போரில் வீரமரணமடையும் வீரர்களைப் போற்றும் வகையில் நடுகல் அமைப்பது மன்னராட்சி காலத்தில் தமிழகத்தில் வழக்கமாக இருந்துள்ள நிலையில், அவை தற்போது கண்டறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் மதுரை மாவட்டம் தி.குண்ணத்தூர் அருகே கி.பி 16 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த வளரி வீரன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வளரி வீரன் நடுகல்

பாண்டியநாடு பண்பாட்டு மையத் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் முனீஸ்வரன் தலைமையில் முனைவர் லட்சுமண மூர்த்தி, ஆய்வாளர் அனந்தகுமரன் ஆகியோர் தி.குண்ணத்தூர் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது கி.பி 16 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த வளரி வீரன் கற்சிற்பம் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய முனைவர் முனீஸ்வரன், “பழைமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஊர், பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் சிறு குன்றத்தூர் என்றும் பிறகு குண்ணத்தூர் என்றும் அழைக்கப்பட்டது.
இவ்வூரின் தெற்கே தேவன்குறிச்சி மலைப்பகுதியை பெருங்குன்றத்தூர் என்று அழைக்கப்பட்டு கலிங்கத்தரையர் என்ற குறுநில மன்னர் ஆட்சி செய்தாக கல்வெட்டுச் செய்தி  சமீபத்தில் கண்டறியபட்டது.

ஆய்வாளர் முனைவர் முனீஸ்வரன்

பண்டைய காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய ஒரு வகை ஆயுதம் வளரி. அக்காலத்தில் கால்நடைகளைத் திருடிச் செல்பவர்களை பிடிப்பதற்கும், போர்க்களத்தில் தப்பிப்பர்வர்களை உயிருடன் பிடிப்பதற்கும் வளரியைப் பயன்படுத்தினார்கள். வளைதடி, திகிரி, பாறாவளை, சுழல்படை, கள்ளர்தடி, படைவட்டம் என்றும் வளரியை அழைத்தனர்.

இவ்வூரில் கண்டறியப்பட்ட நடுகல் சுமார் 41 இன்ச் உயரம், 27 இன்ச் அகலம் கொண்டவை. மூன்று அடுக்கு கோபுரம் தோரணவாயில் வடிவில் கீழ்ப்பகுதியில் ஆண் மற்றும் இரண்டு பெண் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இச்சிற்பம் வளரி வீரன் என்பதற்குச் சான்றாக நடுப்பகுதியில் வீரன் கையில் ஈட்டியைப் பிடித்தவாறு இடது கையில் வளரியைப் பிடித்தவாறு வலது கால் சற்று சாய்ந்து முழங்கால் தெரியும்படி இறுகிய காலும் காலில் கழலும் கொண்டு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

வளரி வீரன் நடுகல்

இச்சிற்பத்தில் வீரன் உருவம் விரிந்த மார்பு, கையில் காப்பு, நீண்ட காதும் தேய்ந்த முகத்துடன் காணப்படுகிறது. வளரி கையில் ஏந்தி இருப்பதால் வளரி வீரன் சிற்பம் என்று அழைக்கப்படுகிறது.

வீரன் வலதுபுறத்தில் பெண் சிற்பம் அணிகலன் அணிந்து அலங்காரத்துடன் சரிந்த கொண்டையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண் சிற்பம் வலது கையைத் தொடையில் வைத்து இடது கையைக் செண்டு ஏந்தி இருக்கிறாள். மற்றொரு பெண் சிற்பம் வீரன் இடதுபுறத்தில் இடது கையைத் தொடையில் வைத்து வலது கையில் செண்டு உயர்த்திப் பிடித்துள்ளார். இரண்டு பெண் சிற்பமும் ஆடை அலங்காரத்துடன் கொண்டை சரிந்து காணப்படுகிறது. இச்சிற்பத்தை பார்க்கும்போது வளரிவீரன் இறந்த பிறகு இருவரும் உடன்கட்டை ஏறியதற்குச் சான்றாக அறியமுடிகிறது.

தமிழகத்தின் தென்பகுதியில் சிவகங்கை ராமநாதபுரம், திருநெல்வேலி பகுதியில் வளரி வீரன் சிற்பம் அதிகமாக காணப்பட்டாலும் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி மற்றும் மேற்குப் பகுதியில் அதிகம் கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது மதுரையின் தெற்குப்பகுதியில் வளரி வீரன் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. வளரி வீரன் சிற்பம், நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதன் மூலம் வளரி ஆயுதம் தமிழகத்தின் தென் பகுதியில் பரவலாகப் புழக்கத்தில் இருந்ததை அறிய முடிகிறது ” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.