நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதியின் வாடகைத் தாய் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில், விசாரணை செய்து வந்த தமிழக மருத்துவத்துறை அறிக்கையுடன் ஒட்டுமொத்த சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

பிரபல நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இருவரும் சென்னை மாமல்லபுரத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். இதையடுத்து, கடந்த 9-ம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளதாக புகைப்படம் ஒன்றினைப் பகிர்ந்து சமூகவலைத்தளம் வாயிலாக அறிவித்தனர்.

இது ஒருபுறம் அவர்களது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், திருமணமான 4 மாதங்களில் குழந்தை பிறந்தது குறித்து பல்வேறு சர்ச்சை கேள்விகள் எழுப்பப்பட்டது. குறிப்பாக வாடகைத் தாய் விதிமுறைகளை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி பின்பற்றினார்களா? என சமூக வலைத்தளத்தில் கருத்து மோதல்களும் நிலவியது.

இதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, இதுதொடர்பாக மருத்துவத் துறை சேவைகள் துணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தார்.

image

இந்த விசாரணையின் போது 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதற்கும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறும் முறையில் ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுதொடர்பான மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில், ஐசிஎம்ஆர்-ன் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக தமிழக மருத்துவத்துறை அறிக்கை அளித்துள்ளது. மேலும், 11.03.2016-ம் ஆண்டே பதிவுத்திருமணம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ அறிக்கை:

விசாரணையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் அத்தம்பதியர் குழந்தை பெற்றுக்கொண்டதாக தெரிய வந்தது. அம்மருத்துவமனை மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் வாடகைத்தாய்க்கு பேறுகால சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமும் நேரடி விசாரணை இக்குழுவால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அச்சிகிச்சை தொடர்பான விசாரணையில் கீழ்காணும் ஆய்வு குறிப்புகள் அறிவிக்கப்படுகிறது.

• இவ்விசாரணையில் இத்தம்பதியர்கள் (Intending Couple) மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன (ICMR) செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

• ICMR வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவு 3.10.5-ன் படி வாடகைத்தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

• இத்தம்பதியருக்கு (Intending Couple) பதிவு திருமணம் 11.03.2016-இல் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

• ICMR வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவு 3.16.2-ன் படி மேற்காணும் தம்பதியர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த மருத்துவச்சான்று விசாரணைக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

image

• தனியார் மருத்துவமனையில் தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது 2020-ல் அவர்களது குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார். அக்குடும்ப மருத்துவரின் முகவரியில் விசாரணை செய்தபோது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அத்தொலைபேசி எண்கள் உபயோகத்தில் இல்லை. மேலும் விசாரணையில் அம்மருத்துவர் வெளிநாடு சென்றுவிட்டதாக தெரிய வருவதால் அக்குடும்ப மருத்துவரிடம் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை.

• சினைமுட்டை சிகிச்சை சம்மந்தமான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள் மருத்துவமனையால் முறையாக பராமரிக்கப்படவில்லை.

• ஆகஸ்ட் 2020 மாதத்தில் சினைமுட்டை (Oocytes) மற்றும் விந்தணு பெறப்பட்டு கருமுட்டைகள் (Embroyo) உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு நவம்பர் 2021 மாதத்தில் வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டது. மார்ச் 2022-ல் கருமுட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு இக்குழந்தைகள் அக்டோபர் மாதம் பிரசவிக்கபட்டுள்ளாதாக தெரிய வருகிறது.

• செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வாடகை தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டத்திற்கு முந்தைய ICMR வழிகாட்டுதலின்படி உறவினர் அல்லாதோர் வாடகைதாயாக செயல்படவும் அவசிய செலவிற்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது. விசாரணையில் வாடகைத்தாய் பேறுகாலத்தின்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் 09.10.2022 அன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் தனியார் மருத்துவமனையில் கீழ்கண்ட குறைபாடுகள் இக்குழுவால் கண்டறியப்பட்டது.

• ICMR வழிகாட்டு முறைகளின்படி, மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்கள் மற்றும் வாடகைத்தாயின் உடல் நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இதுகுறித்த ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை.

எனவே, மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.