தீபாவளி வழிபாட்டுத் தெய்வங்களில் கங்கை மிகவும் முக்கியத் துவம் பெறுகிறாள். கங்கையானவள் பூலோகத்திற்கு மட்டும் உரியவள் அல்ல; ஆகாய லோகத்திற்கும், பாதாள லோகத் திற்கும் உரியவள் என்கிறது விஷ்ணு புராணம். இதேபோல் மகாபாரதமும் கங்கையின் மகிமை குறித்து ஒரு ரகசியம் சொல்கிறது!

அதிசயங்கள் நிகழ்த்தும் கங்கையின் பெயர்கள்!

ன் முன்னோரான சகர மைந்தர்கள் நற்கதி அடைய, பகீரதன் பெருந்தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த திருக் கதை நாமறிந்ததே. எனினும் கங்காதேவி பூலோகத்துக்கு மட்டு மன்றி இதுபோன்று இன்னும் பல கங்கா மகாத்மியங்களைப் பெரி யோர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர்.

“கங்காதேவியே, யமனிடமிருந்து மீட்கும் சக்தி உன் ஒரு துளி புனித நீருக்குதான் இருக்கிறது’ என்கிறார் மகாகவி காளிதாசன்.

கங்கையின் மகத்துவம் குறித்து வால்மீகி முனிவர், “கங்கையே, எனக்கு பெரிய அரச பதவி வேண்டாம். உன் கரையில் உள்ள மரத்தில் கூடு கட்டி வாழும் ஒரு பறவையாக நான் பிறந்தால் அதுவே போதும். அல்லது உன்னிடம் வாழும் ஓர் ஆமையாகவோ, மீனாகவோ, புழுவாகவோ ஜன்மமெடுத்தால்கூட போதும்’ என்கிறார்.

மகாபாரதம், “கங்கையில் நீராடினவர்களின் ஏழு தலைமுறை களுக்கு பாவம் அணுகாது. ஒரு மனிதனின் அஸ்தி கங்கை நீரில் தொட்டுக் கொண்டிருக்கும் வரை அந்த மனிதன் சொர்க்கத் திலே பெருமைப்படுத்தப்படுவான். புனித கங்கையில் யார் நீராடினாலும் பிறந்த நாளிலிருந்து அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கிவிடும்’ என்கிறது.

“கங்கையே, மூன்று உலகங்களுக்கும் ஆதாரம் நீ. நீயே எனக்கு சம்சாரத்தைக் கடக்கும் வழியாக இருக்கிறாய். யாருடைய இதயத் தில் கங்கை மீது பக்தி இருக்கிறதோ அவர்களுக்கு முக்தி எளிது’ என்கிறார் ஆதிசங்கரர்.

ஜானவி, திரிபதாகை, பாகீரதி, தேவிநதி, மந்தாகினி, வரநதி, உமைசுர நதி, தசமுகை நதி, சிர நதி, தெய்வ நதி, விமலை என பல்வேறு திருப்பெயர்களால் கங்கையைச் சிறப்பிக்கின்றன புராணங்கள். தீபாவளி கங்காஸ்நானத்தின்போது இந்தத் திருப்பெயர்களை பக்திபூர்வமாக உச்சரித்து மனதார கங்கையை வழிபட, நம் பாவங்கள் நீங்கும்; புண்ணியம் பெருகும். வாழ்வில் பல அதிசயங்கள் நிகழும்!

தீபாவளியில் அன்னபூரணியிடம் எப்படிப் பிரார்த்திக்க வேண்டும்?

காசியில் கங்கா ஸ்நானமும், விஸ்வநாதரின் தரிசனமும் எவ்வளவு முக்கி யமோ, அதே அளவுக்கு அன்னபூரணி தரிசனமும் சிறப்புமிக்கது. ஆதிசங்கரர் காசி சென்று அன்னபூரணி மீது ஸ்தோத்திரம் பாடினார். `கருணையின் பற்றுக்கோடான தாயே! அன்னபூரணியே… பிக்ஷை இடு. உலக அன்னையான பார்வதியே எனக்கு அம்மா; பரமேஸ்வரனே அப்பா; உலகமே வீடு. உலக உயிர்கள் அனைத்தும் சொந்தங்கள்!’ என்று குறிப்பிட்டுள்ளார். நாம் ஒவ்வொருவரும் நலமாக உணவு பெற்று வாழ வேண்டும் என்பதே சங்கரரின் நோக்கம் என்பதை இந்த ஸ்தோத்திரம் எடுத்துக் காட்டுகிறது.

