உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றின் வெற்றிகரமான பிரேசில் அணி, ஆறாவது முறையாக கோப்பையைக் கைப்பற்ற ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு உலகக் கோப்பை தொடர்களிலும் பங்கேற்ற ஒரே அணியான பிரேசில், இதற்கு முன் ஆசியாவில் நடந்த ஒரே உலகக் கோப்பையை வென்றிருந்தது. இப்போது ஒரு மிகப்பெரிய இளம் படை மீண்டும் அந்தக் கோப்பையை பிரேசிலுக்கு எடுத்துச் செல்லக் காத்திருக்கிறது. இந்தத் தொடரில் அந்த அணிக்கு இருக்கும் வாய்ப்புகள், பலம், பலவீனம் என்ன? அந்த அணியின் நம்பிக்கை யார்? என்று விரிவாக பார்க்கலாம்.

பயிற்சியாளர்: டிடே
FIFA ரேங்கிங்: 1
2022 உலகக் கோப்பை பிரிவு: ஜி
பிரிவில் இருக்கும் மற்ற அணிகள்: செர்பியா, ஸ்விட்சர்லாந்து, கேமரூன்

image

உலகக் கோப்பையில் இதுவரை:

இதுவரை 5 உலகக் கோப்பைகளை வென்று, இத்தொடரின் வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது பிரேசில். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என்று நான்கு கண்டங்களில் கோப்பையை வென்றுள்ள பிரேசில் அணி, கடைசியாக 2002 ம் ஆண்டு ஆசியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்தபோது சாம்பியன் பட்டம் வென்றது பிரேசில் தான். 1958, 1962, 1970, 1994, 2002 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில், இரண்டு முறை (1950, 1998) இரண்டாவது இடமும், இரண்டு முறை (1938, 1978) மூன்றாவது இடமும் பிடித்திருக்கிறது. ஆனால் கடந்த 4 தொடர்களிலுமே அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறத் தவறியிருக்கிறது. உலகக் கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகள் பெற்றது, அதிக கோல்கள் அடித்தது என பல சாதனைகள் பிரேசில் வசமே இருக்கிறது. இதுவரை 21 உலகக் கோப்பைகளில் விளையாடியிருக்கும் பிரேசில், 2 முறை மட்டுமே முதல் சுற்றைக் கடக்கத் தவறியிருக்கிறது.

தகுதிச் சுற்று செயல்பாடு:

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் மிகச் சிறப்பாக செயல்பட்டது பிரேசில். 17 போட்டிகளில் விளையாடிய அந்த அணி 14 வெற்றிகள், 3 டிரா என 45 புள்ளிகள் குவித்தது. ஒரு போட்டியில் கூட அந்த அணி தோற்கவில்லை. அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஒரு போட்டி மட்டும் ரத்து செய்யப்பட்டது. அர்ஜென்டினாவை விட 6 புள்ளிகள் அதிகம் பெற்றிருப்பது நிச்சயம் அவர்களுக்கு நம்பிக்கை தரும். தகுதிச் சுற்றில் மொத்தம் 40 கோல்கள் அடித்த பிரேசில், வெறும் 5 கோல்கள் மட்டுமே விட்டிருக்கிறது. நெய்மர் அதிகபட்சமாக 8 கோல்கள் அடித்தார். ரிச்சார்லிசன் 6 கோல்கள் அடித்தார்.
image

பயிற்சியாளர்:

கடந்த 6 ஆண்டுகளாக பிரேசில் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார் டிடே. அவர் தலைமையில் அந்த அணி 2019 கோபா அமெரிக்கா தொடரில் சாம்பியன் ஆனது. 2021 கோபா அமெரிக்கா தொடரில் இரண்டாம் இடம் பிடித்த பிரேசில், 2018 உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணிக்கு எதிராக காலிறுதியில் தோல்வியடைந்தது. இவர் தலைமையேற்ற பிறகு விளையாடிய 75 சதவிகித போட்டிகளில் பிரேசில் வெற்றி பெற்றிருக்கிறது. 76 போட்டிகளில் ஐந்தில் மட்டுமே தோல்வியடைந்திருக்கிறது.

