தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தலையில் சாக்கு பைகளை அணிந்து கொண்டு காவிரி விவசாயிகள் போராட்டம் செய்தனர். பயிர்காப்பீட்டு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

அந்த மனுவில்..

‘காப்பீட்டு நிறுவனங்கள் பயிர் காப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் எனவும் காப்பீட்டு நிறுவனங்கள் சரியான முறையில் செயல்படவில்லை எனவும், உடனடியாக இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும்’ குறிப்பிட்டிருந்தனர்.

சுந்தரவிமல்நாதன்

இது குறித்து பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுந்தரவிமல்நாதன்,

“மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர்கள் நலத்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்ட RPMFBY- திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு சென்ற ஆண்டு நவம்பர் 15 -க்குள் தமிழ்நாட்டில் சுமார் 26 லட்சத்து 6 ஆயிரம் உழவர்கள், தங்களது 40 லட்சத்து 63 ஆயிரம் ஏக்கர் பயிர்களை காப்பீடு செய்து பிரீமியம் செலுத்தியிருந்தோம்..!

நமது தமிழ்நாடு அரசும் மாநில நிதியிலிருந்து பயிர்காப்பீடு மானியமாக, 2021-22 ஆம் ஆண்டிற்கு சுமார் ரூ. 2324 கோடியை பயிர்க் காப்பீடு பெருநிறுவனங்களுக்கு செலுத்தியிருந்தது. ஆனால், சம்பா, தாளடிநெல் அறுவடை 2022 மார்ச் மாதம் முற்றிலுமாக முடிவடைவதற்கு முன்பாக நிகழாண்டு பிப்ரவரி மாதத்திலேயே, பயிர் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் உழவர்கள் நலத்துறை, புள்ளியியல் துறை, வருவாய் துறை, அனைத்து வருவாய் கிராமங்கள் தோறும், நிகழாண்டு சம்பா, தாளடி நெல் பயிரில் உழவர்களுக்கு எவ்வளவு மகசூல் இழப்பு ஏற்பட்டது என்பதை அறிந்திட சோதனையை மேற்கொண்டு விட்டன..

சுந்தரவிமல்நாதன்

சோதனையை மேற்கொண்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழிகாட்டு விதிகளின்படி அந்நிறுவனங்கள், எந்தெந்த கிராமங்களில் எவ்வளவு சதவிகிதம் பயிர் மகசூல் இழப்பு ஏற்பட்டது? என்பதையும், தொடர்புடைய கிராம விவசாயிக்கு ஏக்கர் ஒன்றுக்கு எவ்வளவு ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்பதையும், ஒவ்வொரு விவசாயிக்கும் தகவலாக கடிதம் மற்றும் இணையதளத்தில் வெளிப்படையாக தெரிவித்திருக்க வேண்டும்.

சோதனை செய்த ஒரு மாதத்தில் உழவர்கள் நலன் கருதி அனைத்து கூட்டுறவு கடன்சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கிராம நிர்வாக அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களிலும் அனைத்து பொதுமக்களும் அறிந்திடும் வகையில் பொதுத்தகவலாக வெளியிட்டு, உழவர்களுக்கு அனுப்பியிருக்க வேண்டும். இதை எந்த ஒரு காப்பீட்டு நிறுவனமும் செய்யவில்லை.

இதனால், எங்களுடைய தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றையும், பல கட்ட போராட்டங்களையும் முன்னெடுத்தோம்..!

அதன் விளைவாக, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை துறை அமைச்சர் , “பயிர் காப்பீடு நிறுவனங்களின் மூலம் சுமார் 481 கோடி ரூபாய் இழப்பீடு தொகையாக வரப்பெற்றுள்ளது என்றும், உடனடியாக இந்த தொகை அக்டோபர் மாத முதல் வாரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்” என்றார்.

ஆனால், இதுவரைக்கும் பாதிக்கப்பட்ட எந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கிலும் “ஒரு ரூபாய் கூட” பயிர் காப்பீடு தொகை செலுத்தப்படவில்லை. மேலும் காப்பீட்டு நிறுவனங்கள் தருவதாக சொன்ன 481 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையும் போதுமானதாக இல்லை. இதனால் உழவர்களாகிய நாங்கள் விவசாயம் செய்ய முடியாமல் வெறும் சாக்குபைகளோடு தான் நிற்கதியாய் நிற்கிறோம்..! என்பதை அடையாளப்படுத்தும் விதமாக தான் நாங்கள் சாக்கு பைகளை தலையில் போட்டுக்கொண்டு மனுவை அளித்து இருக்கிறோம்.

விவசாயிகள் போராட்டம்

உடனடியாக தமிழக முதல்வர் உழவர்களின் பிரச்சனையில் தலையிட்டு, உழவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே காப்பீட்டுத் தொகையை பெற்று தர வேண்டும். மேலும், வழங்கப்படக்கூடிய காப்பீட்டுத் தொகையானது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு தான் வந்து சேர வேண்டும்.

காலதாமதமாக பயிர் காப்பீட்டு தொகையை வழங்குகின்ற பயிர் காப்பீட்டு நிறுவனங்களின் மீது மத்திய மற்றும் மாநில அரசாங்கள் அபராதம் மற்றும் வட்டி தொகையையும் வசூலித்து விவசாயிகளுக்கு தர வேண்டும். மேலும், சில காப்பீட்டு நிறுவனங்கள் அரசு கொடுத்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றன. அவற்றையும் உடனடியாக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.

‘இந்த திராவிட மாடல் அரசு எப்போதும் விவசாயிகளுக்காக துணை நிற்கும்’ என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி மேடைகளில் பேசி வரும் நிலையில், விவசாயிகளின் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பாரா முதல்வர்…??

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.