உங்களுக்கும் எனக்கும்தான் அவர் பெயர் குணசேகரன். அவரது பள்ளித் தோழர்களுக்கு “செவ்வெறும்பு”. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதால், அந்தப் பெயர். தற்போது ஒரு பிசினஸ்மேன். சொந்தமாக ஒரு லேத் பட்டரை உண்டு. நீளமான கனமான இரும்புத் தண்டுகளைத் துண்டு போடும் வேலை.

நான் முதன்முதலில் அவரைச் சந்தித்தபோது என்னைக் கவர்ந்தது அவர் மேஜை மீதிருந்த ஓவியம். மேலே ஆமையும் முயலும். அடியில் ஒரு பன்ச் லைன். SLOW AND STEADY DOES NOT WIN THE RACE.

பழமொழியை மாற்றிப் போட்டிருக்கிறாரே! என்ன காரணம் என்று கேட்டேன். ‘‘நிதானம், ஜாக்கிரதை, உஷார் என்றெல்லாம் சொல்லி நம் வேகத்தைக் குறைத்துவிடுகிறார்கள். பிசினஸில் விவேகத்துடன் கூடிய வேகம் இருக்க வேண்டும். அப்போதுதான் ஜெயிக்க முடியும்’’ என்று அவர் சொன்னது வித்தியாசமான விளக்கமாக இருந்தது.

நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தபோது ஒரு தொழிலாளி வந்தார். ‘‘சார், நம்ம சிவாவுக்கு முதுகு வலி. ரெண்டு மாத்திரை குடுங்க” என்று கேட்டார்.

தன் மேஜை இழுப்பறையிலிருந்து வலி நிவாரண மாத்திரைகளைத் தந்தார். “மூணு மணி வரைக்கும் ஒர்க் பண்ணிட்டு அவனை வீட்டுக்குப் போகச் சொல்லு, காசி. போறத்து முன்னாடி எங்கிட்ட வந்து சொல்லிட்டுப் போகட்டும்”

வலி நிவாரணி

இது வாடிக்கையாக நடக்கும் ஒன்றாம். கடினமான வேலை அல்லவா! ஒர்க் ஷாப்பிற்கு வரும் இரும்புத் தண்டுகள் மிகவும் கனமானவை. பல முறை தூக்கி இறக்க வேண்டும். அதனால் தொழிலாளிகள் பலருக்கும் அவ்வப்போது முதுகு வலி தோள், வலி வரும். இவரும் தன் வசம் மாத்திரைகளைத் தயாராக வைத்திருப்பார்.

“நல்ல ஒர்க்கர்ஸ் சார். ஆனா, இவங்களுக்கு அடிக்கடி வலி வந்து ரெஸ்ட் எடுக்க வேண்டிய கட்டாயம் வந்துடும். இதனால டெலிவரி ஷெடியூல்தான் தாறுமாறா அடி வாங்கும்” என்று அங்கலாய்த்தார்.

”இந்தப் பிரச்னைக்கு ஏதாவது வழி இருக்கிறதா ?” என்று கேட்டார்.

”இருக்கு சார்…”

“என்ன அது?” என்றார் ஆர்வத்துடன்.

குவாலிட்டி சர்க்கிள்

“வாரம் ஒரு முறை இந்தத் தொழிலாளர்களோடு ஒரு 15 நிமிடங்கள் செலவிடுங்கள். ஒர்க்கிங் ஹவர்ஸ்ல டீயும் சமோஸாவும் சாப்பிட்டபடி இந்தப் பிரச்னையை அலசுங்கள். முதல் இரண்டு மூன்று கூட்டங்களில் தீர்வுகள் எதுவும் கிடைக்காது. மெல்ல மெல்ல உரையாடலில் நெகிழ்வு வரும். அவர்களது ஆர்வமும் கூடும். நமக்குத் தீர்வுகள் கிடைக்கும். ஜப்பானின் வெற்றிக்குக் காரணமே இந்த QCக்கள்தான்” என்றேன்.

