வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

“பாரதி.. பாரதி… “ என்று அம்மா அழைப்பது எங்கோ கனவில் கேட்பது போல இருந்தது பாரதிக்கு.

“எந்திரு கண்ணு. ஸ்கூலுக்கு டைம் ஆயுடுச்சி. பக்கத்து ராமசாமி அண்ணன் கடையில போயி நூறு கிராம் சக்கர வாங்கிட்டு ஓடியா சாமி” என்று தேன்மொழி தன் மகளை எழுப்பினார்.

“சரிம்மா…” என்று சலித்தவாறு சோம்பல் முறித்து பல்தேய்த்து விட்டு, ராமசாமி அண்ணன் கடைக்கு தன் குட்டி சைக்கிளில் சென்றாள்.

எப்பொழுது கீழே குதிக்கலாம் என்று மூக்கின் நுனியில் காத்திருந்த கண்ணாடியின் மூலம் அம்மாதத்தின் லாப நஷ்டக் கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் ராமசாமி.

“கிளிங்.. கிளிங்..” என தனது சைக்கிளின் மணியை ஆட்களே இல்லாத தெருவில் அடித்த வண்ணம் பெட்டிக்கடையின் முன் வந்து நின்ற பாரதியை, விழிகளை உயர்த்திப் பார்த்த ராமசாமி, கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த பேனாவை காதின் பின் பத்திரப் படுத்திவிட்டு எழுந்து வந்தார்.

“என்ன கண்ணு வேணும் ?”

“நூறு கிராம் சக்கர வாங்கிட்டு வரச் சொன்னாங்க அம்மா”

“ம்.. பொறு கொண்டு வாரேன்” என்று ஒரு பொட்டலத்தில் எடையே போடாமல் கட்டிக் கொடுத்தார்.

சர்க்கரையை வாங்கிக் கொண்டு ஐந்து ரூபாய் நோட்டை நீட்டினாள்.

“ஹூம்ம்… காலைலயே கரெக்ட்டா சில்லறை கொண்டு வர்றதுல்லயா?” என்று சலித்துக் கொண்டு, ஒரு ரூபாயும் , ஒரு காஃபி பைட் சாக்லேட்டும் மீதியாகக் கொடுத்தார்.

“சாக்லேட் நான் கேக்கலயே” என்று பாரதி கேட்க,

“கரெக்ட்டா சில்லறை கொண்டு வரலன்னா அப்படித்தான் குடுப்போம்” என்றார்.

பதில் பேச முடியாமல் கொடுத்ததை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியவள் ஒரு ரூபாயையும், சர்க்கரைப் பொட்டலத்தையும் அம்மாவிடம் கொடுத்துவிட்டு, காஃபிபைட் சாக்லெட்டை ஒரு டப்பாவில் போட்டு அவளுடைய ஸ்கூல் பேக்கில் வைத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் விடிந்தது…

மளிகைக் கடை (Representational Image)

ஐந்து ரூபாயோடு சர்க்கரை வாங்கச் சென்றாள்.

ஒரு ரூபாயும், காஃபி பைட் சாக்லெட்டோடும் திரும்பி வந்தாள்..

இது மேலும் ஐந்து நாட்கள் தொடர்ந்தன…

அன்று தன் அம்மா எழுப்பாமலேயே எழுந்தவள், சைக்கிளை எடுத்துக் கொண்டு தன் சைக்கிள் பெல்லை அடித்து “அம்மா நான் சர்க்கரை வாங்கிட்டு வரேன்.” என்று தெருவில் உள்ள பத்து வீட்டிற்கும் கேட்கும்படி கூறிவிட்டுச் சென்றாள்.

“காசு இந்தாமா..” என்று தேன்மொழி வெளியே ஒடி வருவதற்குள் தெரு ஓரம் மறைந்தாள் பாரதி.

பாரதியின் வருகைக்காக ராமசாமி காத்திருந்தார். நூறு கிராம் சக்கரையும், ஒரு ரூபாய் மீதியும் ஒரு காஃபி பைட் சாக்லெட்டும் தயாராக இருந்தது.

