர்ய லெக்ஷ்மியிடம் இன்னொரு கும்பல் பேசும் காட்சி மிக நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருந்தது. அதே சமயம் காலம் காலமாக தொடரும் அடக்குமுறையை பதிவு செய்யும் விதமாகவும் இருந்தது. இவர்கள் தவிர முனீஷ்காந்த், காளிவெங்கட், லிஸ்ஸி ஆண்டனி, ஸ்ரீஜா ரவி ஆகியோரும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ரெடின் கிங்ஸ்லி வரும் ஹூமர் சீன்களும் நன்றாக ஒர்க் ஆகியிருக்கிறது.

image

பொதுவாக ஆணுக்கும் பெண்ணுக்குமான மோதல், அவர்களின் சமத்துவம் பற்றி பேசும் படங்கள் மிக சீரியஸான விதத்தில் எடுக்கப்படும். ஆனால் இந்தக் கருத்தை ஒரு எண்டர்டெய்ன்மெண்ட் படத்தில் வைத்திருந்த விதம் சிறப்பு. சில கருத்துகள் மிகப் பிரச்சாரமான விதத்தில் இருந்தாலும், அதை ஹூமருடன் சேர்த்து சொல்லி சமாளித்திருக்கிறார் இயக்குநர் செல்லா.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் கல்யாணத்தின் போது வரும் சல் சக்கா பாடல் சிறப்பு. பின்னணி இசையிலும் முடிந்தவரை படத்திற்கு வலு சேர்க்க முயன்றிருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் கேமரா, உமேஷின் கலை இயக்கம் படத்திற்கு கூடுதல் பலம். படத்தின் குறைகள் எனப் பார்த்தால், படம் துவங்கி எல்லா கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தி, கதையை ஆரம்பிக்க வெகு நேரம் எடுத்துக் கொள்வது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. இடைவேளை காட்சி நெருங்கும் போதுதான் படம் கொஞ்சம் விறுவிறுப்பாகிறது.

அதுவும் இரண்டாம் பாதியில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து காணாமல் போய்விடுகிறது. சில காட்சிகளில் பெண்கள் என்றால் இப்படித்தான் என ஸ்டீரியோ டைப் காமெடிகள் செய்துவிட்டு, அப்படியே அடுத்தக் காட்சி நகர்வதும் சற்று நெருடலாக இருந்தது. படத்தில் இரண்டு வில்லன்கள் உண்டு. ஆனால் அவர்களுக்கு இந்தக் கதையில் பங்களிப்பு எதுவும் இல்லை. வெறுமனே ஹீரோவின் பலத்தை நிரூபிக்கவும், அவருக்கான மாஸ் பில்டப் காட்டவும், இவர் ஹீரோ மிக நல்லவர் என்று காட்டவும் மட்டுமே அவர்கள் வந்து போகிறார்கள்.

மொத்தத்தில் சில குறைகளுடன் கூடிய ஒரளவு எண்டர்டெய்ன்மெண்டும் தரக் கூடிய படமாக வந்திருக்கிறது ‘கட்டா குஸ்தி’.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.