பிரியாணி சாப்பிட காரணம் தேவையா என்ன? மகிழ்ச்சி முதல் சோகம்வரை எந்த மனநிலைக்கும் பலருக்கும் பிரியாணியே மருந்து. அந்தக் கடை, இந்தக் கடை, எந்தக் கடை பிரியாணி சூப்பராக இருக்கும் என்று ஆராய்ந்துகொண்டிருப்பதற்கு பதில், நீங்களே உங்கள் வீட்டில் வித்தியாசமான, சுவையான வெரைட்டியான பிரியாணி தயாரித்து வீக் எண்டை கொண்டாடுங்கள்…

வான்கோழி பிரியாணி

தேவையானவை:

பாஸ்மதி அரிசி – அரை கிலோ

வான்கோழி – அரை கிலோ

வெங்காயம் – 2

புதினா – கொத்தமல்லி இலைகள் – 2 கைப்பிடி அளவு

தயிர் – கால் கப்

பச்சை மிளகாய் – 2

மிளகாய்த்தூள் – இரண்டரை டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) – 4 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்

பட்டை – 2 துண்டு

கிராம்பு – 4

ஏலக்காய் – 5

அன்னாசிப்பூ – 4

பிரியாணி இலை – 4

நெய் – 3 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

உப்பு – 3 டீஸ்பூன்

செய்முறை:

வான்கோழித் துண்டுகளை நன்றாகச் சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். வான்கோழித் துண்டுகளுடன் சிறிதளவு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்கு புரட்டி, சில நிமிடங்கள் ஊறவிடவும். வெங்காயத்தைத் தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலைகளை நன்றாகச் சுத்தம் செய்து, நறுக்கி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைத்துக்கொள்ளவும்..

ஒரு குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்து நன்கு சூடேறிய பின் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ சேர்க்கவும். அத்துடன் கீறிய பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி இலைகள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். ஊறவைத்திருக்கும் வான்கோழித் துண்டுகளை இதில் சேர்த்து, மேலும் சிறிதளவு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். தயிர் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிடவும். கொதித்தபின் குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து பாஸ்மதி அரிசி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்தபின் குக்கரை மூடி மீண்டும் இரண்டு விசில் விடவும். பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து, பிரியாணியை மெதுவாகக் கிளறி இறக்கவும். வான்கோழி பிரியாணி ரெடி.

கொத்துக்கறி பிரியாணி

தேவையானவை:

கொத்துக்கறி – 300 கிராம்

பாஸ்மதி அரிசி – 250 கிராம்

வெங்காயம் – ஒன்று

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்

தயிர் – 3 டேபிள்ஸ்பூன்

ஷாஜீரா (கருஞ்சீரகம்) – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

புதினா – ஒரு கைப்பிடி அளவு

கொத்தமல்லி இலைகள் – ஒரு கைப்பிடி அளவு

நெய் – 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

பட்டை – 2 துண்டு

கிராம்பு – 4

ஏலக்காய் – 5

அன்னாசிப்பூ – 4

பிரியாணி இலை – 4

உப்பு – ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைக் கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். சிறிதளவு கொத்தமல்லி இலையைத் தனியே எடுத்து வைக்கவும். ஒரு கடாய் அல்லது வாணலியில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும், பாதி அளவு பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய் சேர்க்கவும். பிறகு இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். கொத்தமல்லி, புதினா இலைகள் சேர்த்து கரும்பச்சை நிறமாக மாறும் வரை வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். ஷாஜீரா சேர்த்து வதக்கவும். கொத்துக்கறி சேர்த்து மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு மூடி போட்டு கறி நன்கு வேகும் வரை வேகவிடவும்..

அதேநேரம் வாணலியில் தண்ணீர் ஊற்றி பாதி பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய் சேர்த்துக் கொதிக்கவிடவும். களைந்து வைத்த அரிசியைச் சேர்த்துக்கொள்ளவும். சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து முக்கால் பதத்துக்கு வெந்ததும் வடித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடிகனமான, வாய் அகன்ற பாத்திரத்தில் பாதி அளவு வேகவைத்த சாதத்தைச் சேர்க்கவும். பிறகு வேகவைத்த கொத்துக்கறி மசாலாவைச் சேர்க்கவும். மீண்டும் வேகவைத்த சாதத்தைப் பரப்பி சிறிதளவு தண்ணீர் தெளித்து, சிறிதளவு கொத்தமல்லி இலையைத் தூவவும். மிதமான தீயில் 8 – 10 நிமிடங்கள் மூடி போட்டு வேகவிடவும். வெந்தபின் மெதுவாகக் கிளறிவிடவும். சூடான கொத்துக்கறி பிரியாணி ரெடி.