சைக்கிள் பெல்லை அடித்துக் கொண்டே வந்தவள், வழக்கம் போல

“ராமசாமி அண்ணே.. நூறு கிராம் சர்க்கரை தாங்க” என்றாள்.

“ம்… இந்தா ரெடியா இருக்கு. நீதான் தினமும் வரியே. நான் முன்னாடியே கட்டி வச்சுட்டேன்.” என்று சர்க்கரைப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு, ஐந்து ரூபாய்க்காகக் காத்திருந்தார், ஒரு ரூபாயும், ஒரு காஃபி பைட் சாக்லேட்டும் மீதியாக தருவதற்கு.

சர்க்கரையை வாங்கிக் கொண்ட பாரதி, ஏழு காஃபி பைட் சாக்லேட்டுகளைக் கொடுத்தாள்.

அதிர்ச்சியான ராமசாமி,

“என்ன பாப்பா இது?” என்று மிரட்டும் தோரணையில் கேட்க,

“நீங்க குடுத்த சாக்லெட்டு தான் அண்ணாச்சி. ஐம்பது காசு சில்லரை இல்லனு , குடுத்தீங்க இல்ல, அதே மாதிரி நானும் மூன்று ரூபா ஐம்பது காசுக்கு பதிலா ஏழு காஃபி பைட் சாக்லேட் குடுக்கிறேன்” என்று கூறிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் பறந்தாள்.

“ஏய் இரு பாப்பா” என்று பாரதியின் பின்னாலேயே சென்றார் ராமசாமி.

வீட்டிற்கு வெளியே காத்துக்கொண்டிருந்த தேன்மொழி, பாரதியின் பின்னாலேயே ராமசாமி வருவதை ஆச்சர்யமாகப் பார்த்தார்.

பாரதி சர்க்கரைப் பொட்டலத்தை தேன்மொழியிடம் கொடுக்க, ராமசாமியும் வந்து சேர்ந்தார்.

“என்ன அண்ணே? வீட்டுக்கே வந்துட்டீங்க, புள்ள காசு எடுக்க மறந்திட்டா.” என்று தேன்மொழி கூற,

“பாப்பா மறக்க வெல்லாம் இல்லமா” என்று ராமசாமி நடந்தவற்றை ஒப்பித்து முடித்தார்.

நடந்ததைக் கேட்டவுடன் வாய்மூடி சிரித்து விட்டு

“விடுங்க அண்ணே. சின்ன புள்ள, வெளையாட்டுத் தனமா செஞ்சுடுச்சு” என்று கூறி “இந்தாங்க சக்கரைக்குக் காசு” – என்று பணம் கொடுத்து அனுப்பி வைத்தார் ராமசாமியை.

“என்னம்மா காலைலயே பெட்டிக் கடைக்காரர் வந்துட்டு போறாரு?” என்று பாரதியின் தந்தை செல்லதுரை கேட்டார்.

“எல்லாம் உங்க மக செஞ்ச கூத்து தான்.” என்று நடந்ததை தேன்மொழி ஒப்புவிக்க,

“ஹ…ஹ.. என் பொண்ணு எல்லாம் சரியாத்தான் செய்யுவா” என்று பெருமையடித்தார் செல்லதுரை.

“என்ன சரியாத்தான் செய்யுவா. கோவத்துல ராமசாமி அண்ணன் சாமான் தரமாட்டேன்னு சொல்லிட்டா அஞ்சு மைலுக்கு அந்தாண்ட போயி தான் சாமான் வாங்கிட்டு வரனும்” என்று இடித்துவிட்டு வேலையைப் பார்க்கச் சென்றார்.

சர்க்கரை

மூன்று வருடங்கள் கடந்தன…

பாரதியும் வளர்ந்தாள்..

சமூகமும் வளர்ந்தது..

பெட்டிக்கடையும் பெரிய மளிகைக் கடையாக வளர்ந்தது..

ஒரு பொட்டல சர்க்கரை வாங்கச் சென்று கொண்டிருந்தவள் பெரிய மளிகை சாமான் லிஸ்ட்டை எடுத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தாள்.

