மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டும், மாணவர்களிடையே காவல்துறையின் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், கரூர் மாவட்ட காவல்துறை முயற்சி செய்தது. அப்படி கரூர் மாவட்டம், புலியூர் கவுண்டம்பாளையம் அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 40 மாணவ மாணவியர்கள் மாவட்ட ஆயுதப்படை வளாகம் வரவழைக்கப்பட்டு, ஆயுதக் கிடங்கு, மோப்பநாய் படைப் பிரிவு ஆகிய இடங்களைச் சுற்றிக் காண்பிக்கப்பட்டனர்.

அங்கிருந்த நாயைப் பார்த்ததும் உற்சாகமான மாணவர்கள், ‘ஹைய்… எங்களுக்கு நாய்ன்னா உயிர்’ என்று குதூகலமடைந்தனர். காவல்துறையினரின் வழிகாட்டுதலோடு, மோப்ப நாயும் மாணவர்களோடு அளவளாவி, அவர்களின் அன்பு மழையில் நனைந்தது. தொடர்ந்து அவர்களுக்குப் பல்வேறு விதமான ஆயுதங்கள் பற்றியும், அவற்றை இயக்கும் விதங்கள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. குற்றச் சம்பவங்கள் மற்றும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றியும் விளக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு வீர வணக்க சின்னம் காண்பிக்கப்பட்டு, வீர வணக்க நாளின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

மாணவர்களுக்கு பரிசு வழங்கும் எஸ்.பி சுந்தரவதனம்

அதனைத் தொடர்ந்து, காவலர் வீர வணக்கம் நாள் அனுசரிப்பதின் நோக்கம் மற்றும் பணியில் உயிர் நீத்த தியாகிகள் பற்றியும் மாணவ மாணவிகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர். இதையடுத்து, மாணவ, மாணவிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்களைச் சந்தித்து உரையாடினர். அப்போது, தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருள்களையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், மாணவர்கள் வழங்கினர்.

அதேபோல், எஸ்.பி சுந்தரவதனமும், “அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளான நீங்கள் படிப்பில் நல்ல கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்கள், பெற்று அரசு அதிகாரிகளாக வரவேண்டும். காவல்துறையில் வர நினைக்கும் மாணவர்கள், இந்தத் துறையில் அளப்பரிய சாதனைகளைப் புரிய வேண்டும். அதற்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள்” என வாழ்த்தினார். மேலும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்ட பரிசுப் பொருள்களையும் வழங்கினார்.

இதுபற்றி பேசிய காவலர்கள் சிலர்,

“காவலர்கள் மீது பொதுமக்களுக்கு இருக்கும் அச்சத்தைப் போக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். அதேபோல், மாணவர்களுக்குக் காவல்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களைப் புரியவைக்கும்போது, அவர்களுக்குக் காவல்துறை மீது ஒரு ஈர்ப்பு வரும்.

எஸ்.பியோடு உரையாடும் மாணவர்கள்

தவிர, நேர்மையாக இருக்க வேண்டும், லட்சியத்தை நெஞ்சில் தாங்கி, அதை நோக்கி வீரநடை போட வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும். அதுவும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கவும் இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.பி சார் ஏற்பாடு செய்தார். மாணவர்களும் ஆர்வத்தோடு வந்து, பல விஷயங்களைத் தெரிந்துகொண்டனர்” என்றார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.