திண்டுக்கல் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ராமராஜபுரத்தைச் சுற்றி மட்டபாறை, விளாம்பட்டி, தாதன்குளம், முத்துலிங்கபுரம், தங்கையாபுரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 350 ஏக்கர் பரப்பில் நெல், தென்னை, வாழை, வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதி விவசாயிகள் வைகை ஆற்று பாசனத்தை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர்.

கால்வாய்

இதில் கள்ளந்திரி வாய்க்காலில் இருந்து பெரியமடை எனப்படும் ஊமச்சி மடையில் இருந்து வரும் கால்வாயில் தான் ராமராஜபுரம், தங்கையாபுரம் சுற்றுப்பகுதிகளில் சுமார் 116 ஏக்கர் விளைநிலங்களுக்கு தண்ணீர் கிடைத்து வந்தது. ஊமச்சி மடையில் இருந்து பிரியும் கால்வாய் தண்ணீர் ராமராஜபுரம், தங்கையாபுரம் விவசாய நிலங்களின் தேவையை பூர்த்தி செய்துவிட்டு 2 கிலோ மீட்டர் பயணித்து மட்டப்பாறை 12 கண் பாலத்தில் இருந்து கருப்பட்டி செல்லும் ஓடையில் கலந்துவிடும்.

இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்புவரை 16 முதல் 20 அடி வரை இருந்த கால்வாய் கொஞ்சம் கொஞ்மாக ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது இருந்த இடமே தெரியாத அளவுக்கு தடம் தெரியாமல் மறைந்துவிட்டது. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட பரப்பு மட்டுமே 2 ஏக்கர் இருக்கும், கால்வாய் கரை மண்ணையும், கால்வாயில் கிடந்த மணலையும் ஆக்கிரமிப்பாளர்கள் அபகரித்து விற்றுவிட்டனர். இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

கால்வாய் இருந்த பகுதி

இதுகுறித்து நம்மிடம் பேசிய ராமராஜபுரத்தைச் சேர்ந்த விவசாயி சதாசிவம், “எனது தந்தை சண்முகம் தான் இப்பகுதியில் விவசாயம் செய்துவந்தார். அவருடைய இறப்புக்கு பிறகு வங்கி மேலாளர் பணியை விட்டுவிட்டு விவசாயத்துக்கு திரும்பினேன். அப்போது தான் எங்கள் நிலத்துக்கு வந்த கால்வாய் மறைந்தது குறித்து தெரியவந்தது. இதையடுத்து அரசு ஆவணங்களை எடுத்து பார்க்கையில், ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் என அனைவரிடமும் பலமுறை மனு கொடுத்தோம். ஒரு முறை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் வந்த அதிகாரிகள், நேரடியாக வந்து ஆய்வு செய்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் வசதியை ஏற்படுத்தி கொடுக்கிறோம் என வாக்குறுதி அளித்துவிட்டு சென்றனர். அதன்பிறகு அவர்கள் வரவே இல்லை.

விவசாயி சதாசிவம்

கடைசியாக கலெக்டர் அலுவலகத்துக்கு ஆன்-லைனில் அனுப்பிய மனுவுக்கு பதில் கொடுத்திருந்தார்கள். அதில் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் அறிக்கை கேட்டுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதால் விவசாயிகள் நம்பிக்கை இழந்தனர். நெல் விவசாயத்தை விட்டுவிட்டு தென்னைகளை நட்டு கிணற்று பாசனத்தில் அவற்றை காப்பாற்றிக் கொள்ள முடிவு செய்துவிட்டனர்.

ஆக்கிரமிப்புக்கு முக்கிய காரணமாக இருப்பவர் ராமராஜபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவர் தான். கால்வாயை ஒட்டிய 6 ஏக்கரில் விவசாயம் செய்து வந்தார். அவர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். அந்தத் தொழில் அனுபவத்துடனும் அரசு அதிகாரிகளின் துணையுடனும் தான் கால்வாயை ஆக்கிரமித்துள்ளார். அவர் இப்பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பட்டியலின மக்களின் சொத்து ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் எடுத்துள்ளார்.

புதர்மண்டியுள்ள கால்வாய்

இதையடுத்து போலி ஆவணங்களை பயன்படுத்தி 10 ஏக்கர் நிலச் சொத்துகளை தனது சகோதரர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட 7 பேர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். அதனபடிப்பையில் விசாரணையும் நடந்து வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல் குடோன் அமைப்பதற்கான இடத்தேர்வு நடந்தது. அப்போது பெருமாள் கோயில் அருகே உள்ள 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ள தங்கபாண்டியன் அதற்கு தடையாக உள்ளார்” என்றார். 

தங்கபாண்டியனிடம் பேசினோம், “முதலில் நெல் களம் ஏற்கெனவே இருந்த இடத்தில் குடோன் அமைப்பதற்கான இடம் தேர்வானது. அதை சதாசிவம் உள்ளிட்ட சிலர் தான் தடுத்தனர். நிலஅபகரிப்பு செய்ததாக 7 வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்கு விசாரணையில் சம்பந்தப்பட்டவர்களே இடம் எங்களுடையது இல்லை எனக் கூறிவிட்டனர். கால்வாய் ஆக்கிரமிப்பு இருந்தால் சட்டப்படி அதை எடுத்துக்கொள்ளலாம். என் மீதான புகார்களை சட்டப்படி எதிர்கொள்ள தயார்” என்றார். 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்விசாகன்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் பேசினோம். ”மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஹெக்டேர் ஆக்கிரமிப்புகளை சம்பந்தவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அகற்றியுள்ளோம். ராமராஜபுரம் ஆக்கிரமிப்பு விவகாரத்தை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன்” என்றார். 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.