“ராமசாமி மளிகைக் கடை” என போர்டு தாங்கிய பெரியகடை முன் வந்து நின்றாள். ஐந்து வேலை ஆட்கள் அங்கும் இங்கும் பறக்க வியாபாரம் சூடு பிடித்துக் கொண்டிருந்த காலை வேலை.

பாரதி தன் பட்டியலில் இருந்த சமான்களை வாங்கிக் கொண்டு ஐநூறு ரூபாயை கல்லாவில் அமர்ந்திருந்த ராமசாமியிடம் நீட்ட,

“காலைலயே கரெக்ட்டா சில்லறை கொண்டு வர்றதுல்லயா?” என்று கடை மாறினாலும் அந்த வாக்கியத்தை மட்டும் மாற்றாமல், நூற்றைம்பது ரூபாயும், பத்து ரூபாய் பெருமானம் உள்ள ஒரு டெய்ரி மில்க் சாக்லேட்டும் கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்டு பாரதி பேச முற்படும் முன்,

“அப்படித்தான் குடுப்போம். சில்லரை கரெக்ட்டா கொண்டு வரலன்னா” என்றார்.

“ஹீம்ம்…” என்று பெருமூச்சுடன் கொடுத்ததை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினாள்.

ஒரு வாரம் கழிந்தது..

கணக்கு வழக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ராமசாமி,

“சார், போஸ்ட்”

என்று குரல் கேட்டுத் திரும்பினார்.

வந்த போஸ்ட்டைத் திறந்து படித்தவர் அதிர்ச்சியில் இருதயத்தைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தார்.

“ஆர்டர்.. ஆர்டர்..” என நீதிபதி கூற சுய நினைவிற்கு வந்தார் ராமசாமி.

இருதரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.

“பாதிக்கப்பட்ட மனுதாரரை வரச்சொல்லுங்க” என்று நீதிபதி கட்டளையிட,

“பாரதி செல்லதுரை, பாரதி செல்லதுரை, பாரதி செல்லதுரை.” என்று அழைக்கப்பட, எட்டாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவியான பாரதி செல்லதுரை கம்பீரமாக ஏறினாள் சாட்சிக் கூண்டில்.

வாய்பிளந்த வண்ணம் ஆச்சர்யமாகப் பார்த்த நீதிபதி,

“நீங்க தான் கேஸ் குடுத்ததா மா?” என்று கேட்டார்.

“யெஸ் யுவர் ஆனர்” என்று நிமிர்ந்து பதில் கூறினாள்.
“நடந்தது என்னனு கோர்ட் முன்னாடி ஒரு தரம் சொல்றியா மா” என்று நீதிபதி கேட்க,

“சொல்றேங்க..” என்று தொடர்ந்தாள்,
“நான் ஐந்தாவது படிக்கும் போது என் அம்மா டெயிலியும் சக்கரை வாங்கி வரச் சொல்லி ராமசாமி அண்ணன் கடைக்கு அனுப்புவாங்க. ஐந்து ரூபாய் குடுப்பேன். மீதி ஒரு ரூபாய் ஐம்பது காசுக்கு பதிலா, ஒரு ரூபாயும் ஒரு காஃபிபைட் சாக்லேட்டும் குடுப்பாங்க. இது தினமும் நடந்துச்சு. நான் அந்த காஃபிபைட் சாக்லட்ட சேர்த்து வச்சு ஒரு நாள் மூன்று ரூபாய் ஐம்பது காசுக்கு பதிலா ஒரு ஏழு சாக்லெட்ட குடுத்தேன்” என்று கூற நீதிபதி உட்பட மக்களும் சிரித்தனர்.

நீதி மன்றம்

தொடர்ந்தாள்…

“எங்க வீட்டுக்கே வந்து என் அம்மா கிட்ட காச வாங்கிட்டுப் போயிட்டாங்க . நான் வளர்ந்து எட்டாம் வகுப்பும் வந்துட்டேன். அவரோட பெட்டிக்கடையும் பெரிய மளிகைக் கடை ஆயுருச்சு. ஐம்பது காசு சில்லறை இல்லன்னு காப்பி பைட் குடுத்த ராமசாமி அண்ணே, பத்து ரூபா மீதி இல்லன்னு டெய்ரி மில்க் குடுக்க ஆரம்பிச்சுட்டாரு.”

