சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் போலீஸார், போலீஸ் அதிகாரிகள், தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்கும் கூடுவோம், கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியை மண்டலம் வாரியாக நடந்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி முதல்கட்டமாக மேற்கு மண்டலத்தில் இந்த நிகழ்ச்சி 2.10.2022-ம் தேதி மதுரவாயலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மேற்கு மண்டலத்தில் உள்ள கொளத்தூர், கோயம்பேடு, அண்ணாநகர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை குடும்பத்தினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கூடுதல் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர் ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

இணை கமிஷனர்களுக்கு பாராட்டு

மேற்கு மண்டலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறையினரின் குடும்பத்தினருக்கிடையே சமையல் போட்டி, ரங்கோலி போட்டி, இசை நாற்காலி போட்டி, குழந்தைகளுக்கான கட்டுரை எழுதும் போட்டி ஆகியவை 19.9.2022-ம் தேதி முதல் நடத்தப்பட்டது. போட்டியின் நடுவர்களாக கூடுதல் கமிஷனர் அன்புவின் மனைவி ரேணுகா அன்பு, இணை கமிஷனர் ராஜேஸ்வரி, கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராமின் மனைவி விஜயலட்சுமி, ரயில்வேயில் பணியாற்றும் ஜெயந்தி சண்முகம் ஆகியோர் செயல்பட்டனர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பரிசுகளை வழங்கினார்.

சென்னையில் இணை கமிஷனர்களாக பணியாற்றும் ராஜேஸ்வரி, சாமுண்டீஸ்வரி, ரம்யாபாரதி ஆகியோருக்கு மம்தா ஜிவால் பரிசுககளை வழங்கினார். நிகழ்ச்சியில் கமிஷனர் சங்கர் ஜிவால், பாடல் ஒன்றைப் பாடி அசத்தினார். அவரின் பாடலுக்கு உற்சாக கைதட்டல்களும் விசில்களும் பறந்தன. டி சர்ட், ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கலந்து கொண்ட போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், காவலர்கள், அவர்களின் குடும்பத்தினருடன் சகஜமாக கலந்துரையாடினார். துணை கமிஷனர்கள் விஜயகுமார், குமார், ராஜாராம், ஈஸ்வரன் உதவி கமிஷனர்கள் ரவிசந்திரன், வரதராஜன், அருள் சந்தோஷமுத்து, ரமேஷ்பாபு, கொளதமன், சிவகுமார், ராகவேந்திரா கே.ரவி, ஆதிமூலம், இன்ஸ்பெக்டர்கள் ஆபிரகாம் குரூஸ் துரைராஜ், கோவிந்தராஜ், மஞ்சுளா, கண்ணகி, சீனிவாசன், கோபால்குரு, சிவானந்தம் உள்பட அனைத்து இன்ஸ்பெக்டர்களுக்கும் ஒவ்வொரு பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.

நடிகர்கள் ஆர்யா, சூரி

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர்கள் ஆர்யா, பிரசன்னா, சூரி ஆகியோர், “எங்களின் காவல் தெய்வம் போலீஸ். எனவே காவலர்கள் தங்களின் குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்ற கருத்தை முன்வைத்து பேசினர். நிகழ்ச்சியில் காவலர்களின் மனைவிகள், குடும்பத்தினரின் நாடகம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் அசைவ, சைவ விருந்து நடந்தது. மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் காவலர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அன்றாட காவல்துறை பணிகள் பாதிக்கப்படாமலிருக்க வடக்கு மண்டலத்தில் உள்ள காவலர்கள், மேற்கு மண்டல காவல் பணிகளையும் கூடுதல் பொறுப்பாகக் கவனித்துக் கொண்டனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.