ஆகஸ்ட் 9..! உலக வரலாற்றில் ஆறாத ரணத்தை அழுத்தமாகப் பதித்த தினம்!

வளர்ச்சியின் முகமாக அறியப்பட்ட, அறியப்படும் அறிவியல் தனது கோர முகத்தை காட்டிய தினம் இது. இரண்டாம் உலகப் போர் நடக்கும்போது இதே நாளில் தான் அமெரிக்கா தனது அணுகுண்டை ஜப்பானின் நாகசாகி நகரில் வீசியது. அணுகுண்டு வெடித்த விளைவு, அதன் அதிர்வலைகள் ஏற்படுத்திய விளைவு, கதிரியக்க விளைவு ஆகிய அனைத்தின் விளைவாக கிட்டத்தட்ட 80 ஆயிரம் மக்கள் இதனால் பலியானார்கள். அமெரிக்கா இதை திட்டமிடாமலோ, விளைவுகளின் வீரியத்தை அறியாமலோ இதைச் செய்யவில்லை. மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு அணுகுண்டை ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது வீசி, அதன் விளைவுகளை, உயிர்ப்பலிகளை, சேதங்களை முழுவதுமாக பார்த்த ஒரே நாடு அமெரிக்காதான்! மற்றவர்களுக்கு அது செவிவழிச் செய்திதான்! தங்கள் கண்களால் அத்தனை கொடுமைகளையும் கண்களால் பார்த்தபின்பும், அடுத்த அணுகுண்டை விமானத்தில் ஏற்றி, இன்னும் ஆயிரக்கணக்கான மக்களை கொல்லும் அளவுக்கு அமெரிக்கா ஏன் இரக்கம் இல்லாமல் போனது?

Atomic bombings of Hiroshima and Nagasaki - Wikipedia

ஏன் ஜப்பான் மீது மட்டும் அணுகுண்டு தாக்குதல்?

அச்சு நாடுகளைச் சேர்ந்த ஜெர்மனியின் அதிபர் ஹிட்லர் தற்கொலை, இத்தாலி அதிபர் முசோலினி படுகொலையை அடுத்து ஐரோப்பாவில் போரின் உஷ்ணம் அடங்கியிருந்தது. 1945 மே 8 அன்று ஜெர்மனி சரணடைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் போரின் உஷ்ணம் அடங்காமல் இன்னும் தகித்து கொண்டிருந்த இடம்தான் ஜப்பான். சரணடையுமாறு வைத்த கோரிக்கையை ஜப்பான் நிராகரித்தது ஏற்கனவே முத்து துறைமுகம் (Pearl Harbour) மீது நடத்திய தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்காவிற்கு கடும் ஆத்திரத்தை கிளப்பியது. அனைத்து நேச நாடுகளின் தலைவர்களும் இணைந்து பேசி உலக வரலாற்றில் ஒரு முக்கியமான முடிவை எடுத்தனர். ஜப்பான் மீது அணுகுண்டை வீசலாம் என்று! பல அறிவியலாளர்களும் அணுகுண்டு எப்படி வெடிக்கும்? அதன் விளைவுகளை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் இதற்கு சம்மதிக்க, பேரழிவைச் சந்திக்க ஆயத்தமானது ஜப்பான்.

A map of East Asia and the Western Pacific during World War II

பேரழிவை நிகழ்த்திய முதல் “லிட்டில் பாய்” அணுகுண்டு:

ஜப்பானின் தொழில்துறையில் சிறந்து விளங்கிய, ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்த மிகவும் முக்கியமான நகரம்தான் ஹிரோஷிமா. அந்நாட்டை வீழ்த்தி சரணடையச் செய்ய இந்த நகர் மீது தாக்குதல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. மிகவும் சக்திவாய்ந்த யுரேனியம்-235 ஆல் நிரப்பப்பட்ட “லிட்டில் பாய்” அணுகுண்டுடன் எனோலா கே விமானம் உட்பட 7 விமானங்கள் 1945 மே 6 அன்று தாக்குதலுக்கு புறப்பட்டன. வானிலை முன்னறிவிக்கும் 3 விமானங்களின் உதவியால் இலக்கை குறிவைத்து அணுகுண்டை விடுவிக்க தயாரானார் விமானி பால் டிப்பெட்ஸ். தாங்கள் கிளம்பும் முன்னர் அணுகுண்டு வெடித்துவிட்டால் ஆபத்து என்பதால், 9200 அடி உயரத்தில் இருந்து அணுகுண்டை வீசினர்.