அந்த அம்பிகையிடம் அன்னத்தை கேட்டுப் பெறுவதுடன், இன்னொன்றையும் அவர் வேண்டுகிறார். வெறும் உணவைத் தின்று உடலை வளர்ப்பதால் பயனில்லை. அவளின் அருளைப் பெற்று ஞானம் வளர்ப்பதே பிறவிப்பயன். அதனால்,சங்கரர் அன்னபூரணியிடம் இறுதியாக, ‘அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே! ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி!’ என்று அன்னத்தோடு, ஞான வைராக்கியத்தையும் பிக்ஷையிடும்படி வேண்டுகிறார். நாமும் அவர் வழியில் காசி அன்னபூரணியை மனதார துதித்து அருள்பெற வேண்டும்.

மணமாலை அருள்வாள் மகாலட்சுமி!

மிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும், மந்தர மலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்த திருக்கதை நமக்குத் தெரியும். அப்போது, முதலில் ஆலகால விஷம் வந்தது. உலகையும் உயிர்களையும் காக்கும் பொருட்டு, அந்த விஷத்தை சிவபெருமான் ஏற்று திருநீலகண்டன் ஆனார்.

தொடர்ந்து பாற்கடல் கடையப்பட்டது. அதன் பலனாக அடுத்தடுத்து ஐராவதம், உச்சைச்ரவஸ் எனும் குதிரை, காமதேனு, கற்பக விருட்சம், சந்திரன், மூதேவி ஆகியோர் தோன்றினர். பின்னர் பேரெழில் பெட்டகமாக, கோடி சூரிய பிரகாசத்துடன் திருமகள் தோன்றினாள். அவளை மணந்துகொள்ள அனைவரும் போட்டி போட்டனர்.

ஆனால் திருமகள் சலனமோ, ஆசைகளோ இல்லாமல் இருந்த திருமாலே தனக்குக் கணவனாக வர வேண்டும் என்று விரும்பி, தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தாள். அப்போது மூத்தாள், ‘நானே முதலில் தோன்றியவள் என்பதால், எனக்கே முதலில் திருமணம் நடைபெற வேண்டும்’ என்று வாதிட்டாள். ஆனால், அவளை மனைவியாக ஏற்க ஒருவரும் முன்வரவில்லை.

அப்போது அங்கு வந்த உத்தாலகர் என்ற முனிவர், மூத்தாளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், தமது தவ வலிமையால் அவளைப் பரிசுத்தப்படுத்து வதாகவும் கூறி மூத்தாளை மணந்துகொண்டார்; திருமகளை திருமால் மணந்தார். திருமகளின் திருமண நாளைக் கொண்டாடும் வகையிலும் வரிசையாக தீபங்கள் ஏற்றி தீபாவளி கொண்டாடப்படுகிறது என்பார்கள்.

இந்த நன்னாளில் லட்சுமிகுபேரபூஜை செய்தும், தீபங்கள் ஏற்றி வைத்து தீபலட்சுமியாகவும் அலைமகளை வழிபடுவோருக்கு சகல சம்பத்துகளும் உண்டாகும். லட்சுமிதேவியின் கல்யாணம் நடந்த் நாள் அல்லவா… ஆகவே, இந்த தினம் தன்னை வழிபடுவோருக்கு கல்யாண வரமும் மாங்கல்ய பலமும் அருள்வாள் என்பது நம்பிக்கை.

குபேரனின் தந்தை யார் தெரியுமா?

விச்ரவசு என்றொரு முனிவர்; சிறந்த சிவபக்தர். அவர் யாகம் ஒன்று செய்ய விரும்பினார். ஆனால், திருமணம் ஆனவர்களே யாகம் செய்ய முடியும் என்பதால், பரத்வாஜ முனிவரின் மகளை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வைஸ்ரவணன் என்று பெயர் வைத்தார்.

