மகாராஷ்டிராவில் புனே, நாசிக் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வெங்காயம் மற்றும் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவிலேயே கரும்பும், வெங்காயமும் மகாராஷ்டிராவில்தான் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. வெங்காயம் பொதுவாக தண்ணீர் இருப்பை பொறுத்து ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை பயிரிடப்படுவது வழக்கம். மழை காலத்தில் அறுவடை செய்யப்படும் பெல்லாரி வெங்காயத்தை அதிக நாட்களுக்கு சேமித்து வைக்க முடியாது.

வெங்காயம்

எனவே அறுவடை செய்தவுடன் வெங்காயத்தை விவசாயிகள் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இதனால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதோடு தொடர்ச்சியாக பருவ மழையும் இன்னும் விடாமல் பெய்து வருகிறது. இதனால் விவசாய பயிர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. புனே மாவட்டத்தில் உள்ள ஜுன்னார் தாலுகாவில் இருக்கும் வட்காவ் ஆனந்த் என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி தஸ்ரத் லட்சுமண் தனது தோட்டத்தில் வெங்காயம் பயிரியிட்டு இருந்தார். ஆனால் மழை காரணமாக வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

அதோடு இதர விளைபொருட்களுக்கும் சரியான விலை கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தோட்டத்தில் இருக்கும் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் விவசாயிகளின் இந்த மோசமான நிலைக்கு மத்திய மாநில அரசுகள் தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்காததற்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என்றும், விவசாயத்திற்கு வாங்கிய கடனை கேட்டு கடன் கொடுத்தவர்கள் சித்ரவதை செய்வதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை

வாங்கிய கடனை கொடுக்க எங்களிடம் பணம் இல்லை. கடன்காரர்கள் காத்திருக்க தயாராக இல்லை. நாங்கள் என்ன செய்வது? விளைந்த வெங்காயத்தை கூட மார்க்கெட்டிற்கு கொண்டு செல்ல கூட முடியாத நிலையில் இருக்கிறோம். பிரதமர் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கவில்லை. உங்களால் விவசாயத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

விவசாயிகள் என்ன செய்வார்கள். உங்களது (பிரதமர்) செயலற்ற தன்மையால் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதோடு கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார். போலீஸார் விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர் எழுதிய கடிதம் உண்மையானதா என்பதை தெரிந்து கொள்ள தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.