காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவரும் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்டகாலமாக முட்டல் மோதல் இருந்துவருகிறது. முதல்வர் நாற்காலியை மையமாக வைத்து இருவருக்கும் இடையே அதிகாரப் போட்டி நடைபெற்றுவரும் நிலையில்தான், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட்டை கொண்டுவர காங்கிரஸ் மேலிடம் விரும்பியது.

அசோக் கெலாட்

கெலாட் கட்சித் தலைவராகிவிட்டால், முதல்வர் பதவி தனக்கு கிடைக்கும் என்று சச்சின் கணக்குப்போட்டார். கட்சித் தலைவர் பதவிக்கு கெலாட் செல்லும் பட்சத்தில், சச்சின் பைலட்டை முதல்வராக்க சில முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கு எதிராக, அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கினர். 200 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட் ராஜஸ்தானில், சுமார் 90 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் அளித்ததாக செய்தி வெளியானது. அப்போது காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக மல்லிகார்ஜூன கார்கேயும், அஜய் மாக்கனும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

காங்கிரஸ் கட்சித் தலைவரா, ராஜஸ்தான் முதல்வரா என்று கேள்வி எழுந்தபோது, முதல்வராக இருப்பதென்று கெலாட் முடிவுசெய்தார். அதனால், சச்சினின் முதல்வர் கனவு தகர்ந்தது. ஆனாலும், இவர்கள் இருவருக்கும் இடையிலான உட்க்கட்சிப் போர் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.

மோடி

இந்த நிலையில்தான், ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் அசோக் கெலாட் ஆகிய இருவரும் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சி நவம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. குஜராத் முதல்வர் பூபேந்திர சிங் படேல், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், மத்தியப்பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல் உட்பட பலரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதில் பேசிய கெலாட், பிரதமர் மோடியைப் பாராட்டினார். “ஒரு காலத்தில் அடிமைகளாக இருந்த நாம், இன்றைக்கு பல உயரங்களைத் தொட்டிருக்கிறோம். பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. காரணம், மகாத்மா காந்தியின் தேசத்துடைய பிரதமர் இவர். இந்த தேசத்தில் ஜனநாயக வேர் வலுவாகவும் ஆழமாகவும் வேரூன்றியிருக்கிறது. சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பிறகும், இங்கு ஜனநாயகம் உயிருடன் இருக்கிறது. அப்படிப்பட்ட நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வருகிறார் என்பதை உலகம் உணர்ந்திருக்கிறது. அதனால்தான், சிறப்பான வரவேற்பு பிரதமர் மோடிக்கு கிடைக்கிறது” என்று கெலாட் பேசினார்.

பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, `மூத்த முதல்வர்களில் ஒருவர்’ என்று கெலாட்டை பாராட்டினார். “சக முதல்வர்களாக நானும் கெலாட்டும் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். இப்போதும் கெலாட் மூத்த முதல்வராக இருக்கிறார். இந்த மேடையில் அமர்ந்திருக்கும் முதல்வர்களில்கூட, கெலாட் தான் மூத்த முதல்வர்” என்று மோடி பாராட்டினார்.

அந்த நிகழ்வு, காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு தரப்பினரிடம் புகைச்சலை உண்டாக்கியிருக்கிறது. ஜெய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், “காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், மாநிலங்களவையில் இருந்து விடைபெற்ற நாளில், அவரை எவ்வாறு பிரதமர் மோடி புகழ்ந்து பேசினாரோ அதைப் போலவே அசோக் கெலாட்டையும் அவர் புகழ்ந்து பேசியிருக்கிறார்” என்றார்.

சச்சின் பைலட்

மேலும், “குலாம் நபி ஆசாத்தை பிரதமர் மோடி புகழ்ந்து பேசியதை அடுத்து என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பிரதமர் மோடி, அசோக் கெலாட்டை புகழ்ந்ததை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்றார் சச்சின். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த குலாம்நபி ஆசாத், காங்கிரஸை கடுமையாக விமர்சித்துவிட்டு கட்சியிலிருந்து வெளியேறினார். பிறகு, தனிக் கட்சி தொடங்கினார். தற்போது, கெலாட்டை மோடி புகழ்ந்திருப்பதை, குலாம்நபி ஆசாத்துடன் ஒப்பிட்டு சச்சின் பேசியிருக்கிறார். இதன் மூலம், கெலாட்டும் காங்கிரஸை விட்டு வெளியேறிவிடுவார் என்பதை மறைமுகமாகக் சச்சின் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், மோடியை குலாம்நபி ஆசாத் புகழ்ந்ததற்கும், கெலாட் புகழ்ந்ததற்கும் அடிப்படையில் வித்தியாசம் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

“பிரதமர் மோடி குடும்பம், குழந்தைகள் இல்லாதவர் என்பதால் அவரை முரட்டுத்தனமானவர் என்று கருதினேன். ஆனால், அவர் மனிதாபிமானம் படைத்த மனம் கொண்டவர் என்பதை பின்னர் தான் உணர்ந்து கொண்டேன்” என்று மோடி குறித்து குலாம் நபி ஆசாத் பேசினார்.

அசோக் கெலாட்

மேலும், `2007-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக நான் இருந்தபோது, காஷ்மீர் சுற்றுலா வந்த குஜராத் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் உயிரிழப்பு ஏற்பட்டது. அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்தவர் நரேந்திர மோடி. அந்த நிகழ்வை பற்றி இத்தனை ஆண்டுகள் கழித்து மாநிலங்களவையில் நடைபெற்ற எனது பிரிவு உபசார விழாவில் பிரதமர் நினைவு கூர்ந்தார். அப்போது, உணர்ச்சிவயப்பட்டு அவர் கண்ணீர் சிந்தினார்.

நானும் கண்ணீர் வடித்தேன். அவரது பேச்சை காங்கிரஸார் அறியாமையுடன் திரித்துப் பேசுகின்றனர்’ என்று குலாம் நபி ஆசாம் குறிப்பிட்டார். ஆனால், இதுபோல தனிப்பட்ட பாராட்டை மோடிக்கு கெலாட் தெரிவிக்கவில்லை. இது மகாத்மா காந்தியின் தேசம் என்று குறிப்பிட்ட கெலாட், இந்திய நாட்டின் அடிப்படை குணாம்சமான ஜனநாயகத்தைத் தூக்கிப்பிடித்துப் பேசியிருக்கிறார். கெலாட்டுக்கு பா.ஜ.க வலைவிரிக்கலாம். அந்த வலையில் கெலாட் விழமாட்டார் என்பது அவரது பாராட்டுரையை உன்னிப்பாகப் பார்க்கும்போது தெரிகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மேலும் காந்தி குடும்பத்தை சேராதவர்களுக்கு தான் கட்சி தலைவர் பதவி என்றதும், அவர்களின் முதல் சாய்ஸாக இருந்ததும் கெலாட் தான். அந்த அளவுக்கு தலைமைக்கு நெருக்கமானவர். அவர் தனக்கு முதல்வர் பதவி தான் வேண்டும் என்று தலைவர் ரேஸில் இருந்து விலகிய பின்னர் தான் மல்லிகார்ஜூன கார்கே உள்ளே வந்தார். அதனால் கெலாட் தலைமையுடன் நெருக்கமாக உறவில் நீடிப்பது உறுதி ஆகிறது என்ற பார்வையும் இங்கு முக்கியம் பெறுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.