இதோ, தீபாவளி வந்தாச்சு. துணிக்கடை முதல் பட்டாசுக் கடை வரை எல்லாமே தூள் கிளப்பிக்கிட்டு இருக்கு. அங்கே, இங்கேன்னு புதுசுபுதுசா பட்டாசுக் கடைகள் முளைச்சுகிட்டு இருக்கும். ராமநாதபுரத்துல ஒவ்வொரு வருஷமும் தீபாவளி அப்ப தவறாம பட்டாசு கடை போடும் இராமநாதபுரம் பட்டாசு சங்கத் தலைவர் வன்னியராஜனை சந்தித்து, பட்டாசு விற்பனை பத்தி கேட்டோம். நிறைய விஷயங்களை அவர் சொன்னார்.

நீங்க எத்தனை வருஷமா பட்டாசு வியாபாரம் செய்றீங்க?

‘‘1996-ல நான் தனியாக பட்டாசு வியாபாரம் பண்ண ஆரம்பிச்சேன். எனக்கு முன்னாடி என் அப்பா, தாத்தாவும் பட்டாசு வியாபாரம் செய்தாங்க. அதுனால எனக்கு ஒரு ஐம்பது வருஷம் அனுபவம் பட்டாசு வியாபாரத்துல இருக்கு.’’

பட்டாசு கடை ஆரம்பிக்கனும்னா நிறையா வழிமுறைகள் இருக்குதாமே?

‘‘ஆமா. பட்டாசுக் கடைக்குனு லைசென்ஸ் வாங்கனும். சாதாரணமா நம்ம ஒரு கடைய ஆரம்பிக்கிற மாதிரி, பட்டாசு கடைய ஆரம்பிச்சிட முடியாது. நம்ம கடையோட முழு விவரத்தையும் தாசில்தார், ஆர்.டி.ஓ, வி.ஏ.ஓ, எஸ்.பி ஆபிஸ், தீயணைப்புத் துறைன்னு பல பேர்கிட்ட கொடுக்கணும். அப்புறம் காவல் துறை அதிகாரிங்க எல்லாரும் வந்து கடைய சோதனை பண்ணுவாங்க. முன்னாடி லைசென்ஸ் வாங்க ஆறு மாசம் வரை ஆகும். ஆனா, இப்ப உரிய ஆவணங்கள் தந்தா போதும், இருபது நாள்லையே லைசென்ஸ் குடுத்துட்றாங்க.’’

கிஃப்ட் பாக்ஸ் பெஸ்ட்டா இல்ல, தனித்தனியா பட்டாசு வாங்குறது பெஸ்ட்டா?

‘‘எல்லாருக்கும் இருக்கக்கூடிய மிகப் பெரிய சந்தேகம் இதுதான். கிஃப்ட் பாக்ஸ்னா கிஃப்ட் கொடுக்கிறதுக்குதான். யாருக்காவது நீங்க கிஃப்ட் கொடுக்கனும்னுனா, நீங்க தாராளமா கிஃப்ட் பாக்ஸ் வாங்கலாம். தப்பு இல்ல.

ஆனா, உங்களுக்கே நீங்க கிஃப்ட் பாக்ஸ் வாங்குறதுதான் தப்பு. உண்மைய சொல்லனும்னா, பல கிஃப்ட் பாக்ஸ்ல பழைய வெடிய மட்டும்தான் பேக் பண்ணி கொடுப்பாங்க. தரமாகவும் இருக்காது. பெரிய கம்பெனி கிஃப்ட் பாக்ஸ்னாதான் நல்லா இருக்கும். ஆனா என்னைய கேட்டீங்கனா, கிஃப்ட் பாக்ஸவிட தனித்தனியா வெடி வாங்குறதுதான் நல்லது.’’

பட்டாசு

ஒரு பட்டாசு கடை ஆரம்பிக்கனும்னா எவ்வளவு பணம் தேவைப்படும்?

‘‘குறைஞ்சது ஒரு லட்சத்துக்கு சரக்கு வாங்கிப் போட்டாலே நல்லா வியாபாரம் பாத்துடலாம். அஞ்சு லட்சம் முதலீடு பண்ணா ஒரு லட்சம் வரை லாபம் கிடைக்கும். பட்டாசு வியாபாரம் ஒரு நல்ல வியாபாரம்தான். அதனால தாராளமா நம்பி முதலீடு செய்யலாம்.’’

