கரூர் செல்லாண்டிபாளையம் அருகே உள்ள சுக்காலியூர் காந்திநகரில் குணசேகரன் என்பவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். புதிதாக கட்டப்பட்டு வரும் இந்த வீட்டில் பக்கவாட்டில் கழிவு நீர் தொட்டி அமைப்பதற்காக பணிகள் கடந்த மாதம் தொடங்கியிருக்கின்றன. இந்த நிலையில், கழிவு நீர் தொட்டிக்கு கான்கிரீட் தளம் அமைப்பதற்காக போடப்பட்ட கான்கிரீட் பலகைகளை அகற்றுவதற்கு கரூர் தான்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரின் மகன் மோகன்ராஜ் (23) உள்ளே இறங்கியிருக்கிறார். அப்போது, உள்ளிருந்த விஷவாயு தாக்க, நிலைகுலைந்துபோன மோகனராஜ், மூச்சுவிடாமல் சிரமபட்டதோடு, அலறியிருக்கிறார்.

மோகன்ராஜ்

அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு, மேலே நின்றுக்கொண்டிருந்த சின்னமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர், உள்ளே இறங்கியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அவரையும் விஷவாயு தாக்க, அவரும் பலமாக அலறியிருக்கிறார். இருவரும் மேலே ஏறமுடியாமல் மயங்கிசரிய, அவர்களின் சத்தத்தைக் கேட்டு, அந்தக் கட்டடத்தின் எதிரே கட்டப்பட்ட வரும் கட்டடம் ஒன்றில் கொத்தனாராக வேலைப் பார்த்து வந்த, தோரணக்கல்பட்டியைச் சேர்ந்த சிவா என்கிற ராஜேஷ், அலறல் சத்தம் வந்த குணசேகரன் கட்டடத்துக்கு ஓடியியிருக்கிறார்.

சிவக்குமார்

அங்கிருந்த செப்டிங் டேங்கில் இறங்க, அவரையும் விஷவாயு தாக்க, அவரும் அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறார். இதனால், மூன்று பேரும் அங்கேயே இறந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட கரூர் மாவட்ட எஸ்.பி, ஆர்.டி.ஓ உள்ளிட்டவர்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்தனர். முதற்கட்ட விசாரணையில் புதிதாகக் கட்டப்பட்ட கழிவு நீர் தொட்டி கான்கிரீட் அமைக்கும்போது மூடப்பட்டதால், அதனுள் விஷவாயு உள்ளே இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிவா என்கிற ராஜேஷ்

இது குறித்து, தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்ததோடு, விஷவாயு தாக்கி இறந்த மூன்று கட்டடத் தொழிலாளர்களின் உடல்களையும் கைப்பற்றி, உடற்கூராய்வு செய்வதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், குணசேகரன் கட்டும் அந்த புதியக் கட்டடம் உரிய ஆவணங்கள், விதிமுறைகளை கொண்டு கட்டப்படுகிறதா என்று விசாரித்து, அறிக்கை சமர்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மூன்று கட்டடத் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.