விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள கிளியனூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுகுமார். இவரின் 5 வயது மகள், கிளியனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் இச்சிறுமிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, தைலாபுரம் அருகே உள்ள ஈச்சங்காடு சாலையில் தனியார் கிளினிக் நடத்தி வரும் கணேசன் என்பவரிடம் சிகிச்சை பெறுவதற்காக தன் குழந்தையை 18.09.2022 அன்று மாலை 6 மணிக்கு அழைத்துச் சென்றுள்ளார் சுகுமார். அங்கு சிகிச்சை பெற்று திரும்பிய சிறுமி, மறுதினம் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு உடல்நிலை மேலும் மோசமாகியுள்ளது. அன்று மாலையே உடலின் பின்புறம் கருநிறமாக மாறி, கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன.

கிளினிக்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்; கணேசன்

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அன்றிரவே அருகிலுள்ள தைலாபுரம் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். பின், மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், ஈச்சங்காடு பகுதியில் தனியார் கிளினிக் வைத்திருக்கும் கணேசன், உப்புவேலூர் அரசு மருத்துவமனையில் ஆண் செவிலிய உதவியாளராக பணிபுரிபவர் என்பதும், அவர் போலியாக கிளினிக் வைத்து நடத்தி வந்ததும் அதன் பின்னர் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், சிறுமியின் உடல்நிலை மோசமாகிப் போயுள்ளது. அதனால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட மேல் சிகிச்சைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே, தவறான சிகிச்சை அளித்த  கணேசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 21.09.2022 அன்று கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சிறுமியின் தந்தை சுகுமார். ஆனால், நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தப்பட்டதால், ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் 25.09.2022 அன்று திண்டிவனம் – புதுவை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த 5 வயது சிறுமி

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, கணேசனின் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர். மேலும், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு, மருத்துவம் போதிய பலன் அளிக்காமல், உடலில் நோய் தொற்று மேலும் அதிகரித்து, உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி நேற்று மாலை 4 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால், கடும் சோகத்தில் ஆழ்ந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள். உரிய நியாயம் வேண்டி உடலை வாங்க மறுத்து வருகின்றனர். 

சாலை மறியல்

இது தொடர்பாக நம்மிடையே பேசிய சிறுமியின் உறவினர்கள் தரப்பு வழக்கறிஞர் வீரசந்திரன், “போலி கிளினிக் வைத்து நடத்தி, தவறான சிகிச்சை அளித்தவர் மீது 388-வது ஐ.பி.சி பிரிவின் கீழ் மட்டும் தான் வழக்கு பதிந்துள்ளது போலீஸ். எனவே, கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் மாற்றி வழக்கு பதியப்பட வேண்டும். இனி வரும் காலங்களில் போலி டாக்டர்கள் உருவாகாத படி அந்த சட்ட பிரிவுகள் அமைய வேண்டும். மேலும், குழந்தையின் பெற்றோருக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். அதுவரை சிறுமியின் உடலை வாங்குவதாக இல்லை” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.