தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாபா’ திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு டப்பிங் பணிகளை ரஜினி மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட படம் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் படங்கள் வெளிவருகிறது என்றாலே திரையரங்குகள் எல்லாம் திருவிழாக் கோலம் போன்றது போல் பரபரப்பாக இருக்கும். அவ்வாறு கடந்த 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த், கதை – திரைக்கதை எழுதி, தயாரித்து, நடித்தப் படம் ‘பாபா’.

ரஜினியுடன் களமிறங்கிய நடிகர்கள் பட்டாளம்!

இந்தப் படத்தில் மனீஷா கொய்ரா, கவுண்டமணி, சங்கவி, சுஜாதா, ஆஷிஷ் வித்யார்த்தி, எம்.என் நம்பியார், விஜயகுமார், சாயாஷி ஷிண்டே, டெல்லி கணேஷ், கருணாஸ் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

image

மேலும், ராகவா லாரன்ஸ் மற்றும் பிரபு தேவா ஆகியோர் பாடல்களில் சிறப்புத் தோற்றத்தில் வந்தனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், நாசர், ராதா ரவி, சரத் பாபு ஆகியோரும் சிறு காட்சியில் வந்து சென்றனர். பெரிய நட்சத்திரப் பட்டாளம், ரஜினிகாந்த் நடித்தது மட்டுமின்றி திரைக்கதையும் எழுதியிருந்ததால் கூடுதல் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். சுரேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வசனங்கள் எழுதியிருந்தார்.

ரசிகர்களை ஏமாற்றிய பாபா!

ஆனால், இந்த திரைப்படம் வெளியான நேரத்தில் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. கலவமையான விமர்சனங்களை பெற்றது. தொழில்நுட்பம், இசை, நடிப்பு என நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தால் கதை சொல்ல வரும் விஷயத்தில் சற்றே தடுமாற்றம் இருந்தது. அதுவும் இரண்டாம் பாதியில் கதையின் திசையும் நீளமும் ரசிகர்களை சோதித்தது. இதனால், பல இடங்களில் கடுமையான நஷ்டத்தையே சந்தித்தாக கூறப்படுகிறது.

 படத்தில் ஆன்மீக பாதையா, அரசியல் பாதையா என்ற குழப்பத்தில் இருக்கும் ரஜினி கடைசியில் அரசியல் பாதையை கையில் எடுக்கிறது போல் முடிவு இருக்கும். ஒருவேளை இந்த திரைப்படம் வெற்றி பெற்றிருந்தால் ரஜினி சில முக்கிய முடிவுகளை அப்பொழுதே எடுத்திருக்க வாய்ப்பிருந்ததாகவும் பேசப்பட்டது. 

அண்ணாமலை, பாஷா போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை ரஜினிக்காக இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் கைகளாலே தோல்வி படமும் கிடைத்தது. பாபா முழுக்க முழுக்க ரஜினியின் கைவண்ணத்தில் உருவானதே அதற்கான காரணமாக கூறப்பட்டது.

image

இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பாபா’ படத்தை மீண்டும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து நவீன தொழிற்நுட்பத்துக்கேற்ப கலர் கிரேடிங், மீண்டும் படத்தொகுப்பு, பாடல்கள் புதிதாக ரீ மிக்ஸிங், சிறப்பு சப்தங்கள் என புதுப் பொலிவுடன் இந்தப் படம் வெளிவரவுள்ளது. இதனால் படத்தின் ஒரு சில காட்சிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசியுள்ளார். அதாவது, மீண்டும் சில புதிய காட்சிகளை இணைத்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ரஜினிகாந்த் டப்பிங் பேசிய இந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குறைக்கப்படும் நீளம்

பாபா திரைப்படம் ரீரிலிஸ் தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, “பாபா திரைப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவினை எடுத்த போது முன்பு ஏன் அந்தப் படம் சரியாக போகவில்லை என ஆலோசனை செய்தோம். எதையெல்லாம் மாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைத்தோமோ அதனை தற்போது செய்யலாம் என முடிவு எடுத்தோம். அதில் முக்கியமான ஒன்றுதான் படத்தின் நீளம். படத்தின் நீளத்தை குறைத்ததோடு சில டயலாக்குகளையும் சேர்த்துள்ளோம். படத்தில் எதையெல்லாம் மாற்ற வேண்டும் நான் நினைத்த அதனையேதான் ரஜினி சாரும் நினைத்திருந்தார். டெக்னிக்கலாக நிறைய மாற்றியுள்ளோம்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.