நாய்கள் நன்றியுள்ள பிராணியாகவும் காவலாளியாகவும் இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதேவேளையில் தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண்பது அவசியம்.

நாய் கடித்துக் குதறியதில் பச்சிளங்குழந்தை உயிரிழப்பு.. நாய்க்கடியால் ரேபிஸ் நோய் தாக்கி மாணவி பலி.. நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு பலி… இப்படி தெரு நாய்களால் அவ்வப்போது நிகழும் மரணங்களும், உடற்காயங்களும் மனித சமுதாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.

சிறுவர்களை நாய் துரத்தித் துரத்திக் கடித்து குதறும் காட்சிகளும், நடந்து செல்பவர்களை கூட்டம் கூட்டமாகத் தெரு நாய்கள் துரத்திக் கடிக்கும் வீடியோ கட்சிகளும் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலைகளில், தெருக்களில் நடந்து செல்லவே மக்களிடம் அச்சம் நிலவுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள் தெருநாய்களால் மிகவும் பயந்துகொண்டே செல்கின்றனர். காலையில் வாக்கிங் செல்பவர்கள் முதல் இரவு தாமதமாக வீட்டிற்கு செல்பவர்கள் வரை தெருநாய் தொல்லையால் அவதிப்படுகின்றனர். குறிப்பிட்ட தெருக்களில் நாய் அதிகம் இருப்பதால் அந்த தெரு வழியாக செல்லாமல் வேறு தெருவின் வழியாக செல்லும்நிலை உள்ளது. நள்ளிரவு நேரங்களில் தெரு நாய்கள் கூட்டமாகக் கூடி அடிக்கடி சண்டையிட்டு கத்திக்கொண்டே உள்ளது.

image

சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தெரு நாய்களிடம் இருந்து பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற, கையில் ஏர் கன்னை ஏந்தியபடி குழந்தைகளை அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது நினைவிருக்கலாம். உண்மையில் இங்கு நிலைமை அந்தளவுக்கு மோசமடைந்திருக்கிறது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய்க்கடியால் பாதிக்கப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. நாய்களால் கடிபட்டு ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் நாள்தோறும் சராசரியாக 25 பேரும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சராசரியாக 150 பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள் மீது மோதாமல் இருக்க வாகன ஓட்டிகள் நிலைதடுமாறுகின்றனர். இதனால் பலரும் விபத்துகளில் சிக்கி இறக்கின்றனர்.

image

உலகிலேயே இந்தியாவில்தான் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 20,000-க்கும் அதிகமானவர்கள் வெறிநாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோய்க்கு இறக்கின்றனர் என்கிறது புள்ளிவிவரம். ரேபிஸ் 100% மரணம் தரும் நோய். நாய்க்கடிக்கு தடுப்பூசி போட்டிருந்தவர்களையும் கூட ரேபிஸ் நோய் தாக்கிய செய்திகளை பார்க்கிறோம்.

சட்டம் என்ன சொல்கிறது?

சட்டச்சிக்கலால் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது நகராட்சி, மாநகராட்சிகளுக்கு சவாலான ஒன்றாக இருக்கிறது. 2001ஆம் ஆண்டுக்கு முன்பாக பிடிக்கப்படும் தெரு நாய்களை கொல்வதற்கு சட்டத்தில் இடமிருந்தது. 1960ல் உருவாக்கப்பட்ட விலங்குகள் வதை தடுப்பு சட்டம் மாற்றியமைக்கப்பட்டு, 2001ல் முற்றிலும் நாய்களுக்கு பாதுகாப்பாக அந்த சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. 1960ல் உருவாக்கப்பட்ட சட்டம் நாய்களை கொல்லலாம் எனக் கூறுகிறது. ஆனால் 2001ல் ஏற்படுத்தப்பட்ட சட்டம் தெரு நாய்களை கொல்லக்கூடாது என்றும், கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் அந்த தெரு நாய்கள் எந்த இடத்தில் வாழ்ந்தனவோ அதே இடத்தில் மீண்டும் கொண்டுபோய் விட வேண்டும் என சொல்கிறது. அப்படி விடப்படும் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அதேபோல் நாய் பிறந்து 7 மாதம் முதல் ஒரு வருடம் வரை கருத்தடை செய்யக் கூடாது எனவும் சட்டவிதிகள் கூறுகிறது.

image

அண்மையில் தெருநாய்களின் பெருக்கம் குறித்து கருத்து தெரிவித்திருந்த உச்ச நீதிமன்றம், ”தெரு நாய்களின் மீது இரக்கம் காட்டலாம். அதே நேரத்தில் அவற்றை சமூகத்தின் அச்சுறுத்தலாக மாறிவிட அனுமதிக்கக்கூடாது. அத்தகைய நேரங்களைக் கையாள்வதில் சமநிலை தேவை” என்றது.

கேரளா மாநிலத்தில் பல பஞ்சாயத்துகள் தெரு நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. கேரள அரசு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தெரு நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி மனுத்தாக்கல் செய்திருக்கிறது.   

image

நாய்கள் நன்றியுள்ள பிராணியாகவும் காவலாளியாகவும் இருக்கிறது என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. அதேவேளையில் தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண்பதும் அவசியம். தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அவற்றைக் கருத்தடை செய்யும் திட்டமும் கைக்கொடுக்கவில்லை. இதனால் தெரு நாய்கள் எண்ணிக்கை வேகமாகப் பெருகிவிட்டது. 2008ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையில் 55,326 தெருநாய்கள் இருந்துள்ளது. அதன் எண்ணிக்கை 2014ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி சென்னை மாநகரம் முழுவதும் 84 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டது. தற்போது அவற்றின் எண்ணிக்கை 1.20 லட்சத்தை எட்டியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

நாய் என்பது அரிய வகை உயிரினம் கிடையாது. எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தெருநாய்கள் விவகாரத்தில் அரசு அலட்சியம் காட்டாமல் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். விலைமதிப்பற்ற மனித உயிர் ஒரு நாயால் பறிபோகக் கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. என்ன செய்யப்போகிறது அரசு?

இதையும் படிக்கலாமே: தெருநாய் கடித்துக் குதறியதில் பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.