There's a receipt for the Hiroshima Nuclear Bomb

காலை 8.15 மணிக்கு பரபரப்பான இயங்கத் துவங்கிய நகரம் மீது அழையா விருந்தாளியாக வந்து விழுந்தது அந்த “லிட்டில் பாய்”. அந்நகரில் அலாய் பாலத்தை குறிவைத்து வீசப்பட்ட இந்த அணுகுண்டு, காற்றின் வேகம் காரணமாக 240 மீட்டர் தூரத்திற்கு சற்று விலகிச் சென்று ஷிமா மருத்துவமனை மீது விழுந்தது. “நாங்கள் கண்ணால் கண்ட காட்சியை நம்புவது கடினமாக இருந்தது” என்று அதை வீசிய விமானி டிப்பெட்ஸ் பின்னாளில் தெரிவித்தார். பெயர்தான் “லிட்டில் பாய்”. ஆனால் அது நிகழ்த்திய பேரழிவு வார்த்தைகளை விவரிக்க இயலாதவை!

atomic bombings of Hiroshima and Nagasaki | Date, Facts, Significance,  Timeline, Deaths, & Aftermath | Britannica

பல்லாயிரம் பேர் “ஆவியானார்கள்”:

அணுகுண்டு வெடித்ததும் முதலில் அதன் அருகில் இருந்த நகரங்களில் வசித்தவர்கள் மிக மிகப் பிரகாசமான ஒரு ஒளியைப் பார்த்தாக குறிப்பிட்டுள்ளனர். அதை தொடர்ந்து காதை கிழிக்கும் அளவுக்கு மிகப் பயங்கரமான சப்தமும் கேட்க, ஏதோ தவறு நடந்திருப்பதை உணரத் துவங்கினர். அணுகுண்டு வெடித்ததும் 6 ஆயிரம் டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உமிழப்பட்டது. இந்த அளவுக்கு வெப்பத்தை உணர வேண்டுமென்றால் நாம் சூரியனின் மேற்பரப்புக்கு செல்ல வேண்டும். அணுகுண்டு விழுந்த இடத்தில் இருந்து 370 மீட்டர் தொலைவிற்குள் இருந்த அனைவரும் அடுத்த விநாடியே “ஆவியானார்கள்”. சாம்பல் கூட கிடைக்காத அளவுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்த இடத்தில் இருந்து மாயமாகி இருந்தனர். அவர்கள் இருந்த இடமும் வெப்பத்தின் தகிப்பில் கரைந்து போயிருந்தது. 20 நிமிடங்களுக்கு அணையா ஜோதியாக எரிந்து ஹிரோஷிமாவை சாம்பலாக்கியது லிட்டில் பாய்.

Hiroshima buildings that survived atomic bomb to be demolished - BBC News

பூகம்பங்களையே தாங்கும் அளவுக்கு வலுவாக கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் அனைத்தும் வெடிகுண்டின் அதிர்வலைகளால் நிலைக்குழைந்து இடிந்து சரிந்து இன்னும் ஆயிரக்கணக்கில் உயிரிழப்பை ஏற்படுத்தின. இதை அனைத்தையும் விட பயங்கரமானதாக கூறப்படுவதும் “அதன் கதிரியக்க விளைவுகள்”தான்! பலர் வெடிப்பில் இருந்து வெளியேறிய கதிரியக்கத்தால் என்னவென்று புரியாத பாதிப்புடன் மருத்துவமனைகளுக்கு விரைந்தபோதுதான் தெரிய வந்தது. நகரின் 90 சதவீத மருத்துவர்கள் உயிரிழந்து விட்டனர் என்பது! ஏனென்றால் வெடிகுண்டு விழுந்த இடத்தில்தான் நகரின் பெரும்பாலான மருத்துவமனைகள் இயங்கிவந்தன.

