தமிழக அரசியலில் தொடர்ந்து 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருபவர் தமிழருவி மணியன். அவருடன் ஆனந்த விகடன் யூ-டியூப் சேனலில் கதைப்போமா நிகழ்ச்சியில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா நடத்திய உரையாடல் இதோ…

நீங்கள் இவ்வளவு காலம் அரசியல் களத்தில் பயணித்துவிட்டு திடீரென அரசியலில் இருந்து விலகுவதாய் அறிவித்ததற்கு காரணம் என்ன?

தமிழருவி மணியன்

1967ல் நான் என் அரசியல் பாதையை தொடங்கினேன். அப்போதிருந்து இப்போது வரை எனக்கு சரியென பட்டதைச் செய்திருக்கிறேன். நான் முழுக்க மக்களின் நலனுக்காகவே சிந்தித்திருக்கிறேன். அதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு, அதில் பல சமயங்களில் தோல்வியும் அடைந்திருக்கேன். கடைசியில் இறுதியாக நான் எடுத்த முடிவு தோல்வியுற்ற நிலையில் இன்னொருவர் பின்னாடி செல்வதற்கு எனக்கு விருப்பமில்லை. அதனால் ஒரு விரக்தியின் வெளிபாட்டால் அரசியல் போதும் என்று முடிவெடுத்தேன். நான் 53 ஆண்டு காலம் அரசியலில் இருந்திருக்கிறேன். ஆனால் இதுவரை ஒரு பைசாகூட வாங்கியதில்லை. 2001 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தமாகா சார்பில் போட்டியிட மூப்பனார் என்னை அழைத்தார். நான் வேண்டாமென மறுத்துவிட்டேன். காந்தியோ பெரியாரோ இதுவரை ஒருமுறைகூட அதிகாரத்தின் அருகில் சென்றதில்லை. நான் அவர்கள் வழியையே பின்பற்றுகிறேன்.

நீங்கள் மதுவிலக்கிற்கு ஆதரவாக நீண்ட காலமாக குரல் கொடுப்பவர். இப்போது உங்களுடைய நிலைபாடு என்ன?

மது விலக்கு

இன்று மதுவிற்கு அடிமையாகி பல்வேறு சிறுவர்கள் தங்களது வாழ்வை சீரழிக்கின்றனர். இதனால் அவர்களது வாழ்கையை கேள்விக்குறியாகிறது. ஆதலால் இந்த மதுவை ஒழிக்க கட்டாயம் அரசு நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.ரூ. 30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்ககூடிய வழியை உடனே நிறுத்துவது அரசுக்கு கஷ்டம்தான். ஆனால் இதை கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு பொருளாதார வல்லுநர்களை வைத்து மதுவிற்கு மாற்று உண்டாக்க வேண்டும்.

ரஜினி முதல்வராக வரவேண்டும் என்று அவருக்கு ஆதரவாக நீங்கள் இருந்தபோது திடீரென அவர் அரசியிலில் இருந்து விலகியதும் உங்களின் மனநிலை என்ன?

எம்.ஜி.ஆர். – சிவாஜி கணேசன்

மீளா துயரத்திற்கு ஆளானேன் என்று தான் சொல்ல வேண்டும். நான் சிவாஜியின் மிகப்பெரிய ரசிகன். ஆனால் அவர் அரசியலுக்கு வந்தவுடன் அவர் மன்றத்தில் இருந்து வெளியேறினேன். அதே சமயம் ஒரு முறை அதிமுக – ஜனதா தளத்துடன் கூட்டணியில் இருந்த போது ஜனதா தளம் சார்பில் பிரச்சாரம் செய்தேன். அதையறிந்து என் பேச்சால் ஈர்க்கப்பட்டு எம்.ஜி.ஆர் அன்று கோடம்பாக்கம் குமாரை வைத்து என்னை அவர் வீட்டிற்கு அழைத்தார். அப்போதும் அந்த அழைப்பை நான் மறுத்துவிட்டேன். அரசியலில் எந்த நடிகரின் பின்னால் செல்வதும் எனக்கு பிடிக்காது. ஆனால் ரஜினியுடன் மட்டும் நான் இருந்தேன். ஏனென்றால் அவர் தான் அடிப்படையே தவறாக இருக்கிறது. சிஸ்டத்தை மாற்ற வேண்டுமென்று முன்வந்தார். இதையே தான் நான் ரஜினியிடம் சொன்னேன். என்னுடைய முதல் சந்திப்பிலேயே ரஜினி அவர் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்று அறிவித்து விட்டார்.

அப்படியென்றால் அவரை பாஜக பின்னிருந்து இயக்கியது என்று எடுத்துக்கொள்ளலாமா?

அப்படியிருந்தால் நான் அவருடன் இருந்திருக்க மாட்டேனே. ஆரம்பத்தில் இருந்தே பாஜக விற்கு எதிரான மனநிலை உடையவன் நான். அவரும் எந்த மதம் சார்ந்தும் இல்லாமல் ஆன்மிக அரசியலை விரும்பினார். அதனால் தான் 234 தொகுதியிலும் தனித்து நின்று போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். அப்படி போட்டியிட்டு இருந்தால் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக இல்லாது வேறொரு கட்சியுடன் தான் கூட்டணி வைத்திருப்போம்.

இப்போது ரஜினியின் மனநிலை என்ன?

ரஜினிகாந்த்

அவர் அரசியலில் இருந்து விலகியதை அறிவித்தவுடன் என்னைச் சந்தித்து பேசினார். அவருக்கு கொரோனாவில் இருந்து வெல்ல நோய்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வேண்டும். ஆனால் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ளமையால் இவரால் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த இயலாது. அதுவும் பாதிப்பை உண்டாக்கும். இந்த நிலையில் எப்படி ஐயா என்னால் அரசியலில் பயணிக்க முடியும் என்று கேட்டார். உடனே நான், “உங்கள் உள்ளமும் உடலும் என்ன சொல்கிறதோ, அதை செய்யுங்கள். ஆரம்பத்தில் எனக்கு உங்கள் மீது கோபம் இருந்தது. பின் வருத்தம் இருந்தது. இப்போது இரண்டும் போய் அன்பு மட்டும் தான் இருக்கிறது” என்று கூறினேன்.

நேர்காணலின் வீடியோ பதிவு இதோ

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.