மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,037-வது சதய விழா தஞ்சாவூர் பெரிய கோயிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பெரிய கோயில், ராஜராஜ சோழன் சிலை, மணி மண்படம் போன்றவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தஞ்சை நகரமே விழா கோலம் பூண்டிருந்தது. நேற்று காலை மங்கள இசையுடன் விழா தொடங்கியது. சதய நட்சத்திர தினத்தின் முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ராஜராஜ சோழன் சதய விழா

இதில் திருவையாறு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வும், தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளருமான துரை.சந்திரசேகரன் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வந்து ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஆனால் பதவி பறிபோகும் என்ற அச்சத்தில் கோயிலுக்குள் செல்லாமலேயே அவர் திரும்பி சென்று விட்டதாகப் பேசப்பட்டு வருகிறது.

ராஜராஜ சோழன்

இது குறித்து சிலரிடம் பேசினோம், “ராஜராஜ சோழன் சதய விழாவின் முக்கிய நிகழ்வே அவர் சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செய்வதுதான். இன்று காலை திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் மாலை அணிவிப்பதற்காக பட்டு வேட்டி, சட்டையில் வந்திருந்தார். கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது நடைப்பெற்ற பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவில் மறைந்த முதல்வர் கருணாநிதி பட்டு வேட்டி, சட்டையில் விழாவில் கலந்துகொண்டார்.

அதே போல் துரை.சந்திரசேகரன் ராஜராஜ சோழன் சதய விழாவுக்குப் பட்டு வேட்டி, சட்டையில் வந்திருந்ததை தி.மு.க நிர்வாகிகள், `மறைந்த தலைவர் பாணியில் அண்ணன் வந்திருக்கிறார்’ எனப் பேசிக்கொண்டனர். தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு துரை.சந்திரசேகரன் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து மற்றவர்கள் மரியாதை செய்தனர்.

பட்டு வேட்டி சட்டையில் துரை.சந்திரசேகரன்

பின்னர், கோயிலுக்குச் சென்றால் பதவி பறிபோகும் என அரசியல்வாதிகளிடையே நிலவும் சென்டிமென்ட்டை கருத்தில் கொண்டு அந்த பயத்தில் துரை.சந்திரசேகரன் செல்லாமலேயே திரும்பி சென்று விட்டார். அவர் மட்டுமல்ல அவருடன் வந்த மற்ற தி.மு.க நிர்வாகிகளும் கோயிலுக்குள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தருமபுர ஆதீனம் திருக்கோயில் பணியாளர்களுக்கு கோயில் வளாகத்துக்குள் புத்தாடை வழங்கினார். அதில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டார். முன்னதாகவே சிலை இருக்கும் இடத்துக்குச் சென்றுவிட்ட சந்திரசேகரன் அவர்கள் வரும்வரை கோயிலுக்குள் செல்லாமல் காத்திருந்தார். அங்கிருந்தவர்கள், `கோயிலுக்கு உள்ளே போறதுக்கு துரை.சந்திரசேகரனுக்கு அச்சம்’ என கிசு கிசுத்தனர். `மறைந்த தி.மு.க முதல்வர் கருணாநிதி போல் உடையணிந்து வந்தார். ஆனால் கோயிலுக்குள் செல்லவில்லை’ என கமென்ட் அடித்ததும் சலசலப்பை ஏற்படுத்தியது” என்றனர்.

பெரியகோயில்

துரை.சந்திரசேகரன் தரப்பினரோ, “எத்தனையோ தடவை கோயிலுக்குள் சென்று வந்தவர் துரை.சந்திரசேகரன். சதய விழா இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதற்கு கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பியவர் துரை.சந்திரசேகரன். அதை பரிசீலித்த பிறகே முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் சென்டிமென்ட் காரணமாக அவர் கோயிலுக்குள் செல்லவில்லை என வேண்டாதவர்கள் கிளப்பி விடுகின்றனர்” என்று தெரிவித்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.