ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 100 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’. இந்த சீரியலில் இருந்து சில தினங்களுக்கு முன் திடீரென வெளியேறினார் ஹீரோயினாக நடித்து வந்த மனிஷா.

அப்போது அவரிடம் பேசியிருந்தோம்.

“ஆரம்பத்திலிருந்தே எனக்கு சம்பள பாக்கி. ஆனாலும் கோவிட் சமயத்தில் கூட லீவு போடாம நடிச்சுக் கொடுத்தேன்.

நான் சம்பளத்தைக் கேட்கிறப்பெல்லாம் ‘சேனல்ல‌ இருந்து பணம் வரலைன்னே சொன்னார் தயாரிப்பாளர். இந்தக் காரணத்தைச் சொல்லியே எனக்குத் தவணை முறையில்தான் சம்பளம் தந்தார். இதுக்கிடையில் ரெஸ்ட் இல்லாம நடிச்சதுல எனக்கு உடம்பு முடியாமப் போய் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன். அந்தச் செலவுக்கு ரொம்பவே சிரமப்பட்டேன். அப்பக் கூட என் சம்பளத்தைத் தந்து உதவலை.

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ சீரியல்

அதேபோல ஷூட்டிங் போறப்ப செட்ல பாதுகாப்பே இருக்காது. காலை 9 மணியிலிருந்து நைட் 9 மணி வரை ஷூட்னு சொல்லுவாங்க. ஆனா, ராத்திரி 11 மணி வரைக்கும் கூட ஷூட்டிங் போகும். ஆனாலும் என்னால எந்த இடத்திலும் ஷூட்டிங் பாதிக்கப்படல. ‘103 டிகிரி காய்ச்சலில் அட்மிட் ஆகியிருக்கேன்’ன்னு மெயில் பண்ணியும் மறுநாள் ஷூட்டிற்கு வரச் சொன்னாங்க. அப்பக்கூட உடல்நிலையை பொருட்படுத்தாம நடிச்சேன். என் அசிஸ்டென்ட்டிற்குக் கொடுக்க வேண்டிய பேட்டா, ‘வந்து போகும் கேப் பில்’ன்னு எதுக்குமே அவங்க பணம் கொடுக்கல. மொத்தத்துல எனக்கு ஆறு லட்ச ரூபாய் சம்பள பாக்கி இருக்கு” எனத் தயாரிப்புத் தரப்பின் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில் தற்போது சீரியலின் தயாரிப்புத் தரப்பிலிருந்து மனிஷா மீது குற்றம் இருப்பதாகச் சொல்லி சின்னத்திரைத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தந்திருக்கிறார்கள்.

“சம்பளம் தாமதமாகத் தர்றதுங்கிறது தவிர்க்க முடியாத சூழல்ல‌ நடக்கிறதுதான். ஆனா எல்லாருக்கும் அவங்கவங்களுக்குப் பேசிய சம்பளத்தைத் தந்துடுறோம். அப்படியே சம்பளப் பிரச்னை இருந்தா சீரியல் தயாரிப்பாளர் சங்கத்துலயோ அல்லது அவங்க உறுப்பினரா இருக்கிற நடிகர் சங்கத்துலயோ முறையிட்டுப் பேசி இந்தப் பிரச்னையைத் தீர்த்திருக்கலாம். அதை விட்டுட்டு மீடியாவுல அந்தப் பொண்ணு பேட்டிக் கொடுத்தது தப்பு.

அதுவும் போக செட்ல பாதுகாப்பு இல்லைன்னெல்லாம் பேசியிருக்காங்க. அது தயாரிப்பு நிறுவனம் மீது அபாண்டமா சொல்லப்பட்டிருக்கிற குற்றச்சாட்டு. இந்த சீரியல்ல இவங்க மட்டும் நடிக்கலை. டெக்னீஷியன் உட்பட 100 பேர் வேலை பார்க்கிற இடத்துல இவங்க மட்டும்தான் இப்படியொரு அவதூறைச் சொல்லி இருக்காங்க. அதேபோல, செட்ல பாதுகாப்பு இல்லைன்னா, தயாரிப்பாளர் தினமும் ஷூட்டிங் ஸ்பாட் வந்து போறப்ப அவர்கிட்டயே சொல்லியிருக்கலாம். இதுவரை ஒருமுறை கூட அப்படிச் சொன்னதில்லை.

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ மனிஷா

தவிர, இவங்க மீது தயாரிப்புத் தரப்புல இருந்தும் நிறையப் புகார் சொல்லலாம். ஷூட்டிங்கிற்கு நேரத்துக்கு வராதது உள்ளிட்ட காரணங்களால தயாரிப்புத் தரப்புக்கும் இவங்களால நஷ்டம் உண்டாகி இருக்கு…” என்கிற ரீதியில் இந்தப் புகார் நீளவதாகச் சொல்கிறார்கள் இந்த விவரம் தெரிந்தவர்கள்.

சீரியலின் தயாரிப்பாளர் பிரபுவையே தொடர்பு கொண்டு இது தொடர்பாகக் கேட்டோம்…

“சின்னத்திரைத் தயாரிப்பாளர் சங்கத்துல நான் புகார் அளித்திருப்பது நிஜம்தான். அங்க மட்டுமில்லாம டிவி நடிகர் சங்கத்துலயுமே பேசியிருக்கேன்” என்றவர், “இது குறித்து விரிவாகப் பேச கொஞ்ச அவகாசம் வேணும்” என முடித்துக் கொண்டார்.

சீரியல் வட்டாரத்தில் இது தொடர்பாக மேலும் சிலரிடத்தில் பேசிய போது, “முன்பு நடிகை நிரோஷா தயாரித்த சீரியலில் நடித்த போதும் அவருடன் மனிஷாவுக்குப் பிரச்னை உண்டானது. இப்ப தயாரிப்பாளர் சங்கம்வரை புகார் போயிட்டதால, நடிக்கத் தடை விதிக்கப்படுமா அல்லது அவங்க என்ன நடவடிக்கை எடுக்கப் போறாங்கனு பொறுத்திருந்துதான் பார்க்கணும்” என்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.