தந்தையைப் போலவே இவனும் பக்திமானாக இருந்தான். ஒருநாள் பெற்றோரிடம் சென்று, தான் பிரம்மனைக் குறித்து தவமியற்றப் போவதாகச் சொன்னான். அவர்களுக்கும் அதில் மகிழ்ச்சியே! அவனை மனதார ஆசீர்வதித்து அனுப்பினர். வைஸ்ரவணன் அமைதியான ஓரிடத்துக்குச் சென்று, கடும் தவத்தில் மூழ்கினான். அது சாதாரண தவம் இல்லை. முதலில் ஆகாரமின்றி தண்ணீரை மட்டுமே அருந்தி தவமிருந்த வைஸ்ரவணன், பிறகு தண்ணீரையும் தவிர்த்து வெறும் காற்றை மட்டுமே புசித்தபடி தவத்தைத் தொடர்ந்தான்.

அவனது பக்தி வைராக்கியத்தைக் கண்டு அகமகிழ்ந்த பிரம்ம தேவன், அவன் முன் காட்சி தந்தார். ‘`என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டார். ‘`தங்களைத் தரிசித்ததே பெரும் பாக்கியம். இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?’’ என்று பணிவுடன் கூறினான் வைஸ்ரவணன்.

இதனால் மேலும் மகிழ்ந்த பிரம்மதேவன், அவனை அஷ்டதிக் பாலகர்களில் ஒருவனாகவும், எல்லாச் செல்வங்களையும் பாது காக்கும் அதிபதியாகவும் நியமித்தார்.

இப்படி அருள்பெற்ற வைஸ்ரவணனே குபேரன் ஆவார். தீபாவளி தினத்தில் பூஜிக்கவேண்டிய தெய்வங்களில் இவரும் ஒருவர். அன்று இவரை வழிபட, வறுமைகள் அகன்று நமது வாழ்வு வளம் பெறும்.

அர்த்தநாரீஸ்வரரை தரிசிப்போம்!

சிவமும் சக்தியும் வேறு வேறல்ல என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பினாள் அன்னை சக்தி. அதன்பொருட்டு பூலோகம் வந்தவள், கௌதம முனிவரின் ஆசிரமத்தை அடைதாள். முனிவரின் ஆலோசனைப்படி கடும் விரதமும் தவமும் இருந்து சிவனாரை வழிபட்டாள். அதன் பலனாக உமையவளுக்கு பரமேஸ்வரரின் திருமேனியில் ஒருபாதி இடம் கிடைத் தது. இந்த அருட்சம்பவம் நிகழ்ந்தது ஒரு தீபாவளித் திருநாளில்தான் என்பர்.

அம்பிகை கடைப்பிடித்தது கேதாரீஸ்வர விரதம். இப்போது அம்பிகைக்கும் சேர்த்து கேதாரகௌரி விரதமாகக் கடைப் பிடிக்கிறார்கள். புரட்டாசி மாதம் வளர் பிறை தசமி திதி நாளில் இருந்து துவங்கி ஐப்பசி அமாவாசை வரையிலும் 21 நாட்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. இயலாதவர்கள் கடைசிநாளில் மட்டுமாவது விரதம் இருந்து, அம்மையப்பனை அர்த்தநாரீஸ்வர திருவடிவில் தியானித்து வழிபடுவது, சகல நன்மை களையும் கொண்டு வந்து சேர்க்கும்.

ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்திரம்

ஸ்ரீ சக்ரமத்யே வசந்தீம் – பூத

ரக்ஷ : பிஸாசாதி துஷ்டான் ஹரந்தீம்

ஸ்ரீ காமகோட்யாம் ஜ்வலந்தீம் – காம

ஹீனைஸ்ஸு காம்யாம் பஜே தேஹிவாசம்

கருத்து: ஸ்ரீசக்ரத்தின் மத்தியில் வசிப்பவளும், பூதம், பிசாசம் முதலான துஷ்ட சக்திகளை அழிப்பவளும், ஸ்ரீகாமகோடியில் ஜொலிப்பவளும், காமம் அற்றவர்களால் எளிதில் அடையக் கூடியவளுமான உன்னை பூஜிக்கிறேன். ஓ காமாக்ஷி… வாக்கு முதலான வரங்களைக் கொடுக்க வேண்டும்.=

தீபாவளித் திருநாளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, ஸ்ரீகாமாக்ஷி அம்மையைப் போற்றும் இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சர்வ மங்கலங்களும், சம்பத்துக்களும் நம்மை வந்தடையும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.