ஆளும் கட்சியான திமுகவின் 15-வது பொதுக்குழு சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில், அக்டோபர் 9-ம் தேதி நடைபெற்றது. இதில், திமுக தலைவராக ஸ்டாலின் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், “திமுக தலைவராகவும், தமிழ்நாடு முதலமைச்சராகவும் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைபோல இருக்கிறது என்னுடைய நிலைமை. இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ – மூத்தவர்களோ – அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது?

திமுக பொதுக்குழு

நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி இருக்கக் கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்கவிடாமல் கூட ஆக்கிவிடுகிறது. என் உடம்பை பாருங்கள். உங்களது செயல்பாடுகள் கழகத்துக்கும் – உங்களுக்கும் பெருமை தேடித் தருவது போல அமைய வேண்டுமே தவிர சிறுமைப்படுத்துவதாக அமையக் கூடாது. பொது நன்மைக்காக மட்டுமே இதனை நான் சொல்லவில்லை, உங்களது நன்மைக்காகவும் சேர்த்தே சொல்கிறேன். பொது இடங்களில் சிலர் நடந்து கொண்ட முறையின் காரணமாக கழகம் பழிகளுக்கும் ஏளனத்துக்கும் ஆளானது” என்று நொந்துபோய் பேசியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் இந்த அளவுக்கு நொந்து போவதற்கு காரணம் யார் யார்..?

அமைச்சர் கே.என்.நேரு

காவல்துறை அதிகாரி ஒருவரின் திறமையை புகழ்ந்து பேசுவதாக நினைத்து ‘அவரின் திறமை என்னவென்றால், ஒருவரைக் குற்றவாளியாக ஆக்கவும் முடியும், குற்றவாளி பட்டியலிலிருந்து நீக்கவும் முடியும்’ என்று கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார் அமைச்சர் நேரு. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் விமர்சனத்துக்குள்ளானது. அதேபோல, சென்னை தினத்தை முன்னிட்டு, மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர், அமைச்சர் நேரு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

மேயர் பிரியாவை அதட்டும் அமைச்சர் நேரு

அப்போது மேயர் பிரியாவை, அமைச்சர் நேரு ஒருமையில் பேசியது மிகப்பெரிய சர்ச்சையானது. `பட்டியலினப் பெண் மேயர் என்பதால் பிரியாவை அமைச்சர் இப்படிப் பேசுகிறார். இது சாதி மற்றும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு’ என அமைச்சருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், “நான் ஒருமையில் பேசவில்லை, உரிமையில் பேசினேன்” எனச் சமாளித்தாலும், இன்றும் சர்ச்சை ஓயவில்லை.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரசன்:

 தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தன்னைச் சந்திக்க வந்த குறவர் பழங்குடியின மக்களின் பிரதிநிதியாக இரணியன், தென்காசி (தனி) திமுக எம்பி தனுஷ்குமாரையும் மரியாதைக் குறைவாக நடத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், ‘தள்ளி நில்லு. தள்ளி நின்னு பேசு’ என்று உரத்த குரலில் கடுகடுத்தார் அமைச்சர். இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்தில், பழங்குடியின மக்கள் ராஜபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர்

இதே கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்தான் விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் கிராமத்துக்குச் சென்ற போது , மனு கொடுக்கவந்த கலாவதி என்கிற பெண்ணை, அந்த மனுவாலேயே அமைச்சர் தலையில் அடிக்கும் வீடியோ வெளியானது பெரும் சர்ச்சையானது.