Hiroshima and Nagasaki bombings - ICAN

அன்றைய நாள் உயிரிழந்தவர்கள் உடல்களை வைப்பதற்காக நூலகங்கள், பிணவறைகளாக மாற்றப்பட்டன. அந்தளவுக்கு பிணக்குவியலால் நிரம்பியது ஹிரோஷிமா. வெடிகுண்டு விபத்து நிகழும் முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட அந்நகரின் புகைப்படத்தை கீழே கொடுத்து இருக்கிறோம். நகர் மொத்தமாக ஒன்றுமில்லாமல் துடைக்கப்பட்டிருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இந்த அணுகுண்டால் 80 ஆயிரம் முதல் 1.20 லட்சம் பொதுமக்கள் பலி ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கணக்கெடுக்க முடியாத அளவுக்கு பலர் “ஆவியாகி” காணாமல் போயிருந்தது இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

image

2வது அணுகுண்டு வீச ஏன் தயாரானது அமெரிக்கா?

ஹிரோஷிமா மீதான தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரூமேன் ஐப்பானை சரணடையுமாறு வானொலியில் உரையாற்றினார். “இப்போது அவர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்கவில்லை என்றால் இந்த பூமி இதுவரை காணாத அழிவு மழையை அவர்கள் காண்பார்கள். வான்வழி மட்டுமல்லாது கடல் மற்றும் தரை என அனைத்து வழிகளிலும் பெரும் தாக்குதலை தொடுப்போம்” என்று அவர் ஆற்றிய எச்சரிக்கை ஜப்பானின் அனைத்து செய்தி நிறுவனங்களிலும் தொடர்ச்சியாக ஒளிபரப்பானது. ஜப்பான் பிரதம மந்திரி சுஸுகி நேச நாடுகளின் கோரிக்கைகளை புறக்கணித்து போராடுவதற்கான தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் தெரிவித்தார். இவ்வேளையில் நேச நாடுகளில் ஜப்பானுடன் நட்பு பாராட்டிவந்த ரஷ்யாவும் அதற்கு எதிராக திரும்பியது. ஜப்பான் எல்லைகளை நோக்கி ரஷ்யப்படைகள் நெருங்கி வருவது தெரிந்தும், சரணடைய மறுத்து இருந்தது ஜப்பான். இதையடுத்து அடுத்த அணுகுண்டை வீச அமெரிக்கா முடிவெடுத்தது. ஹிரோஷிமா கொடூரத்தை நிகழ்த்திய, அதை கண்ணால் பார்த்த அதே குழுதான், இரக்கமில்லாமல் மற்றொரு பேரழிவை நிகழ்த்த ஆயத்தமானது.

நாகசாகியை சிதைத்த “ஃபேட் மேன்” அணுகுண்டு:

நாகசாகி நகரம் ஜப்பானின் மிகப்பெரிய துறைமுக நகரங்களில் ஒன்று. கப்பல்கள், ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் என தொழில்ரீதியாகவும் போர்க்கால அடிப்படையிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக திகழ்ந்தது “நாகசாகி”. ஆகஸ்ட் 11 அன்று முதலில் வெடிகுண்டு வீச முடிவு செய்யப்பட்ட நிலையில், வானிலை மாற்றத்தை கணித்து ஆகஸ்ட் 9 அன்று வெடிகுண்டை வீச முடிவு செய்தனர். 1945 ஆகஸ்ட் 9 அன்று காலை 11.02 மணிக்கு புளூட்டோனியத்தால் உருவாக்கப்பட்ட “ஃபேட் மேன்” அணுகுண்டை வீசியது அமெரிக்கா. நகரின் முக்கிய உரகாமி பள்ளத்தாக்கை நோக்கி வந்த இந்த அணுகுண்டு, பாதிவழியிலேயே வெடித்தது. அப்பகுதியில் இருந்த தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 6,200 பேர் அடுத்த விநாடியே ஆவியானார்கள். அணுகுண்டு விழுந்த இடம் பள்ளத்தாக்கு என்பதால் வெடிகுண்டின் அதிர்வலைகளை மலைகளும் குன்றுகளும் தடுத்து நிறுத்தி மட்டுப்படுத்தின.

