நிதி மோசடி:

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் தொடர் நிதி மோசடிகளில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சமீபத்தில் மட்டும், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடமிருந்து 2,124 கோடி ரூபாய், திருச்சி எல்பின் இ காட் நிறுவனத்தில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 500 கோடி ரூபாயும், ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆறாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகள் செய்துள்ளார்கள்.

ஐ.எஃப்.எஸ்

இந்த மூன்று நிதி நிறுவனமும், முதலீடு செய்தவர்களிடம் மோசடி ஈடுபட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து அந்த நிறுவனங்களின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது. அதேபோல, கோவையில் இயங்கிவந்த கிரீன் கிரெஸ்ட், டிரீம்ஸ் மேக்கர் குளோபல் லிமிடெட், ஏரோ டிரேடிங், வின் வெல்த் போன்ற ஐந்து நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாகச் சொல்லி முதலீட்டாளர்களிடம் பண மோசடி செய்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கம்:

மோசடி புகாரில் சிக்கிய நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கி, முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திரும்பச் செலுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆருத்ரா கோல்டு நிறுவனத்துக்குச் சொந்தமான 155 கோடி ரூபாய் சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 85 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல, எல்பின் இ காட்’ நிதி நிறுவனத்தின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கண்டறியப்பட்டிருக்கிறது. ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தின் சொத்துக்களைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

ஐ.எஃப்.எஸ் சகோதரர்கள்

இந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டில் இதுபோன்ற நிதி நிறுவன மோசடி புகார் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அதிக வட்டி தருவதாக மோசடியில் ஈடுபட 124 நிதி நிறுவனங்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் 250 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

முதலீடு செய்வதற்கு முன்பாக விசாரிக்க வேண்டும்:

பொதுமக்கள் தங்களின் பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாகப் பொருளாதார நிபுணர் நாகப்பனிடம் பேசினோம். “முதலீடுகளைப் பொறுத்தவரை, பாதுகாப்பான முதலீடு, ரிஸ்க் உள்ள முதலீடு என்று இரண்டு வகைதான் இருக்கிறது. இதில் பிக்ஸ்ட் டெபாசிட் போன்ற பாதுகாப்பான முதலீடுகளைப் பொறுத்தவரைக் குறைந்த வருமானம்தான் கிடைக்கும். ஆனால், நமது பணத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அடுத்ததாகச் சேர் மார்க்கெட் போன்ற ரிஸ்க் முதலீடு, அதிக வருமானம் கிடைக்கும் என்றாலும், இது ரிஸ்க் நிறைந்ததே. இந்த இரண்டையும் தாண்டி, குறைந்த காலத்தில் மிக அதிக வருமானம் கிடைக்கிறது என்று மக்கள் செல்வதில்தான் ஏமாற்றப்படுகிறார்கள்” என்றார்.

நாகப்பன்

தொடர்ந்து பேசியவர், “ உங்கள் பணத்தை எங்கு முதலீடு செய்யப்போகிறீர்கள் என்பதை நன்கு ஆராயவேண்டும். பக்கத்துக்கு வீட்டுக்காரர் சொல்கிறார், உறவினர்கள் சொல்கிறார்கள், அவர்களுக்குப் பணம் வருகிறது என்று சொல்வதை வைத்து முதலீடு செய்வதுதான் தவறு. அதிக வட்டி தருகின்றோம் என்று சொல்லும் நிறுவனங்கள் பலவும் ஒரு சில வருடங்கள் மட்டுமே கொடுக்கும். அதற்கு அடுத்ததாக அந்த நிறுவனமும் இருக்காது, நமக்குப் பணமும் வராது. ஒரு நிறுவனம் உங்கள் முதலீடுகளை ஸ்டாம் பேப்பரில் எழுதிப் பதிவு செய்து தருகின்றோம் என்று சொன்னாலும் நம்பிவிடாதீர்கள். அது எதுவுமே உங்கள் பணத்தை இழந்தால் மீட்டுத்தர உதவாது. முதலீடு செய்வதற்கு முன்பாக நன்கு விசாரித்து அந்த நிறுவனம் எப்படிச் செயல்படுகிறது. எப்படி இந்தளவு அதிக வட்டி தருவது சாத்தியம் நன்கு தெரிந்துகொண்டு உங்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள்” என்று கூறினார்.

உங்கள் பணத்தை வைத்து உங்களுக்கு வட்டி:

அதிகரிக்கும் நிதி நிறுவன மோசடி தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “பெரும்பாலான மக்கள் குறைந்த காலத்தில் அதிக வட்டி தருகிறார்கள் என்று ஏமாந்து தங்கள் சேமிப்பு மொத்தத்தையும் முதலீடு செய்து ஏமாந்து விடுகிறார்கள். ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் எட்டாயிரம் ரூபாய் கிடைக்கிறது என்று சொன்னால் அனைவர்க்கும் ஆசை வரத்தான் செய்யும். அதிலும், நமக்குத் தெரிந்தவர்கள் அதில் பயனடைகிறார்கள் என்றபோது நாமும் சேரவேண்டும் என்று நினைப்போம். மோசடி செய்யும் நிறுவனங்கள், நீங்கள் முதலீடு செய்யும் பணத்தைப் பங்குச்சந்தையில், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து அதில் வரும் லாபம் மூலமாக உங்களுக்கு அதிக வட்டி தருகின்றோம் என்று ஆசை காட்டுகிறார்கள்.

மோசடி (Representational Image)

நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை வைத்துத்தான் உங்களுக்கு வட்டியே தருகின்றார்கள். ஒரு கட்டத்தில், வட்டி கொடுக்க முடியாத நிலையில் மோசடி செய்கின்றார்கள். பொதுமக்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பாக அந்த நிறுவனம் ஆர்.பி.ஐ-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அப்படிப் பதிவு செய்திருந்தாலும், அந்த நிறுவனத்தின் பின்புலம் என்ன என்பதையும் ஆய்வு செய்யவேண்டியது அவசியம். புகாரின் அடிப்படையில் இப்போது மோசடியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.