நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடும், பிற உரிமைகளும் இன்னும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இன்றளவும் நீடித்து வருகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பை அடுத்த கத்தாழை, கரிவெட்டி, வளையமாதேவி மற்றும் நெய்வேலி அடுத்த கங்கைகொண்டான், வடக்கு வெள்ளூர் உள்ளிட்ட கிராமங்களை சுரங்கம்- 2 சுரங்கம் -1 விரிவாக்க பணிக்காக என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் நிலத்தை கையகப்படுத்த முயன்று வருகிறது. மூன்றாவது சுரங்கத்தை அமைப்பதற்கான பணிகளுக்காக, 26 கிராமங்களில் இருந்து 12,125 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த திட்டமிட்டுள்ள அந்நிறுவனத்தின் நிர்வாகம், அதற்கான புதிய மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி, நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.23 லட்சம், வீட்டு மனைகளுக்கு ஊரகப்பகுதியில் சென்ட்டுக்கு ரூ.40,000, நகரப்பகுதிகளில் ரூ.75,000 வழங்கப்படும். மறுகுடியமர்வுக்காக 2178 சதுர அடி மனையில் 1000 சதுர அடியில் வீடு கட்டித் தரப்படும். ஒப்பந்த வேலைவாய்ப்பு அல்லது அதற்கான இழப்பீடாக ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் என்.எல்.சி அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், என்.எல்.சி நிர்வாகம் ஏற்கனவே நிலம் கையகப்படுத்தும் போது முறையாக விதிமுறைகளை பின்பற்றாததை சுட்டிக்காட்டியும் தற்போதாவது வேலைவாய்ப்பு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், இதனால் அப்பகுதி மக்கள் வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை, ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து நிலத்தை தர மறுத்து போராடி வருகின்றனர். 

image

திருமாவளவன் கோரிக்கை:

இந்த விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “என்எல்சி சுரங்கம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கு நிலத்தைக் கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏறத்தாழ 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர்.

இந்த நிலங்களை கையகப்படுத்துகிற என்எல்சி நிர்வாகம், கடந்த காலங்களில் நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றியிருக்கிறது. அந்த நிர்வாகம் வாக்குறுதி அளித்தப்படி இழப்பீடும் வழங்கவில்லை, வேலைவாய்ப்பும் வழங்காமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. தற்போது அதே என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள இருக்கும் சூழலில், நிலம் கையகப்பட்டுத்துகின்றபோது, இழப்பீடு மற்றும் மறுகட்டமைப்பை அளிப்பதற்கான விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று பாதிப்பிற்குள்ளாகும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதுதொடர்பாக ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும். அந்தக் குழு முழுமையாக ஆய்வு நடத்தி, ஒரு ஏக்கருக்கு எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கும் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். 2000-ம் ஆண்டிலிருந்து நிலம் வழங்கிய மக்கள், நிலம் வழங்கவுள்ள மக்கள் அனைவருக்கும் பாகுபாடில்லாமல் இழப்பீடு வழங்குவதற்கு உரிய தகவல்களை திரட்டி தர வேண்டும். குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இழப்பீடு தர வேண்டும்.

ஏற்கெனவே நிர்வாகம் அளித்த வாக்குறுதியை மக்கள் ஏற்கவில்லை. நிலத்தை கொடுப்பதால், வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதால், வீட்டுக்கு ஒருவருக்கு கட்டாயம் வேலைவாய்ப்பும், ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று மக்களின் முதன்மையான கோரிக்கையாக முன்வைக்கின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக, தவாக, இடதுசாரிகள் இன்னும் ஆதரவாக இருக்கக்கூடிய தோழமை கட்சிகளை ஒருங்கிணைத்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். ஆர்ப்பாட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழக முதல்வர் இதில் தலையிட வேண்டும். ஏனெனில், மாவட்ட ஆட்சித் தலைவர்தான் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்கிறார். மத்திய அரசு நிறுவனமான என்எல்சிக்கு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் நிர்வாகம்தான் மேற்கொள்கிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு செய்வதால், இதில் தமிழக முதல்வருக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. எனவே அவர் தலையிட வேண்டிய தேவை இருக்கிறது. எனவே நாங்கள் அனைவரும் இணைந்து முதல்வரை நேரில் சந்தித்து, முதல்வரின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு செல்வோம்” என்று அவர் கூறினார்.

image

அன்புமணி வெளியிட்ட கோரிக்கை:

