செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து இயக்குநர் லிங்குசாமி விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில், கடந்த 2014-ம் ஆண்டு ‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தை தயாரிப்பதற்காக, இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது.

ஆனால் இந்தக் கடனை திருப்பிக் கொடுக்காமல், அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதால் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவத்திற்கு எதிராக பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்துமாறு இயக்குநர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இயக்குநர் லிங்குசாமி, 1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனத்திடம் வழங்கினார்.

image

ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் உரிய பணமின்றி திரும்பியதால் பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் லிங்குசாமிக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக இயக்குநர் லிங்குசாமி அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னை பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை.

இந்த வழக்கு பிவிபி கேப்பிடல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கின் மேல் இன்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாங்கள் இன்று மாண்புமிகு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மேல் முறையீடு செய்து சட்ட ரீதியாக சந்திக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.