இம்முறை யாரும் சிரிக்கவில்லை. நீதிபதி உட்பட அனைவரும் சிந்தித்தனர்.

“கேட்டா.. அப்படித்தான் குடுப்பேன்னு சொல்றாரு. ஸ்கூல் பாடப் புத்தகத்துல ஒரு உண்மைக் கதை படிச்சேன். சரியான சில்லறை தராத கண்டக்டர் மேல கேஸ் போட்டு காம்பன்ஷேஷன் வாங்கினதா. அதான் நானும் அண்ணாச்சி மேல கேஸ் போட்டு அவர திருத்தனும்னு, என் அப்பாகிட்ட கேட்டேன். கோர்ட்டுல ஆதாரம் கேப்பாங்கனு சொன்னாங்க. ஐநூறு ரூபா கொண்டு போனா எப்படியும் டெய்ரி மில்க் மீதியா குடுப்பாங்கனு தெரியும். அதான் வீடியோ எடுத்தோம் நானும் என் ப்ரெண்டும்.” என்று கூறி முடித்தாள்.

“ செல்லதுரை, உங்க பொண்ண சமூகப் பொறுப்போட வளர்க்கறீங்க. வாழ்த்துக்கள்” என்று நீதிபதி பாராட்ட,

வழக்கறிஞர் உடையில் இருந்த பாரதியின் தந்தை செல்லதுரை எழுந்து நின்று நன்றி கூறினார்.

பின்பு பாரதியின் பக்கம் திரும்பிய நீதிபதி “எந்த செக்ஷன் படி கேஸ் போட்டிருக்கன்னு உனக்குத் தெரியுமா மா?” என்று கேட்டார்.

“தெரியுமே. கன்ஸ்யூமர் ப்ரொடெக்ஷன் ஏக்ட், செக்ஷன் 23 “

“வெரி குட்!!” என்று பாராட்டிய நீதிபதி, தீர்ப்பை கீழ் வருமாரு வாசித்தார்.

“பாதிக்கப்பட்ட மனுதாரர் சாட்டிய குற்றமும், அதனால் ஏற்பட்ட நஷ்டமும், மன உலைச்சலும் நீருபிக்கப்பட்டு விட்டது. குற்றம் சாட்டப்பட்ட ராமசாமியை இந்தக் கோர்ட் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் ஐந்து லட்சம் மாணவி பாரதி அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், இனிமேல் இத்தகைய தவறு நேர்ந்தால் இழப்பீடோடு சேர்த்து, கடுங்காவல் தண்டனையும் வழங்கப்படும் என்றும் இந்த நீதிமன்றம் எச்சரிக்கிறது. கன்ஸ்யூமர் ப்ரொடெக்ஷன் ஏக்டின் கீழ் வணிகர்களும் வணிகர் சங்கங்களும் நடக்க வேண்டும் என்றும், இந்த நீதிமன்றம் கட்டளை இடுகிறது.

சட்டம் மக்களைக் காப்பதற்கே என்று துணிச்சலாக நீதிமன்றம் ஏறிய மாணவி பாரதியையும் அவருடைய தந்தையும் வழக்கறிஞருமான திரு.செல்லதுரை அவர்களையும் இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது.

அப்படித்தான் என தவறிழைக்கும் நபர்களுக்கும், மேலும் இது மாதிரியான பல அப்படித்தான்-களை தவறென்று தெரிந்தும் அவற்றைப் பொறுத்தக் கொண்டு செல்லுபவர்களுக்கும் இந்த வழக்கு ஒரு பெரிய உதாரணமாக இருக்கும்.

சட்டத்தையும் நீதி தர்மத்தையும் தானும் கடைபிடித்து மற்றவர்களையும் கடை பிடிக்க வைப்பதும் மக்களின் கடமையே.” என்று தீர்ப்பை வாசித்து முடித்தார் நீதிபதி.

மலர்விழி மணியம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.