வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

சூரியன் வேறொரு கண்டத்தில் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தனது மேற்கேனும் வீட்டிலிருந்து எட்டிப் பார்க்கும் ஓர் வேளையில் வாய்க்கால் வரப்புகளில் படர்ந்திருக்கும் புற்கள் எனது கால்களுக்கு ஒத்தடம் தர அதன் மீது நடந்து கொண்டிருந்தேன்.

எங்கெங்கும் பச்சை பட்டாடை உடுத்தி பசுமை போர்த்திக் கொண்டிருக்கும் வயல் வரப்பு களிடையே ஒற்றையாய் வீற்றிருந்த ஓர் கருவேல மரம் கண்ணில் படர சிற்றிலைகளாலும், சிறு பூக்களாலும் சிகை அலங்காரம் செய்து கொண்டு நின்ற அந்த மரத்தின் அடிவாரம் ஓட்டை விழுந்த குடைக்குள் நிற்பதைப் போன்று தோற்றமளித்தது.

காலை நேர களைப்பிலிருந்து விடுபடாத வாய்க்கால் தண்ணீர் எவ்வித சலசலப்பு மின்றி கண்ணாடி பிம்பமாய் பளீரென்று இருந்தது. அதுவழியே என்னைப் பார்க்கையில் எனது பிம்பமொன்று எனது மறு உருவமாய் தண்ணீருக்குள் தெரிந்தது.

Representational Image

திடீரென எனது தலைக்கு மேலே ஓருருவம் தமது இரு இறக்கைகளை காற்றில் விரித்தபடி பறந்து கொண்டிருந்தது.

சிரம் தூக்கி மேலே பார்க்கிறேன், திடீரென தனது இறக்கைகளை குறுக்கி இறங்கி வந்து அந்த கருவேல மரத்திலமர்ந்து தமது கூரிய நகங்களால் அந்த மரத்திலுள்ள கிளையின் சதை பற்றி அமர்ந்தது.

அது ஒரு ‘குயில்’,

நெடுந்தூர பேருந்து பயணங்களில் காலை சிற்றுண்டிக்கு நெடுஞ்சாலை உணவகத்தில் வந்திறங்கும் பயணியைப் போன்று பசியின் களைப்பு அதன் கண்களில் தெரிந்தது.

சிறிது நேரத்தில் தனது சுற்றும் முற்றும் ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு தமது வயிற்றுப் பசிக்காக பயணிகளைப் பார்த்து பாடும் ரயில் பாடகரைப் போன்று வாய்க்கால் வரப்பில் வளைந்தாடும் புற்களைப் பார்த்து தன் ‘வயலின்’ அலகுகளைப் பிரித்து புன்முறுவல் பூத்திட அழகிய புல்லாங்குழலிசை மீட்டது.

அதன் குழலிசை கேட்டதும் மகுடிக்கு மயங்கும் பாம்பைப் போன்று வயல், வரப்புகளில் வீற்றிருக்கும் புற்கள் அசைந்தாடின, அதன் பாதங்களில் பள்ளிகொண்ட மென்தசை போர்த்திய புழுக்கள் யாவும் பயந்தோடின.

அதனைப் பார்த்ததும் பறவையைக் கண்ட வேடனைப் போல், தன்னிரையைக் கண்டதும் அதுவரையில் களைப்புற்று கிடந்த பறவையின் கண்கள் பரவசத்தில் மின்னியது.

அதுவரையில் அழகாய் பாடிய அப்பறவையின் அலகுகள் ஆயுதமாய் மாறி சதை போர்த்திய புழுக்களை வதை செய்ய ஆயத்தமானது.

சற்று முன்பு வரை புற்களை மயக்கிக் கொண்டிருந்த புல்லாங்குழலான பறவையின் அலகுகள் புழுக்களை பிய்க்கும் பெருங்கோடரியாய் மாறி தம் மேனி முழுதும் மென் தசையைப் போர்த்திக் கொண்டிருந்த புழுக்களின் சதையை கொத்தி கிழித்தது.

அதுவரையில் தென்றலாய் எனை தீண்டிய பறவையின் ராகம் அது புழுக்களின் சோகம் என அறிந்ததும் பெரும் ஓலமாய் என் செவிக்குள் ஒலித்து மறைந்தது…

எண்ணமும் எழுத்தும்

பாகை இறையடியான்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.