மீன் பிரியாணி

தேவையானவை:

பாஸ்மதி அரிசி – அரை கிலோ

வஞ்சிரம் – அரை கிலோ (மீடியம் சைஸ் – துண்டுகளாக நறுக்கவும்)

வெங்காயம் – 2

தக்காளி – 2

புதினா – கொத்தமல்லி

இலைகள் – 2 கைப்பிடி அளவு

பச்சை மிளகாய் – 2

மிளகாய்த்தூள் – இரண்டரை டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) – 4 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்

பட்டை – 2 துண்டு

கிராம்பு – 4

ஏலக்காய் – 5

அன்னாசிப்பூ – 4

பிரியாணி இலை – 4

முந்திரி – 10

உலர்திராட்சை – 15

நெய் – 3 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

உப்பு – 3 டீஸ்பூன்

செய்முறை:

வெங்காயம், தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலைகளை நன்றாகச் சுத்தம் செய்து, நறுக்கி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைத்துக்கொள்ளவும். மீன் துண்டுகளை நன்றாகச் சுத்தம் செய்து, அதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவிடவும். வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து ஊறிய மீன் துண்டுகளை இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறும் வரை பொரித்தெடுக்கவும்.

அதே நேரத்தில் அடிகனமான மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் மேல் கூறியவற்றில் பாதியளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பின்னர் சுத்தம் செய்த அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து முக்கால் பதத்துக்கு வேகவிடவும். வெந்தபின் சாதத்தை வடித்து எடுத்துக் கொள்ளவும்.

மீன் பொரித்த பாத்திரத்தில் நெய் மற்றும் மீதமுள்ள எண்ணெய் சேர்த்து, நன்கு காய்ந்த பின் மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ சேர்க்கவும். அதில் வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் புதினா, கொத்தமல்லி இலைகள், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பிறகு தக்காளியைச் சேர்த்து, அத்துடன் மீதமுள்ள மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதங்கிய பின் அரை கப் தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்கவிடவும். பிறகு பொரித்த மீன் துண்டுகளைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

அதே நேரத்தில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி, உலர்திராட்சை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும். மீன் மசாலா கொதித்தபின், வடித்த சாதத்தை மசாலாவின் மேல் மெத்தை போன்று பரப்பி விடவும். அதன் மேல் பொரித்துவைத்த முந்திரி, திராட்சையை நெய்யுடன் ஊற்றி, சிறிதளவு புதினா, கொத்தமல்லித்தழை தூவி, காற்று வெளியேறாதவாறு மூடியிடவும். இதை மிதமான தீயில் 10 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் கவனமாக பிரியாணியை மீன் துண்டுகள் உடையாதவாறு கலந்துவிடவும். மீன் பிரியாணி தயார்.

முட்டை பிரியாணி

தேவையானவை:

பாஸ்மதி அரிசி – அரை கிலோ

வேகவைத்த முட்டை – 6

முட்டை – 2

வெங்காயம் – 2

புதினா – கொத்தமல்லி இலைகள் – 2 கைப்பிடி அளவு

தயிர் – கால் கப்

பச்சை மிளகாய் – 2

மிளகாய்த்தூள் – இரண்டரை டீஸ்பூன்

மல்லித்தூள் – 4 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்

பட்டை – 2 துண்டு

கிராம்பு – 4

ஏலக்காய் – 5

அன்னாசிப்பூ – 4

பிரியாணி இலை – 4

நெய் – 3 டேபிள்ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

உப்பு – 3 டீஸ்பூன்

மிளகுத்தூள் – சிறிதளவு

செய்முறை:

வெங்காயத்தைத் தோல் நீக்கி, மெல்லிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலைகளை நன்றாகச் சுத்தம் செய்து, நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயை காயவைத்து, முக்கால் பங்கு வெங்காயத்தை நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் 3 முதல் 4 கப் தண்ணீர் ஊற்றி, பாதியளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்தபின், பாஸ்மதி அரிசி, தேவையான உப்பு சேர்த்து முக்கால் பதத்துக்கு வேகவிடவும். வெந்தபின் நன்கு தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.

பின்னர் அடிகனமான, வாய் அகன்ற பாத்திரத்தில் நெய், தேங்காய் எண்ணெயை சூடாக்கவும். மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ சேர்க்கவும். மீதமுள்ள வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், முக்கால் பங்கு புதினா, கொத்தமல்லி இலைகளை அதில் சேர்த்து, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். அதில் தயிர், ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். வேகவைத்த முட்டைகளைத் தோல் நீக்கி, கீறி கொதிக்கும் மசாலாவில் சேர்த்து மூடியிட்டு எண்ணெய் மேலே தெளியும் வரை சிறு தீயில் வேகவிடவும்.

ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள முட்டையை உடைத்து ஊற்றி சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும். பின்னர் வேகவைத்த சாதத்தை மசாலாவின் மேல் விரித்துப் போட்டு, அதன் மேல் சிறிது தண்ணீர் தெளித்து, மேலே மீதமுள்ள கொத்தமல்லி, புதினா இலைகளைத் தூவி, முட்டைக் கலவையைப் பரவலாக ஊற்றி, மூடிவிடவும். மூடியின் மேல் ஒரு கனமான பொருளை வைத்து, மிதமான தீயில்

15 முதல் 20 நிமிடம் சமைக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, மெதுவாகக் கிளறிப் பரிமாறவும். சுவையான முட்டை பிரியாணி ரெடி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.