ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவிய உடன் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியர்கள் தரப்பில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் அணி ஏன் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது? நடந்தது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

image

இந்தியா இங்கிலாந்திடம் தோற்ற போது!!

இந்த உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து அணிகள் தகுதிப்பெற்றன. முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதலாவதாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. பின்னர், இரண்டாவதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது. ஒருவேளை இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தால் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதி இருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்திய அணி படுதோல்வி அடைந்த போதும் அப்போது ஒரு கருத்து சோஷியல் மீடியாவில் முன் வைக்கப்பட்டது. அதாவது, இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது எவ்வளவோ பரவாயில்லை, ஒரு வேளை இறுதிப் போட்டி வரை சென்று பாகிஸ்தான் அணியுடன் தோல்வி அடைந்திருந்தால் அது மிகவும் அவமானமாக ஆகியிருக்கும் என்பதுதான் அந்த கருத்து.

image

இந்திய அணியை கலாய்த்த பாகிஸ்தான் பிரதமர்

இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாட வேண்டும் என்று பலரும் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வந்தார்கள். அதில் பாகிஸ்தானியர்கள் பலரும் இதே எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், இந்திய அணி தோல்வி அடைந்த போது பாகிஸ்தான் தரப்பில் சிலரது கருத்துக்கள் சீண்டும் வகையில் இருந்தது.

இந்தியாவை கலாய்க்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛இந்த ஞாயிற்றுக்கிழமை 152/0 Vs 170/0 இடையே மோதல் நடக்கிறது” என குறிப்பிட்டு இருந்தார். கடந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததையும், இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததையும் சுட்டிக்காட்டி ஷேபாஸ் ஷெரீப் இந்தியாவை கலாய்த்து இருந்தார். இது இந்திய தரப்பினரை சீண்டும் வகையில் இருந்தது.

image

பாகிஸ்தான் ஏன் ட்ரோல் ஆகிறது?

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவிய உடன் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியர்கள் தரப்பில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதாவது, பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்த நிலையில், நெதர்லாந்து அணி தென்னாப்ரிக்காவை வீழ்த்தியதன் காரணமாக அரையிறுதிக்குள் நுழைந்தாகவும், ஒரு ஃப்ளூக்கில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிவரை வந்துவிட்டதாகவும், அதனால் தான் அந்த அணியால் இறுதிப் போட்டியில் வெல்ல முடியவில்லை என்று பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அத்துடன், இலங்கை அணியிடம் ஆசியக் கோப்பையை இழந்தது, இங்கிலாந்திடம் உலகக் கோப்பையை இழந்தது, சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்தது என பாகிஸ்தான் அணி 2022 ஆம் ஆண்டில் அடைந்த தோல்விகளை பட்டியலிடுகிறார்கள். கோப்பையை வெல்லவில்லை என்றாலும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்ததே போதுமானது என்றும் சிலர் பதிவிடுகிறார்கள்.

image

சோயிப் அக்தரின் ட்விட்டும், ஷமியின் ரீட்விட்டும்!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், தனது ட்விட்டர் பக்கத்தில் உடைந்த இதயம் போன்ற எமோஜியை பதிவிட்டிருந்தார். அதனை ரீ-ட்வீட் செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ‘மன்னிக்க வேண்டும் சகோதரா, இதற்குப் பெயர்தான் கர்மா’ என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து சோயிப் அக்தர் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார். ”இந்திய வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள். அவர்கள் இறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கான தகுதியை இழந்து விட்டார்கள். இந்தியாவின் வேகப்பந்து வீச்சு அம்பலமாகிவிட்டது” என்று அவர் விமர்சித்திருந்தார்.  அதற்கு இப்போது பதிலடி கொடுத்திருக்கிறார் முகமது ஷமி.

ஒருவர் தோற்றால் இன்னொருவர் ஏன் ட்ரோல் செய்யணும்!!

கிரிக்கெட் என்பது ஒரு ஜெண்டில் மேன் கேம். இதை புரிந்து கொண்ட வீரர்கள் பலரும் இரு அணிகளிலும் இருக்கிறார்கள். பாகிஸ்தான் – இந்திய அணிகளில் உள்ள அந்த ஜெனியூனான வீரர்கள் தங்களது அன்பை பரஸ்பரம் எப்போதும் வெளிப்படுத்தி வருகிறார்கள். அதேபோல், இருநாட்டு ரசிகர்களும் தங்களது அன்பை திகட்ட திகட்ட பல நேரங்களில் கொட்டி வருகிறார்கள். அப்படி இருக்கையில் இரு தரப்பிலும் சிலர் சீண்டும் வகையில் பதிவிடும் கருத்துக்கள் தேவையில்லா விவாதங்களுக்கு வித்திடுகிறது. கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு அவ்வளவுதான். இதனை வைத்து இப்படியான கருத்துக்களை வளர்த்துக் கொண்டே செல்வது மிகவும் மோசமான ஒரு பண்பு. அதுவும் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவர் இதற்கு தூவம் இடுவது தேவையற்ற ஒரு செயல்.

image

போராட்ட குணத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தானுக்கு வாழ்த்துகள்

உண்மையில் பாகிஸ்தான் அணி இன்றையப் போட்டியில் தன்னுடைய போராட்ட குணத்தை கடைசி வரை வெளிப்படுத்தியது. 137 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும் 16 ஓவர்கள் வரை ஆட்டம் பாகிஸ்தான் வசமே இருந்தது. இறுதி நேரத்தில் தான் ஆட்டம் இங்கிலாந்து கைக்கு மாறியது. அதுவும் அப்ரிதி காயத்தால் வெளியேறி இருக்காவிட்டால் சற்றே ஆட்டத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கும்.

வெற்றி தோல்வி என்பது எல்லா விளையாட்டிலும் சகஜமான ஒன்றுதான். அதனை விளையாட்டோடு முடித்துக் கொள்வது சாலச்சிறந்தது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.