முந்தைய படம் ஒரு நகரம் போல் தெரிகிறது.  பிந்தைய படத்தில், அனைத்தும் அழிக்கப்பட்டு, புகைப்படங்களின் மையத்தில் ஒரு தீவை உருவாக்கும் ஆறுகள் மூலம் மட்டுமே அது ஒரே பகுதி என அடையாளம் காண முடியும்.

ஆனால், வெப்பத்தின் பாதிப்பு மற்றும் கதிரியக்க விளைவுகளால் கிட்டத்தட்ட 35 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் பலியானதாக கூறப்படுகிறது. அளவிலும் சக்தியிலும் லிட்டில் பாயை விட சக்தி வாய்ந்த அணுகுண்டாக இருந்த போதிலும், நடுவழியில் வெடித்தது; அதிர்வலைகளை மலைகள் மட்டுப்படுத்தியது என்பது உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் அதை விட குறைவாக நிகழ்ந்தது. ஆனால் கதிரியக்க பாதிப்புகள் இப்போதும் இந்த நகரங்களில் இருக்கும் அளவுக்கு, பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கு உடல் பாதிப்புகள் ஏற்படுவது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து 1945 ஆகஸ்ட் 15 அன்று சரணடைவதாக ஜப்பான் அறிவித்தது. இரண்டாம் உலகப்போர் பெரும் உயிர்ப்பலிகளுக்கு பின் முடிவுக்கு வந்தது.

Atomic bomb in 1945: A look back at the destruction | Gallery | Al Jazeera

2வது அணுகுண்டு வீசும் அளவிற்கு ஏன் இரக்கமில்லாமல் போனது அமெரிக்காவிற்கு?

வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகள்படி, அமெரிக்கா அணுகுண்டுகளை வீசாமல் இருந்திருந்தால், ரஷ்யப் படையெடுப்பால் நெருக்கடிக்கு உள்ளாகி ஜெர்மனியைப் போல ஜப்பான் சரணடைந்து இருக்கும். அது அதிகார பீடத்தின் மீதான தாக்குதலாக இருந்திருக்குமே ஒழிய, லட்சம் பேர் ஆவியாகி இருக்க மாட்டார்கள் என்று குறிப்பிடுகின்றனர். ரஷ்யாவின் எழுச்சி தனக்கு நெருக்கடியை தரும் என்று என்று அதற்கு அருகில் இருக்கும் ஜப்பான் மீது அணுகுண்டை வீசி எச்சரிப்பு நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

He felt he had to do it': Truman's grandson on bombing Hiroshima | Second  world war | The Guardian

முதல் அணுகுண்டின் பாதிப்புகள், அதன் கொடூர விளைவுகள் எல்லாம் உலகின் மற்ற நாடுகளுக்கு வெறும் செய்திதான்! ஆனால் அமெரிக்கா அதை கண்ணால் பார்த்திருந்தது. அதை வீசிவிட்டு திரும்பிய போர் வீரர்களிடம் அமெரிக்க அதிபர் ட்ரூமேன் பேசியிருந்தார். ஜப்பான் சரணடையவில்லை என்பதால் அடுத்த குண்டை வீச அவர்தான் உத்தரவிட்டார். இன்னும் பல்லாயிரம் பேரைக் கொல்ல உத்தரவிட்டார் என்றே சொல்லலாம். “இது முழுக்க முழுக்க ராணுவ தளவாட நகரம் மீதான தாக்குதல்” என அடிக்கடி வானொலியில் பேசிவிட்டு, லட்சக்கணக்கில் உயிர்களை காவு வாங்கியிருந்தார் ட்ரூமேன். ஜப்பான் ஒருவேளை இன்னமும் பிடிவாதமாக இருந்திருக்கும் என்றால் இன்னும் ஒரு லட்சம் பேரைக் கொல்ல 3வது அணுகுண்டை வீச உத்தரவிட்டு இருப்பார். சமகாலத்தில் இரக்கமின்றி திரிந்த ஹிட்லருக்கும், 2 அணு குண்டுகளை வீசிய அமெரிக்க அதிபர் ட்ரூமேனிற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்க முடியும்? மனிதம் அற்ற மனம் கொண்டிருந்த உங்களை வரலாறு என்றுமே மன்னிக்காது ட்ரூமேன்.!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.