அமைச்சர் பொன்முடி:

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தை அடுத்துள்ள மணம்பூண்டியில் ரேஷன் கடை திறப்புவிழா செப்டம்பர் 19 -ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே, முகையூர் ஒன்றியக்குழுத் தலைவரே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான்’ என்று கூறினார். மேலும், அவரை நோக்கி, “ஏம்மா… நீ எஸ்.சி-தானே?” என்று கேட்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

மேடையில் அமைச்சர் பொன்முடி

இந்தப் பிரச்னை பொன்முடியை அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவியிலிருந்து நீக்க வேண்டும். பொது இடத்தில் சாதி கேட்டதற்காக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இந்தச் சர்ச்சை ஓய்வதற்குள்ளாகவே ‘பெண்களின் இலவசப் பேருந்து பயணத்தை குறிப்பிட்டு “ஓ.சி-யிலதானே போறீங்க?” என்று பேசியதும் சர்ச்சையானது. அதேபோல, அக்.2-ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பெண் ஒருவரை ஒருமையில் பேசியதும் சர்ச்சையானது.

நீளும் பட்டியல்…

சமீபத்தில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு கூட்டம் ஒன்றில் ‘விதியை மீறிச் செயல்படும் அரசு போக்குவரத்து ஊழியர்களை அடியுங்கள் பார்த்துக்கொள்ளலாம், வேலையைவிட்டும் தூக்கிவிடலாம்’ என்று பேசிருந்தார். அதேபோல, அமைச்சர் தா.மோ.அன்பரசன், தன்னிடம் மனு கொடுக்க வந்தவர்களை அடிக்கப் பாய்ந்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் நகராட்சித் திட்டப்பணிகள் குறித்தான ஆய்வுக் கூட்டத்தில் “மாநகராட்சிக்குச் சொந்தமாக 15 ஏக்கர் இடம் இருக்கிறது. அதற்குக் கூடுதலாக இடம் வேண்டுமென்றால், அருகிலிருப் பவர்களின் இடத்தை எடுத்துக்கொண்டு நஷ்டஈடு வழங்காமல் பேருந்து நிலையத்தை ஆரம்பித்து விடலாம்” என்றார் அமைச்சர் ஐ.பெரியசாமி.

எ.வ.வேலு, துரைமுருகன்,

அதேபோல, உரத் தட்டுப்பாடு குறித்து  வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பும் போது, “எந்த விவசாயி அப்படிச் சொன்னான்… உரம் நீ வாங்குறியா?” என பத்திரிகையாளரை ஒருமையில் பேசியது சர்ச்சையானது. அதேபோல அமைச்சர் பெரியகருப்பன் பத்திரிகையாளர் ஒருவரை மிரட்டிய வீடியோவும்,  அமைச்சர் எ.வ.வேலு, `நிலம் இல்லாதவர்கூட, ஒரு பச்சைத் துண்டைப் போட்டுக்கொண்டு நிலத்தை எடுக்கக் கூடாது என்கிறார்கள்’ என்று விவசாயிகளைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசிய வீடியோவும் இன்றுவரை வைரலாகவே இருகிறது.  

எகிறும் எம்.எல்.ஏ.க்கள்

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்திலுள்ள ஒன்பது ஊராட்சிகளுக்கான டெண்டரில் பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் பஞ்சாயத்து பேசப்போன ஆம்பூர் தி.மு.க எம்.எல்.ஏ வில்வநாதன், “பேரமெல்லாம் பேச வேணாம்… 40 சதவிகிதம் உங்களுக்கு, 60 சதவிகிதம் எங்களுக்கு என முடித்துக்கொள்வோம்” என்று பேசியிருந்தார்.

ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன்
தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகேயிருக்கும் தனியார் நிறுவனத்துக்கும், நில உரிமையாளர் பூஜா கோயலுக்கும் தகராறு ஏற்பட, நில உரிமையாளருக்கு ஆதரவாக தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா பஞ்சாயத்து பேசச் சென்றிருக்கிறார். அப்போது, ‘கை காலை உடைச்சுடுவேன்… கம்பெனியை ஒரே நாள்ல இழுத்து மூடிடுவேன்…’ என்று எம்.எல்.ஏ ராஜா மிரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவ சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் உள்ளாட்சி அமைப்புகளில், பெண் பிரதிநிதிகளின் கணவர்கள், கவுன்சிலர்களின் அட்ராசிட்டீஸ் தொடர்பான வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி திமுக-வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.