இவ்வளவு பட்டாசுகளை எப்படி பாதுகாக்குறீங்க?

‘‘சட்டப்படி நான்கு வாளி தண்ணீர் வச்சிருப்போம். பக்கத்துலேயும் இன்னும் கொஞ்சம் தண்ணீர் வச்சிருப்போம். அப்புறம் இரண்டு சிலிண்டர் வச்சிருக்கோம். யாராச்சும் புகை பிடுச்சா அவங்கள கடைக்குப் பக்கத்துல வரவிட மாட்டோம். யாரும் கடைக்குப் பக்கத்துல பட்டாசு வெடிக்க மாட்டாங்க. தினமும் பாதுகாப்புக்காக ஒரு ஆள் ராத்திரி கடைக்கு வெளிய படுத்திருப்போம். அதிக வெளிச்சம் கொடுக்கிற லைட்கூட பயன்படுத்த மாட்டோம். இப்படிதான் பட்டாசுகள பாதுகாப்போம்.’’

பட்டாசு உற்பத்தி

பட்டாசு விற்கல்லன்னா, என்ன பண்ணுவீங்க?

‘‘விக்காம போகாது. விற்கிற அளவுக்குத்தான் வாங்குவோம். ஒருவேளை விற்கலைனா பத்திரமா ஒரு பெட்டிக்குள்ள வச்சிடுவோம். அப்புறம் நல்லது, கெட்டதுக்குனு வாங்கிட்டு போவாங்க. எப்படியும் எல்லா பட்டாசுகளும் வித்துப் போய்டும்.’’

எவ்வளவு நாள் வரை பட்டாசு இருக்கும்?

‘‘அது ஒண்ணும் கெட்டுப்போற பொருள் கிடையாது பட்டாசு. ஆனாலும், பட்டாசுக்குனு எக்ஸ்பிரி டேட் இருக்கு. அதுக்குள்ள பட்டாசு வித்திடும். சொல்லப்போனா, நாளாக நாளாகதான் பட்டாசு நல்லா வெடிக்கும். ஆனா, கம்பிமத்தாப்பு மட்டும் அப்படி இல்ல. ஒரு வருஷம் இரண்டு வருஷம் ஆச்சுனா, ஒருமாதிரி போய்விடும். ஒழுங்கா வெடிக்காது.’’

பட்டாசு

பட்டாசுகளை நீங்க எங்க இருந்து வாங்குவீங்க?

‘‘எல்லாரும் மாதிரிதான். பட்டாசு தொழிற்சாலைகள் அதிகமா இருக்கக்கூடிய சிவகாசியில தான் பட்டாசுகள வாங்குவேன். அங்க தொழிற்சாலைகள் இல்லனா, ஏஜென்ஸில வாங்குவேன். அங்கயிருந்து லாரில சரக்க கொண்டுவரனும்னா ரொம்ப செலவாகும். அதுனால என் வண்டியவே எடுத்திட்டு போய் சரக்கு வாங்கிட்டு வந்திடுவேன்.’’

புதுசா பட்டாசு வியாபாரம் ஆரம்பிக்க போறவங்களுக்கு நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்க?

‘‘தைரியமா சந்தோஷமா ஆரம்பிங்கனுதான் சொல்வேன். ஒரு வருஷத்துல அவ்வளவா பெரிய லாபம் இல்லாட்டியும் கவலையேபடத் தேவையில்ல. ஏனா, மொத்தமா தீபாவளி மாசத்துல நமக்கு பல மடங்கு லாபம் கிடச்சிடும். தீபாவளிக்கு எல்லாரும் ஆசையா பட்டாசு வாங்கிட்டு போறதா பார்த்தா ரொம்பவே நிறைவா இருக்கும். அதுலையும் சின்ன குழந்தைங்க ரொம்பவே குஷியா பட்டாசு வாங்கிட்டு போவாங்க. அவங்கள பாக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். பட்டாசு வியாபாரத்தவிட திருப்தி தரக்கூடிய வியாபாரம் எதுவுமே கிடையாது.’’

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.