Quality Circles பற்றிய அறிமுகத்தையும் விவரங்களையும் அவருக்குச் சொன்னேன். முயற்சிப்பதாக உறுதி அளித்தார். சில வாரங்களிலேயே பலன் கிடைத்தது.

இவைதான் மாற்றங்கள். பெடஸ்டல் ஃபேன் போல் ஸ்டாண்டுகள். அதன் உச்சியில் U வடிவில் ஒரு அமைப்பு. ஸ்டாண்டின் அடிப்பீடத்திற்குக் கீழே சிறிய அளவில் உருளைச் சக்கரங்கள். (Castors). இரும்புத் தண்டுகள் வந்திறங்க சரியான உயரத்தில் மேடை.

லாரியிலிருந்து இரும்புத் தண்டுகளைத் தரையில் இறக்காமல், மேடை மீது இறக்கி விடுவார்கள். இரண்டு ஸ்டாண்டுகளை சற்று இடைவெளி விட்டு நிறுத்துவார்கள். தேவைப்படும் தண்டின் இரு முனைகளையும் இந்த ஸ்டாண்டில் மாட்டி விடுவார்கள். ஸ்டாண்டுகளைத் தள்ளியபடியே லேத் அருகில் கொண்டு செல்வார்கள்.

தொழிற்சாலை

இயந்திரம் அறுத்த துண்டுகளை, ஒரு தள்ளுவண்டியில் வைத்து வேறு ஒரு இடத்தில் சேமிப்பார்கள். அங்கேயும் ஒரு மேடை. அதிலிருந்து லாரியில் ஏறும்.

இப்போது, குனிந்து நிமிரும் செயல்பாடு முழுவதுமாக நீங்கி விட்டது. பளுவைத் தோளில் தூக்கும் சிரமமும் இல்லை. அதனால் உழைப்பாளிகளின் வலிப் பிரச்னை போயே போச்சு!

”அட!” என ஆச்சரியப்பட வைத்தது இந்த மாற்றங்கள். இந்தக் மாற்றத்தைக் கண்டுபிடித்து கொண்டுவந்தது வேறு யாருமல்ல, அங்கு வேலை பார்த்த ஃபோர்மென்தான். நான் அந்த ஃபோர்மேனைச் சந்தித்து, “இந்த ஐடியா உங்களுக்கு எப்படித் தோன்றியது?” எனக் கேட்டேன்.

குவாலிட்டி சர்க்கிள்

“சார், அது ரொம்ப காமெடியான விஷயம் சார். ஒரு நாள் எங்க தெரு வழியா அம்மன் சாமி பல்லக்குல போச்சு. நம்ம வீட்டு வாசல்லேயும் கொஞ்ச நேரம் நிறுத்தினாங்க. அப்ப தோள்ளேந்து இந்த மாதிரி ஸ்டாண்டுலேதான் எறக்கி வெச்சிட்டு ரெஸ்ட் எடுத்தாங்க. பல்லக்கோட ரெண்டு பக்க கழியும் நம்ம ஃபேக்டரி இரும்பு ராடுங்க மாதிரியே இருந்திச்சா. அட, இப்படி நிக்க வச்சா நம்ம ஆளுங்க சுமை கொறையுமேன்னு ஐடியா கெடச்சுது. அதை செஞ்சு பார்த்தப்ப சூப்பர் ரிசல்ட் கிடைச்சுது’’ என்றார்.

குவாலிட்டி சர்க்கிளின் மாயமே இதுதான். எல்லாரையும் சிந்திக்க வைக்கும். புத்தாக்கம், பிரச்னையத் தீர்த்தல் என்பதில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம் என்பதை நிரூபிக்கும்.

அது மட்டுமல்ல, சிக்கலுக்கு அருகே, மிக அருகே இருப்பவர்களால்தான் தீர்வுகளையும் கண்டுபிடிக்க முடியும் என்பது குவாலிடீ சர்க்கிள் கருத்தாக்கத்தின் மையப் புள்ளி. பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, சிறிய நிறுவனங்களிலும் QC பயன் தரும். எல்லாம் தெரிந்த தொழிலாளர்கள் இருக்க, காஸ்ட்லியான கன்சல்டன்ட்டுகள் எதற்கு?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.