தண்ணீரை விற்பனை செய்தது குறித்து தட்டிக்கேட்ட நபரின் குடும்பத்தை கடலாடி அருகே 8 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்த சிக்கல் ஊராட்சிக்கு உட்பட்டது கழநீர்மங்களம் கிராமம். இந்த கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட ஒரே சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்தில் கருப்பையா மற்றும் அவரது மகன் சக்திவேல் குடும்பத்தினரை அதே ஊரைச் சேர்ந்த கிராமத் தலைவர் கருப்பையா, கிராம பொருளாளர் அய்யாசாமி, இளைஞர் மன்ற சங்கத் தலைவர் மலை முருகன், நீலமேகம், முருகானந்தம், சுதந்திர ராஜா, செந்தில் வேல் ஆகிய நபர்களின் தூண்டுதலின் பேரில் ஊரைவிட்டு 8 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்து அவர்களிடம் பேசக்கூடாது என கிராமத்தில் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னதாக கண்மாயில் உள்ள தண்ணீரை அதே பகுதியைச் சேர்ந்த நபர்கள் விலைக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கழநீர்மங்களம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் சக்திவேல் அப்போது இளைஞர் சங்க செயலாளராக இருந்துள்ளார். இதையடுத்து கண்மாய் தண்ணீரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் விற்பனைக்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளார். இதன் விளைவாக ஊர் கூட்டத்தில் சக்திவேலை அவமானப்படுத்தி அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியான சக்திவேல் கூட்டத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.

image

இதன் அடிப்படையில் தன்னை எதிர்த்து கேள்வி கேட்டுவிட்ட ஒரே காரணத்தினால் அந்த கிராமத்தைச் சேர்ந்த மலைமுருகன், கருப்பையா, அய்யாச்சாமி, நீலமேகம், முருகானந்தம், சுதந்திர ராஜா, செந்தில் வேல், கருப்பையா கிருட்டை ஆகிய நபர்கள் சக்திவேல் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததோடு மட்டுல்லாமல் அந்த குடும்பத்தில் நடக்கும் திருமணம், இறப்பு நிகழ்ச்சிகள் என எவற்றிற்கும் யாரும் பங்கு கொள்ளக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் அந்த கிராமத்தில் நடைபெறும் திருவிழாவில் இவர்களை சேர்த்துக்கொள்ளாமல், ஊரில் வரி வாங்காமல் தவிர்த்துள்ளனர். அதோடு அல்லாமல் அங்குள்ள கண்மாயில் குளிக்கச் சென்றால் அவர்களை ஏளனமாக பார்ப்பதும், அருவருக்கத் தக்க வகையில் பேசுவதும், ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நபர்கள் எதற்காக இங்கு வருகிறீர்கள் என ஏளனமாக பேசியதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

image

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கருப்பையாவின் மகளுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணம் முடிந்து அங்குள்ள கோவிலில் சாமி கும்பிட சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த நபர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த நபர்கள் எதற்காக கோவிலுக்கு வருகிறீர்கள்? என்று கூறி தகராறில் ஈடுபட்டு அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சிக்கல் காவல் நிலையத்தில் இருதரப்பை சேர்ந்த நபர்கள் மீது புகார் அளித்ததன்பேரில், சிக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் சிக்கல் காவல் நிலையத்தில் தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தும் காவல்துறை அலட்சியப்படுத்தியதாகவும் வேதனையுடன் கூறுகின்றனர். அதோடு அல்லாமல் கருப்பையா குடும்பத்திருடன் ஊரில் உள்ள மற்ற குடும்பத்தினர்கள் யாரும் எவ்வித தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும், அவர்கள் வீட்டில் நடக்கும் எந்த நிகழ்ச்சிகளும் பங்கு கொள்ளக் கூடாது எனவும் ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

image

இதற்கு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஒரு குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ள நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து எதிர்தரப்பை சேர்ந்த இளைஞர் மன்ற சங்க தலைவர் மலைமுருகனை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர்களை நாங்கள் ஊரை விட்டு யாரையும் ஒதுக்கி வைக்கவில்லை, அவர்கள் கோயில் திருவிழாவிற்கு வரிகள் கொடுக்காமல் அவர்களாகவே ஒதுங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.