சென்னை, காங்கிரஸ் தலைமையகம் சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின்போது உடனிருந்து படுகாயமடைந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அனுசுயா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், “ராஜீவ் காந்தி படுகொலையின்போது நான் பாதுகாப்புப் பணியிலிருந்தேன். மோசமாக காயமடைந்தேன். இரண்டு விரல்கள் போனது. உடல் முழுவதும் குண்டுகளால் துளைக்கப்பட்டு, இன்றும் என்னுடைய மார்பில் 5 குண்டுகள் இருக்கின்றன. கண்களிலும் குண்டுகள் இருக்கின்றன. உடலின் இடது பகுதி முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. நான் இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கண்ணால் கண்ட சாட்சி.

இதில் நளினி முதல் குற்றவாளி. அவருடன் சேர்த்து 25 பேர் சிறப்பு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை பெற்றவர்கள். பிறகு அவர்கள் மேல்முறையீடு செய்து தண்டனைக்காலம் மாற்றப்பட்டது. குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருக்கக்கூடிய சட்டத்தின் மூலம் அவர்கள் உச்ச நீதிமன்றத்தால் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். நளினி ஊடகத்துக்கு நிறைய பொய்யான தகவல்களைக் கொடுக்கிறார்.

சத்தியமூர்த்தி பவன் – காங்கிரஸ்

குறிப்பாக என்னை சம்பவத்தின்போது பார்க்கவில்லை என்று தெரிவிக்கிறார். போலீஸ் உதவியுடன்தான் நான் அவரை அடையாளம் காண்பித்தேன் என்கிறார். இவ்வாறு கூறுவது பொய். சிறப்பு நீதிமன்றம் என்னுடைய சாட்சியை வைத்து மட்டுமே அவர்களுக்குத் தண்டனை கொடுக்கவில்லை. 1,444 சாட்சிகளை விசாரித்துதான் தண்டனை கொடுத்தார்கள். இந்திரா காந்தி சிலை பக்கத்தில்தான் நான் நின்றேன். பிரச்னை நடந்த இடத்தில் இல்லை என்று சொல்கிறார்.

இவருக்கு இரவு 10:20 மணிக்கு இந்திரா காந்தி சிலை அருகில் என்ன வேலை? பெண் விடுதலை புலி சுபாவுடன் நளினிக்கு என்ன வேலை? நான் பணியில் இருக்கும்போது நளினியும், சுபாவும் விலை உயர்ந்த மைசூர் சில்க் புடவையில் வந்தனர். அப்போது நான் அவர்களிடம் அமரும்படி கூறினேன். அதற்கு அவர்கள் மேடையையும், என்னையும் பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டுச் சென்றார்கள்.

ராஜீவ் காந்தி

ஆனால் தற்போது அங்கு இல்லை என்று நளினி சொல்கிறார். பிறகு ஏன் முருகனை திருமணம் செய்ய வேண்டும். இந்த திருமணத்திற்கான பதிவு ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்பு செய்யப்பட்டதா?, பின்பு செய்யப்பட்டதா? ஒருவேளை படுகொலைக்கு முன்பு செய்யப்பட்டிருந்தால், இவர்தான் விடுதலைப் புலிகளை அழைத்து வந்திருக்க வேண்டும்.

நளினி உதவி இல்லையென்றால் நாட்டின் பிரதமர், போலீஸார், பொதுமக்கள், அரசியல்வாதிகள் இறந்திருக்கமாட்டார்கள். இன்று பூ வைத்துக்கொண்டு நளினி வருகிறார். ஆனால் எத்தனை பெண்களின் தாலியை அறுத்திருக்கிறார்? காந்தி குடும்பம் ஒன்றுதான் நாட்டுக்காக உயிர் கொடுக்கிறது. நமது சட்டம் குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருக்கிறது. நளினி ஒரு துரோகி” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.