பாமக தலைவர் அண்புமணி வெளியிட்டிருந்த அறிக்கையில் “நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், என்எல்சியின், சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் தர மறுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை அல்லது நிதி வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் ஆசைகாட்டியிருக்கிறது. நிலம் கொடுத்தவர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளாக ஏமாற்றத்தையும், துரோகத்தையும் மட்டுமே பரிசாக அளித்த என்எல்சி நிறுவனத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு கடலூர் மாவட்ட மக்கள் ஏமாற மாட்டார்கள்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் எடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத ஒப்பந்த வேலை, அதை விரும்பாதவர்களுக்கு மொத்தமாகவோ, மாத வாரியாகவோ ஒரு சிறிய தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலம் கொடுத்த மக்களை சுரண்டி, லாபம் ஈட்டி வரும் என்எல்சி நிறுவனத்திற்கு, சுரண்டப்பட்ட மக்கள் மீது திடீர் கரிசனம் ஏற்பட்டிருப்பதும், என்எல்சிக்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட மக்களை ஆசை காட்டி ஏமாற்ற மாவட்ட நிர்வாகம் ஆட்சியர் தலைமையில் களமிறங்கியிருப்பதும் வியப்பளிக்கவில்லை. மக்களை ஏமாற்றும் இம்முயற்சி பயனளிக்காது.

என்எல்சி நிறுவனத்திற்காக இதுவரை 37,256 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்நிலங்கள் சுமார் 25,000 குடும்பங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அந்த குடும்பங்களில் 1827 பேருக்கு மட்டும் தான் வேலை வழங்கப்பட்டது. மீதமுள்ள 23 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்று வரை வேலை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை.

அப்போதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை வழங்க முன்வராத என்எல்சி நிறுவனம், இப்போது அந்நிறுவனம் வெளியேற வலியுறுத்தி எனது தலைமையில் பாமக இருமுறை போராட்டம் நடத்திய பிறகும், நிலங்களை வழங்க முடியாது என்று கூறி அளவிட வரும் அதிகாரிகளை பொதுமக்கள் திருப்பி அனுப்பிய பிறகும் தான் என்எல்சி இந்த அளவுக்கு இறங்கி வந்திருக்கிறது. இதிலிருந்தே என்எல்சி நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் நோக்கம் என்ன? என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

இப்போதும் கூட நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட 23,000-க்கும் கூடுதலான குடும்பங்களில் வெறும் 1000 பேருக்கு மட்டுமே வேலை வழங்க என்எல்சி முன்வந்திருக்கிறது. அதுவும் எந்த உத்தரவாதமும் இல்லாத ஒப்பந்த வேலை தான். அவ்வாறு தரப்படும் வேலை அடுத்த 99 நாட்களில் கூட பறிக்கப்படக் கூடும். 50 ஆண்டுகளாக தங்களை சுரண்டிய என்எல்சி இப்போது தங்கள் மீது அக்கறை காட்டுவதை போல நாடகமாடுவதை மக்கள் நம்ப மாட்டார்கள்; அவர்கள் என்எல்சி மீது நம்பிக்கையிழந்து விட்டனர்.

உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. அதற்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பவை நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட படிம எரிபொருட்கள் தான். அதிலும் குறிப்பாக நெய்வேலியில் எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி எரிதிறன் குறைந்தது என்பதால் சுற்றுச்சூழலுக்கு கூடுதல் கேட்டை விளைவிக்கும். புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த படிம எரிபொருள் பயன்பாட்டை குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஒரு காரணத்திற்காகவே என்எல்சி நிறுவனத்தை மூட வேண்டும்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக நிலத்தடி நீரை உறிஞ்சி நீர்மட்டத்தை 1000 அடிக்கும் கீழே தள்ளியுள்ளது. ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும் சீரழித்து பாலைவனமாக்கி வருகிறது. என்எல்சி நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அடையாளம் கண்டு அறிவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தை அழித்துக் கொண்டிருக்கும் என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவது தான் அனைத்து வகை சிக்கல்களுக்கும் தீர்வு. அதன் மூலம் தான் கடலூர் மாவட்டத்தை சீரழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுக்கும்படி மக்களை நெருக்கடிக்குள்ளாக்க கடலூர் மாவட்ட ஆட்சியரோ, நிர்வாகமோ முயன்றால் அதை பாட்டாளி மக்கள் கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களையும் காப்பாற்றுவதற்காக என்எல்சியை வெளியேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை எனது தலைமையில் பாமக முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள் – அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.