இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் வருகை தரும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி நாளை(14-08-2022) காலை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து கோதண்ட ராமர் கோவிலைச் சுற்றி விசைப்படகில் தேசியக் கொடியுடன் வலம் வரும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 75 தேசியக் கொடிகளுடன் 75 நாட்டுப்பாடகில் குந்துகால் வரை கடலில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் என ராமநாதபுரம் பா.ஜ.க சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் வரை தேசிய கொடியுடன் நடை பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மீனவர் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பெர்னான்டோ, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தேசிய கொடியுடன் கடலில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என தலைமைச் செயலாளர், டி.ஜி.பி மற்றும் மீன்வளத்துறை உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கு புகார் அளித்தது பரபரப்பு கிளப்பி உள்ளது.

தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட புகார்

இதுகுறித்து ஆர்ம்ஸ்ட்ராங் பெர்னான்டோவிடம் பேசினோம், “நாட்டுப்படகு என்பது மீன்பிடிக்க மட்டும் தான். அதுவும் முறைப்படி ‘டோக்கன்’ வாங்கினால் மட்டும்தான் அனுமதியும் வழங்கப்படுகிறது. மீனவர் தனது குடும்பத்தை படகில் ஏற்றி சென்றாலே, மரைன் போலீஸார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்து வரும் இந்த சூழலில், தனிப்பட்ட கட்சி விளம்பரத்திற்காக கடலில் சுற்றுப்பயணம் செய்ய அனுமதி அளித்தது யார்?

நான்கு மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் ராகுல் காந்தி கடலில் சுற்றுப்பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது, இதில் பா.ஜ.கவினருக்கு மட்டும் விதிவிலக்கா, எனவே அண்ணாமலையின் இந்த கடல் வழி சுற்றுப்பயணத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என அனைவருக்கும் புகார் மனு அனுப்பி உள்ளேன். அவ்வாறு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் நாங்களும் நாட்டுப் படகில் கடலில் மீனவர்களுடன் சென்று, இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு கொண்டு வருவோம்” என ஆவேசமாக கூறினார்.

இது குறித்து ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயனிடம் பேசினோம், “நாட்டுப்படகில் கடலில் தேசியக் கொடியுடன் பா.ஜ.க சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக புகார் வந்துள்ளது. இதற்கு எங்கள் தரப்பில் எதுவும் அனுமதி வழங்கப்படவில்லை. மீனவர்களும் அனுமதி இன்றி கடலில் சுற்றுப்பயணம் செய்ததுகுறித்து தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

அருகருகே பேனர்களை வைத்துள்ள பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர்

பா.ஜ.க மாவட்ட தலைவர் கதிரவனிடம் பேசினோம், “75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முழுக்க முழுக்க தேசிய கொடிகளை மட்டுமே கட்டி நாட்டுப் படகில் கடலில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம். இதற்கு வனத்துறை, நேவி , மாவட்ட ஆட்சித் தலைவர், போலீஸ் பிராண்டு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளோம். காங்கிரஸ் கட்சியினர் தனிப்பட்ட விளம்பரத்திற்காக இது போன்ற புகாரை கொடுத்துள்ளனர். திட்டமிட்டபடி பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் இந்த கடல் வழி சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நடைபெறும்” எனக் கூறினார்.

பாம்பனில் நாளை ஒரே நேரத்தில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் நிகழ்ச்சிகள் நடைபெறும் சூழலில் காங்கிரஸ் கட்சியினரின் இந்த புகாரால் பா.ஜ.கவினர் கடும் ‘அப்செட்’ அடைந்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியினரின் பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

கிழிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியினரின் பேனர்

இந்த பதற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாக தகவல் அறிந்த போலீஸார் தெரிவித்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.