“நீங்கள் இந்தியாவில் முதலீட்டாளர்களாக இருந்தால், அடுத்து பாதிக்கப்படுவர் நீங்கள் தான்”என்று அமெரிக்க நாளிதழ் வெளியிட்டுள்ள விளம்பரம் இந்தியாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காகக் கடந்த வாரம் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 13-ம் தேதி வால் ஸ்ட்ரீட் (Wall Street) என்ற அமெரிக்க நாளிதழில், அமெரிக்காவின் ஃப்ரன்டீயர்ஸ் ஆஃப் ஃப்ரீம் (“Frontiers of Freedom”) என்ற நிறுவனம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. அந்த விளம்பரத்தில், இந்தியாவை அந்நிய முதலீட்டுக்குப் பாதுகாப்பற்ற இடமாக மாற்றிய அதிகாரிகளைப் பாருங்கள் என்று இந்தியாவில் உள்ள 11 முக்கிய நபர்களின் புகைப்படங்களை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த விளம்பரத்தில் வெளியிடப்பட்டுள்ள 11 முக்கிய நபர்கள்,

1. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

2. Antrix தலைவர் ராகேஷ் சசிபூஷண்

3. இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா

4. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என். வெங்கட்ராமன்

5. நீதிபதி ஹேமந்த் குப்தா

6. நீதிபதி வி. ராமசுப்ரமணியம்

7. சி.பி.ஐ டி.எஸ்.பி ஆஷிஷ் பாரிக்

8. அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா

9. அமலாக்கத் துறை துணை இயக்குநர் ஏ. சாதிக் முகமது நைனார்

10. அமலாக்கத் துறை உதவி இயக்குநர் ஆர். ராஜேஷ்

11. சிறப்பு நீதிபதி சந்திரசேகர்

Modi’s Magnitsky 11

விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த 11 பேரையும் தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்திற்கு “Modi’s Magnitsky 11” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த 11 அதிகாரிகள், அரசியல் மற்றும் வணிக போட்டியாளர்களை அகற்ற அரசு அமைப்புகளை ஆயுதங்களாகப் பயன்படுத்தி சட்டத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர் என்றும் முதலீட்டாளர்களுக்கு இந்தியாவைப் பாதுகாப்பற்ற இடமாக மாற்றியுள்ளனர் என்றும் இந்த விளம்பரம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் உலகளாவிய மேக்னிட்ஸ்கி பொறுப்பு கூறல் சட்டத்தின்கீழ், அவர்களுக்குப் பொருளாதாரம் மற்றும் விசா தடை விதிக்க அமெரிக்க அரசை வலியுறுத்துகிறோம் என்றும் இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், ஃப்ரன்டீயர்ஸ் ஆஃப் ஃப்ரீம் நிறுவனம் உலகளாவிய மேக்னிட்ஸ்கி மனித உரிமைகள் பொறுப்பு கூறல் சட்டத்தின்கீழ், இந்திய அதிகாரிகள் அரசு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்று மனு ஒன்றைக் கொடுத்தது. மேலும் இந்தியாவின் குற்றப் புலனாய்வு முகமைகள் மற்றும் நீதிமன்றங்கள் மூலம் முட்டுக்கட்டை போடப்படுகின்றது என்று இந்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. தேவாஸ் மல்டிமீடியா அமெரிக்கா இன்க். மற்றும் அதன் இணை நிறுவனர் ராமச்சந்திர விசுவநாதன் சார்பாக ஃப்ரன்டீயர்ஸ் ஆஃப் ஃப்ரீம் நிறுவனம் மனுத் தாக்கல் செய்வதாக அதன் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Devas Multimedia

அமெரிக்க அரசின் 2016-ம் ஆண்டு குளோபல் மேக்னிட்ஸ்கி சட்டத்தின்கீழ், மனித உரிமை விதிமீறல்களில் ஈட்டுப்படும் வெளிநாட்டு அரசு அதிகாரிகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃப்ரன்டீயர்ஸ் ஆஃப் ஃப்ரீம் நிறுவனத் தலைவர் மற்றும் குடியரசு கட்சியின் செனட்டர் ஜார்ஜ் லேண்ட்ரித் இந்த விளம்பரத்தை ட்வீட் செய்துள்ளார்.

மோசடி செய்பவர்கள் அமெரிக்க ஊடகங்களை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் இது வெட்கக்கேடானது என்றும் செய்தி ஊடக அமைச்சகத்தின் மூத்த ஆலோசகன் கஞ்சன் குப்தா ட்வீட் செய்துள்ளார். மேலும் அவரது அடுத்த ட்வீட்டில், இந்தியாவில் விஸ்வநாதன் ஒரு பொருளாதார குற்றவாளி. அவரது தேவாஸ் நிறுவனம் ஊழலில் ஈடுபட்டது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது மோடி அரசுக்கு எதிரான பிரச்சாரம் மட்டும் அல்ல. இந்திய இறையாண்மைக்கும், சட்டத்திற்கும் எதிரான பிரச்சாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது பத்திரிக்கை தர்மம் அல்ல. இது அவதூறான அறிக்கை. வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை கொள்கை என்ன? இது பத்திரிக்கைத்துறையின் மீதான களங்கம். இந்த அவமானத்திற்கு எதிராக நாங்கள் இந்தியாவுடன் நிற்கிறோம் என்று பிரிட்டிஷ் மத்திய கிழக்கு ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் செயல்யுத்தி அரசியல் நிபுணர் அம்ஜத் தாஹா ட்வீட் செய்துள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.