பலம்:

 பிரேசில் அணியில் முழுவதுமே உலகத் தர வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு பொசிஷனுக்கும் ஒரு இரண்டாவது உலகத்தர ஆப்ஷன் பேக் அப்பாக இருக்கிறது. டிடே நினைத்தால் அடுத்தடுத்த போட்டிகளில் வெவ்வேறு லெவனை களமிறக்க முடியும். அந்த அளவுக்கு திறமை நிறைந்து கிடக்கிறது. மொத்தம் இருக்கும் 4 அட்டாகிங் இடங்களுக்கு 9 நட்சத்திர வீரர்கள் இருக்கிறார்கள். அதில் யாரை தேர்வு செய்வது என்பது யாருக்குமே தலைவலியாகத்தான் இருக்கும். 2014 உலகக் கோப்பையில் நெய்மர் காயமடைந்த பிறகு அந்த அணி தடுமாறியதுபோல் இம்முறை நடக்கப்போவதில்லை. ஏனெனில், அவருக்கு இணையாக விளையாடும் வீரர்கள் நிறையவே இருக்கிறார்கள்.

பலவீனம்:

அந்த அணியின் பலத்தையே பலவீனம் என்றும் சொல்லலாம். அதிக சூப்பர் ஸ்டார்கள் இருக்கும்போது யார் சரியான ஆப்ஷன் என்பது தேர்ந்தெடுப்பதே தலைவலியாக இருக்கும். ரொடேஷன் அணியை பாதிக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல் டிஃபன்ஸில் வேகம் சற்று குறைவாக இருப்பது பிரச்னையாக மாறலாம். 39 வயது டேனி ஆல்வ்ஸ், 38 வயது தியாகோ சில்வா ஆகியோரை புயல் வேக வீரர்கள் கொண்ட அணிகள் டார்கெட் செய்யலாம்.
image

நம்பிக்கை நாயகன்:

நெய்மரை நம்பி மீண்டும் ஒரு முறை களமிறங்கப்போகிறது பிரேசில். ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்து கால்பந்து உலகின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தவர், அவர்களைப் போலவே உலகக் கோப்பை வெல்லத் தடுமாறுகிறார். இருந்தாலும் இம்முறை நிச்சயம் அவரால் ஒரு பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியும். அவரை நம்பர் 10 வீரராகப் பயன்படுத்தும் பட்சத்தில் அது அணியின் வீரியத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. இதுவரை பிரேசில் அணிக்காக 75 கோல்கள் அடித்திருக்கும் நெய்மர், இன்னும் 2 கோல்கள் அடித்தால் பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பீலேவின் சாதனையை முறியடிப்பார்.

வாய்ப்பு:

இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு பிரேசில் அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. குரூப் பிரிவில் அந்த அணி அனைத்து போட்டிகளையுமே வெல்ல வேண்டும். ஸ்விட்சர்லாந்து தவிர்த்து மற்ற அணிகள் பெரிய சவாலாக இருக்கப்போவதில்லை. நாக் அவுட் போட்டிகளில் பெரிய அணிகளை சந்திக்கும் போது ஒரு அணியாக விளையாடினால் நிச்சயம் பிரேசில் ஆறாவது உலகக் கோப்பையை வெல்லலாம்.
image

ஸ்குவாடு:

ஆலிசன், எடர்சன், வேவர்டன், டேனி ஆல்வ்ஸ், டனிலோ, பிரெமர், மார்கீனியோஸ், எடர் மிலடாவ், தியாகோ சில்வா, அலெக்ஸ் டெயஸ், அலெக்ஸ் சாண்ட்ரோ, ஃபேபினியோ, ஃபிரெட், கசமிரோ, லூகாஸ் பகேடா, புரூனோ கிமாரஷ், எவர்டன் ரிபீரோ, நெய்மர், வினிசியஸ் ஜூனியர், ஆன்டனி, ரிச்சார்லிசன், கேப்ரியல் மார்டினெல்லி, கேப்ரியல் ஜீசுஸ், ரஃபினியா, ராட்ரிகோ, பெட்ரோ.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.