தமிழகத்தில் பல பகுதிகளில் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், டி.ஜி.பி அலுவலகம் சார்பில் நேற்று செய்தி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில், “தமிழகத்தின் பல பகுதியில் நிதி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் கூட்டங்கள் நடத்தி பொதுமக்களை கவரும் வகையில், முதலீட்டு தொகைக்கு மாத வட்டியாக 10 – 25 சதவீதம் வரை தருவோம் என்று ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. பொதுமக்களிடம் முதலீடுகளை பெறுவதற்காக முகவர்களையும், பணியாளர்களையும் நியமித்துள்ளன. ஆனால் முதலீட்டாளர்களுக்கு தாங்கள் அறிவித்தபடி மாதந்தோறும் வட்டித் தொகையோ, முதலீட்டு தொகையோ முறையாக திருப்பித் தரவில்லை என்று புகார்கள் வந்தன.

ஆருத்ரா கோல்டு நிறுவனம்

புகார்களின் அடிப்படையில், பிரபலமான ஆருத்ரா கோல்டு நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ஒரு வழக்கை பதிவு செய்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய ஊர்களில் 37 இடங்களில் பொருளாதார சோதனை நடத்தினர். இந்த நிறுவனத்தில் சுமார் 19,255 பேர், சுமார் ரூ 2,438 கோடி முதலீடு செய்திருப்பது தெரியவந்தது. ஆருத்ரா கோல்ட் நிறுவனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் எட்டு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவர்களில் பாஸ்கர், மோகன்பாபு உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த வழக்கில் ராஜசேகர், ஹரிஷ், மைக்கேல் ராஜ், நாராயணி போன்றோர் தலைமறைவாக உள்ளனர்.

இதைப் போல, எல்.என்.எஸ் சர்வதேச நிதி சேவை என்ற நிறுவனம் சம்பந்தமாக காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஈரோடு, கோவை, உள்ளிட்ட 21 இடங்களில் சோதனை நடத்தியதில், சுமார் ஒரு லட்சம் பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் ரூ. 6,000 கோடிக்கு மேல் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லட்சுமி நாராயணன், வேதநாராயணன், ஜனார்த்தனன், மோகன் பாபு ஆகியோர் தலைமுறைவாக இருக்கின்றனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

மோசடி

சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்ட ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில், 4,500 பொதுமக்களிடம் முதலீட்டு தொகையாக சுமார் ரூ. 600 கோடி அளவுக்கு வசூல் நடந்திருக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சௌந்தர்ராஜன், அவர் மகன் அலெக்சாண்டர் இருவரும் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஹிஜாவு நிறுவனம் மீதான புகார்

மேற்கண்ட 3 நிறுவனங்களில் முதலீட்டு தொகை செலுத்தி ஏமாந்த பொதுமக்கள், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுக்கலாம். மேலும், இந்த மூன்று நிறுவனங்கள் மீதும் தொடரப்பட்ட வழக்குகள் அடிப்படையில் தலைமறைவு குற்றவாளிகளாக இருப்பவர்கள் பற்றி தகவல் தெரிந்த பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு தெரிவிக்கலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல் உறுதியாக இருப்பின் அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்” எனக் குறிப்பிடபட்டிருக்கிறது.

சைலேந்திர பாபு

இது தொடர்பாக டி.ஜி.பி சைலேந்திரபாபு, “இது போன்ற மோசடி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் முதலீடு செய்து ஏமாற வேண்டாம். மூன்று மோசடி நிறுவனங்களில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் சுமார் ரூ 9,000 கோடி முதலீடுமுதலீடு செய்து ஏமாந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நியாயமான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முதலீட்டு தொகையை, பணத்தை இழந்த பொதுமக்களுக்கு திருப்பித் தர உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.